பசில், திமிர் பிடித்தவரா...?
ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்று எண்ணும் திமிர்பிடித்த சிலர் தமது தரப்பில் இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை ஏற்படுத்துவதை எதிர்க்கும் சிலரும் இருக்கின்றனர். தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின் இணைத்துக்கொள்ள வேண்டிய அனைவரையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.சிலருக்கு இது புரியவில்லை.
தனித்து வெற்றி பெற முடியும் என திமிருடன் சிந்தித்தால், பெற வேண்டிய வெற்றியை பெற முடியாமல் போகும். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெல்லலாம் என நினைப்பது எதிரியின் தேவையை நிறைவேற்றுவது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட வேண்டும் என்பதே நாட்டில் வாழும் பெரும்பாலான மக்களின் பிரார்த்தனையாக இருந்து வருகிறது. மக்களின் கோரிக்கையை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவங்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் அந்த கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவையே திமிர்பிடித்தவர்கள் என்று விமர்சித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணையும் கூட்டணி சம்பந்தமாகவும் கோத்தபாய - பசில் இடையில் இருந்து வரும் மோதல்கள் இதற்கு காரணம் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
Post a Comment