Header Ads



தென்னாபிரிக்க மண்ணில், இலங்கை புதிய சகாப்தம் படைக்குமா..?

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்று வெற்றியிலக்காக 197 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

போர்ட்எலிசபெதில் நேற்றைய தினம் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸுக்காக 222 ஓட்டங்களை பெற்றது.

இதையடுத்து பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 154 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் இலங்கை அணி 68 ஓட்டங்களினால் பின்னடைவை சந்தித்து.

இதையடுத்து 68 ஓட்ட முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி வீரர்களும் இலங்கை அணியின் பந்து வீச்சுகளுக்கு முகங்கொடுக்க முடியாது அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியமையினால், தென்னாபிரிக்க அணி 44.3  ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

மக்ரம் 18 ஓட்டத்துடனும், எல்கர் 2 ஓட்டத்துடனும், அம்லா 32 ஓட்டத்துடனும், பவுமா 6 ஓட்டத்துடனும், டூப்பிளஸ்ஸி 45 ஓட்டத்துடனும், டீகொக் ஒரு ஓட்டத்துடனும், முல்டர் 5 ஓட்டத்துடனும், மஹாராஜ் 6 ஓட்டத்துடனும், ரபடா மற்றும் ஸ்டெய்ன் டக்கவுட் முறையிலும், ஒலிவர் 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க அணித் தலைவர் டூப்பளஸ்ஸி 50 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டிசில்வா 3 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித 2 விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்னாண்டோ ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

இதனால் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 197 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

தென்னாபிரிக்க மண்ணில் இதுவரை ஆசிய கண்டத்தை சேர்ந்த எந்தவொரு அணியும் டெஸ்ட் தொடரை வெற்றிகொண்டிராத நிலையில் இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி இந்த டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டு புதிய சகாப்தம் படைக்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

இந்த அருமையான சந்தர்ப்பத்தை இலங்கை அணி பயன்படுத்தி வரலாற்று சாதனை படைக்குமா அல்லது நழுவ விடுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

No comments

Powered by Blogger.