சதுப்பு நிலங்களைப், பேணி பாதுகாப்போம்
-பரீட் இக்பால்-
உலகின் சதுப்பு நிலங்களின் (wetlands) பாதுகாப்பு பற்றிய சர்வதேச மகாநாடு ஈரானில் ரம்சார் எனுமிடத்தில் 1971 ஆம் ஆண்டு நடைபெற்றது. சுற்றாடல் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு ஆகியனவற்றுடன் தொடர்பான அமைச்சுக்கள், திணைக்களங்கள் ஆகியன இந்த மகாநாட்டில் கலந்துகொண்டன. இலங்கையின் சார்பில் வனவிலங்குப் பாதுகாப்பு திணைக்களம் கலந்து கொண்டது. பெப்ரவரி 2 ஆம் திகதி உலக சதுப்பு நில தினம் (World Wetlands Day) ஆக அனுஷ்டிக்க முடிவு செய்யப்பட்டது.
சதுப்பு நிலத்தை சகதி அல்லது நீர்ப்பரப்பு என்றும் கூறலாம். அது இயற்கையானதாகவோ, தற்காலிகமாக நீரைக் கொண்டுள்ளதாகவோ இருக்கலாம். நீர் நிலையானதாகவோ, ஓடிக் கொண்டிருப்பதாகவோ இருக்கலாம். நீர் நன்னீராகவோ, ஆறு மீற்றர் ஆழத்திற்கு மேற்படாத கடல் நீர்ப்பரப்பை உள்வாங்கிய உவர்நீராகவோ இருக்கலாம்.
இயற்கையாக ஆறுகள், அருவிகள், வெள்ளம் காரணமாக உருவான நீர்ப்பரப்புக்கள், சதுப்பு நிலங்கள், சகதிகள், கழிமுகங்கள், களப்புக்கள் ஆகியன. செயற்கையாக நீர்ப்பாசன குளங்கள். நீர்த்தேக்கங்கள், மின்சார உற்பத்திக்கான அணைக்கட்டுக்கள், உப்பளங்கள் ஆகியனவாகும்.
உலகில் மொத்த நிலப்பரப்பில் 6.4 சதவீதம் சதுப்பு நிலங்களாகும். பலவகை இரசாயனக் கழிவுகளால் மாசடைந்த நீரை இந்த சதுப்பு நில நீர்ப்பரப்புக்கள் சுத்தப்படுத்துகின்றன. அத்துடன் வெள்ளத்தையும் கட்டுப்படுத்துகின்றது. எனவே சதுப்பு நிலங்கள் மனிதனுக்கு இயற்கை வழங்கியுள்ள நன்கொடையாகும். வேகமாக திரண்டு வரும் வெள்ளமானது கரையோரங்களை சேதப்படுத்தாமல் இந்த சதுப்பு நிலங்கள் பாதுகாக்கின்றன. சதுப்பு நிலங்களில் வளரும் புல், பூண்டுகள், நீர்த்தாவரங்கள் ஆகியன வேகத்தை தணிப்பதாகவும் உள்ளன.
இலங்கையில் தாவரங்கள், பிராணிகள் ஆகியனவற்றை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின்படி நிலப்பரப்பில் 13 சதவீதமான பகுதி பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான பறவைகள் வடக்கிலிருந்து தெற்கின் வெப்பவலய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. இவ்வகையான பறவைகள் உயிர்வாழ சதுப்பு நிலங்களை பேணிப்பாதுகாப்பதிலேயே தங்கியுள்ளது. சில சதுப்பு நிலங்கள் தொழிற்சாலைக் கழிவுகளால் பாதிக்கப்படுகின்றன. இலங்கையில் ஓகஸ்ட் தொடக்கம் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் வருடாந்தம் வெளிநாடுகளில் இருந்து பூந்தல தேசிய பூங்காவிற்கு மட்டும் ஏறத்தாழ 22,000 இற்கும் அதிகமான பறவைகள் வந்து போகின்றன. இவ்வகையான பறவைகளில் அதிகமானவை நீண்ட கால்களை கொண்டவையாகும். இவ்வகையான பறவைகள் சதுப்பு நிலங்களில் நடக்கக் கூடியனவாக இருக்கும். வெளிநாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வரும் இவ்வகையான பறவைகள் கரையோரக் களப்புகளிலும் சதுப்பு நிலப்பரப்பிலும் சேற்றிலும் உப்பளங்களிலும் வாழ்கின்றன.
தற்போது உலக நாடுகள் சதுப்பு நிலங்கள் அதாவது நீர்த்தரைப் பரப்புக்கள் குறைந்து செல்லும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றன. ஆதலால் பாரதூரமான அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கிறோம். எமது நாட்டில் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களாக தாவரங்கள் அழிக்கப்படுதல், மரம் வெட்டப்படுதல், நகர்வாசிகள் வசிப்பிடமாக சுவீகரித்தல், விவசாயத்துக்காக பயன்படுத்தல், தொழிற்சாலைக் கழிவுகள் குவிக்கப்படுதல், கால்நடைகளால் சிதைக்கப்படுதல், மிதமிஞ்சிய மீன்பிடிப்பு ஆகியன காணப்படுகின்றன. எமது செயற்பாடுகள் நீர்த்தரைகளை அதாவது சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கு முரண்பட்டவையாக காணப்படுகின்றன. எமது நாட்டின் மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் என்பன ஒன்றுசேர்ந்து சதுப்பு நிலங்களை பாதுகாப்பதில் அக்கறை செலுத்தி வருகின்றன. உலக சதுப்பு தினமான இன்று சதுப்பு நிலங்களை அதாவது நீர்ப்பரப்புக்களை பேணிப் பாதுகாப்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
Post a Comment