புதிய கூட்டணி தொடர்பில் கலந்துரையாடல்
(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஏனைய சில கட்சிகள் இணைந்து அமைக்கவுள்ள புதிய கூட்டணி தொடர்பிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ , தினேஷ் குணவர்தன, இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, எஸ்.பி.திஸாநாயக்க , மஹிந்த அமரவீர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க கேசரிக்கு தெரிவிக்கையில்,
புதிதாக அமைக்கப்படவுள்ள கூட்டணிக்கான யாப்பு தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அத்தோடு புதிய கூட்டணிக்கான கொள்கை தயாரிப்பும் நிறைவடைந்துள்ளன. தயாரிக்கப்பட்டுள்ள யாப்பு மற்றும் கொள்ளைகள் என்பவற்றை மீள ஆராய்ந்து அவற்றை இறுதிப்படுத்துவதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அந்த பணிகள் நிறைவடையும். அத்தோடு அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
நாட்டின் தேசிய வழங்களை விற்றல், வெளிநாடுகளுடனான ஒப்பந்தம் போன்ற அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
புதிய கூட்டணிக்கான தலைமைத்துவம் பற்றி பல்வேறு தரப்பினராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைவராக நியமித்து மஹிந்தராஜபக்ஷவை தவிசாளராக நியமிப்பதற்கான யோசனைகளும் இதன் போது முன்வைக்கப்பட்டது. எனினும் அது குறித்து இறுதி தீர்மானம் எதுவும் முன்னெடுக்கபடவில்லை. எவ்வாறிருப்பினும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களுக்கு
முன்னர் புதிய கூட்டணி அமைத்து தேர்தலில் பாரிய வெற்றியினை ஈட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
Post a Comment