ஏறாவூரில் உடனடியாக, இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு
மட்டக்களப்பு - ஏறாவூர் மாடுகளில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் காரணமாக ஏறாவூரில் உடனடியாக இறைச்சிக் கடைகளை மூடுமாறு சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் இன்று -27-உத்தரவிட்டுள்ளார்.
ஏறாவூரில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் கீழ் வரும் சகல கொல்களங்களையும், மாட்டிறைச்சிக் கடைகளையும் இரு வாரங்களுக்கு மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது விடயமான பணிப்புரையை உடனடியாக அமுல்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஏறாவூர் நகர சபைக்கும் ஏறாவூர் பற்றுப்பிரதேச சபைக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி ஏறாவூர் நகர சபைப் பிரிவில் உள்ள 14 இறைச்சிக் கடைகளும் இன்று தொடக்கம் அடுத்து வரும் இரு வாரங்களுக்கு மாட்டு இறைச்சியை விற்பனை செய்ய முடியாது.
அதேபோன்று ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைப் பிரிவின் கீழ் வரும் 9 மாட்டிறைச்சிக் கடைகளுக்குமாகவும் இந்த உத்தரவை அமுல்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், இந்த உத்தரவு ஆட்டிறைச்சிக் கடைகளுக்கும், கோழி இறைச்சிக் கடைகளுக்கும் விடுக்கப்படவில்லை.
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் ஏறாவூர் நகர சபைச் செயலாளருக்கும் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபைச் செயலாளருக்கும் நேற்று இந்த அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள தொற்றுக்கள் காரணமாக அதிகளவான மாடுகள் இறந்து கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது.
நோய்த் தொற்றுக்களுக்குள்ளான மாடுகள் கொல் களத்திற்கு வருகின்ற சந்தர்ப்பத்தில் அவை பொதுச் சகாதாரப் பரிசோதகர்களினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றவை என நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்ட விடயங்கள் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளன.
மாடுகளுக்குத் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதனால் பொது மக்களின் நுகர்வுக்குத் தரமான, பாதுகாப்பான மாட்டிறைச்சி உணவை வழங்குவதில் சிரமங்கள் ஏற்படலாம்.
எனவே, வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் இரு வாரங்களுக்கு கொல் களங்ளை மூடி விடுவதற்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment