உவைஸ் அல்கரனி (ரஹ்) - தாய் அன்புக்கு உண்டோ பிரதி உபகாரம்...??
சூரியன் மெல்ல எழுந்து மிதமாக கதிர்களை பரப்பிக் கண்டிருக்கும் இள நேரம் , ரேடியோவில் ஒலி பரப்பாகிக் கொண்டிருக்கும் காலை நேரச் செய்தியறிக்கையை குழப்பும் வகையில் மொபைல் அலறுகிறது. பக்கத்து சீட்டிலிருந்ததை எடுத்துப் பார்த்த போது
HOSPITAL CALLING. …...📲
“Good morning This is Ivo. . Can I have few minutes please”
“good morning, Yes you can.”
“I am really sorry to disturb you at this time. You know the child with Metabolic disorder just passed away at early hours of this morning, but when the the registrar ayya broke the bad news to mother …. Mmm she has collapsed in the ward and now he is attending…
he wants your opinion for further management”.
“OK. I am on the way. Tell him to contact the medical ward and arrange the transfer. I'll will be there in five minutes.”
என்ன செய்ய இந்த நாள் ஆரம்பித்தது இந்த மரணச் செய்தியுடன் தான். இறந்து போன இந்தக் குழந்தை வாட்டிலே மயங்க விழுந்த தாயின் நான்காவது குழந்தை. ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இதே வகை நோயினால் முறையே 5 வயதிலும் ,3 வயதிலும் இறந்து விட்டன. மூன்றாவது குழந்தை ஆறரை வயது, இது வரை எந்தப் பிரச்சினையும் இன்றி நல்ல தேகாரோக்கியமாக வளர்ந்து வருகிறது. அந்த நம்பிக்கையில்தான் இந்த நான்காவது குழந்தையை அவர்கள் பெற்றெடுத்தனர், அவர்களது துரதிர்ஷ்டம் பிறந்து சில மாதங்களிலே இந்தப் பிள்ளையும் நோய் அறிகுறிகளை காட்டத் தொடங்கி விட்டது. அன்றைய தேதியில் இருந்து இந்த பிள்ளையும் தனது முன்னைய பிள்ளைகள் போல மிக விரைவில் இறந்து விடும் என்பது இவவுக்கு நன்றாக தெரியும். இந்தப் பிள்ளையை வளர்ப்பதனால் எந்த இலாபமும் இல்லை என்பதும் தெரியும். இன்னும் சொல்லப் போனால் இந்தப் பிள்ளையும் தனது முந்தைய இரு பிள்ளைகள் போலவே கட்டிலோடு ஆகி மல சலம் போவது கூட தெரியாத நிலையில் தனக்கு தாங்கொணா கஷ்டத்தை தரப் போவது்ம் தெரியும். இருந்தும் இந்தப் பிள்ளையை கவனிப்பதில் கொஞ்சமும் அவள் மனம் கோணவில்லை. இந்தப் பிள்ளையின் மீதான அவளது அன்பும், பரிவும், பாசமும் அளவிட முடியாதவை. இவை சாதாரண பிள்ளைகளுக்கு கிடைப்பதை விட ஒரு படி அதிகமாகவே இந்த பிள்ளைக்கு கிடைத்தது என்று சொல்லும் அளவுக்கு அவளது கவனிப்பு இருந்தது. இப்படி இவ்வளவு அன்பு காட்டியதன் காரணமாக இந்த மரணத்தை தாங்கிக் கொள்ள அந்தத் தாயினால் முடியவில்லை. அது தான் மயங்கி விழக் காரணம்.
இறப்பு என்பது எப்பொழுதும் கவலையானது அதுபோல சில நேரங்களில் தவிர்க்க முடியாததும் கூட. ஒரு வைத்தியருக்கு தனது பராமரிப்பின் கீழ் உள்ள ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை உடனே உறவினர்களிடம் சொல்லுவது மிகக் கஷ்டமான ஒன்று. அதிலும் சிறுகுழந்தை வைத்தியத்தில் குழந்தை இறந்து விட்டது என்பதை பெற்றோர்களிடம் சொல்வதென்பது மிகவும் கஷ்டமான ஒரு காரியம். இதை மருத்துவ பரி பாஷையில்” breaking bad news” என்று சொல்லப்படும் . இதற்கு நிறைந்த மன தைரியமும், அனுபவமும், முறையான பயிற்ச்சியும் மிக அவசியம். ஏனெனில் ஏக்கத்துடனும், தவிப்புடனும் எதிர்பார்ப்புடனும் உள்ள தாயிடத்தில் அவளது குழந்தை இறந்து விட்டது என்ற செய்தியை முதன்முதலில் சொல்லுவது இலேசுப்பட்ட காரியமா என்ன? .
சில குழந்தைகள் பிறக்கின்ற போதே பல்வேறு குறைபாடுகளுடன் பிறக்கின்றன. சில பிள்ளைகள் அங்கவீனமாக பிறக்கின்றன, இன்னும் சிலர் மூளை வளர்ச்சி குறைந்தவர்களாக, இருதயத்தில் ஓட்டை விழுந்தவர்களாக பிறக்கின்றனர். இப்படி தீர்க்க முடியாத, சிகிச்சை செய்து காப்பாற்ற முடியாத இவ்வாறான குழந்தைகள் பிறந்து சில நாட்களிலேயே வைத்தியர்களினால் அவர்களது பெற்றோர்களுக்கு இது பற்றி அறிவிக்கப்படும். இந்தக் குழந்தைகள் இன்னும் ஓரிரு மாதங்கள் அல்லது ஓரிரு வருடங்கள் உயிர் வாழும் என்ற கவலையான கால தவணையும் சொல்லப்படும். அவ்வாறான குழந்தைகள் சிலவேளைகளில் வைத்தியசாலைகளில் வேறு நோய்களுக்காக அனுமதிக்கப்படுகின்ற போது சிகிச்சைகள் பலனின்றி பெரும்பாலும் இறந்து விடுகின்றன. இந்த நிலையில் அந்த பெற்றோர் குழந்தை பிறந்ததிலிருந்து இந்த குழந்தை இறந்துவிடும் என்று சொல்லி ஏற்கனவே சொல்லப்பட்ட அந்த குழந்தையின் பெற்றோர் படும் கஷ்டங்கள், படுகின்ற கவலைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. இந்த குழந்தை இறந்துவிடும் என்று தெரிந்தும் அவர்கள் காட்டுகின்ற அன்பும் பரிவும் பாசமும் அளவில் மிகப்பெரியவை . ஏனோ தெரியவில்லை தாய்ப் பாசம் என்பது இவ்வாறான குழந்தைகளுக்கு மிக அதிகமாகவே கிடைக்கின்றது. இவ்வாறு அங்கவீனமாகி, மூளை வளர்ச்சி குன்றி பிறந்த குழந்தைகளை கவனிப்பதற்காகவே தங்களது தொழிலை துறந்த தாய்மார்களை, தங்களது கணவனை விட்டுப் பிரிந்த தாய்மார்களை, இன்னுமொரு குழந்தையை பெற்று கொள்ளுவதை தள்ளிப்போடும் தாய்மார்களை நிறையவே நான் கண்டிருக்கின்றேன். அவர்கள் மிகவும் ஆச்சரியமானவர்கள். இந்தக் குழந்தைகள் தான் தமது வாழ்கை என்ற நிலையில் அவர்கள் காட்டுகின்ற பாசம் உண்மையிலே அளவிட முடியாதது. அது போல் தான் அவர்கள் படுகின்ற கஷ்டமும் . இதை எழுதிக் கொண்டிருக்கும் போது நான் காலாண்டு சஞ்சிகை ஒன்றுக்காக தயார் படுத்திய பின்வரும் வரலாற்றுச் சம்பவத்தோடு அப்படியே என் மனம் லயித்து விட்டது.
மதீன மா நகரில் ஒரு நாள். ….
மக்கள் குறை தீர்க்கும் ஆட்சியாளர், நீதி வழுவா செம்மல் என எல்லோராலும் போற்றப்பட்ட அந்த தலைவனின் சபைக்கு ஒரு பயணிகள் கூட்டம் கொண்டு வரப்படுகிறது.
“அமீரும் மூஃமினீன், நீங்கள் வெகு நாளாய் தேடிக் கொண்டிருக்கும் அவர்கள் வந்திருக்கிறார்கள்” என்ற செய்தி எத்தி வைக்கப்படுகிறது.
“ ”.
“நீங்கள் தான் யமனிலிருந்து வந்த கூட்டமா?”
“ஆமாம் அமீருல் மூஃமினீன்”
“ உங்களிடையே உவைஸ் இப்னு ஆமிர் இருக்கிறாரா?”
இப்போது யமன்வாசிகளிடம் பயம் தொற்றிக் கொள்கிறது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். நிஷப்தத்தை உடைத்து கொண்டு ஒரு மெலிந்த, ஏழ்மையின் சாயல் படிந்த உருவம் எழுந்து நிற்கிறது.
“ நீர்தான் உவைஸ் இப்னு ஆமிரா” ?.
“ஆம் நான் தான் உவைஸ்”
‘’முராத்’ கோத்திரத்தையும் ‘கரன்’ கிளையையும் சேர்ந்தவரா?”
“ஆமாம் “.
“ உங்களுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு அதில் ஒரு திர்ஹம் அளவு அடையாளம் தவிர மற்றவை குணமாகிவிட்டதா?
‘‘ஆம் இறையருளால் அப்படியே’’
“உமக்கு தாயார் இருக்கிறாரா?”
‘ஆம் நிச்சயமாக “
“ யா உவைஸ் அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் :
“யமன்வாசிகளின் உதவிப்படையினருடன் ‘முராத்’ கோத்திரத்தையும் ‘கரன்’ கிளையையும் சார்ந்த உவைஸ் இப்னு ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார்; அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு பின்னர் ஒரு திர்ஹம் அளவு (அடையாளம்) தவிர மற்றவை குணமாயிருக்கும்; அவருக்கு தாயார் ஒருவர் இருப்பார்; அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார்; அவர் அல்லாஹ்வின்மீது சத்தியமிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காக பாவமன்னிப்புக் கோரி பிரார்த்திக்க வாய்ப்பு கிட்டினால் அவரை பிரார்த்திக்க சொல்லுங்கள்!
“ மை டியர் பிரதர் உவைஸ்! அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளபடி எனக்காக பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள்” என்ற வேண்டுதலை, கோரிக்கையை முன்வைத்தார் சுவர்கவாதி என ஏலவே நற்சான்றளிக்கப்பட்ட கலீபா உமர்.
அவ்வாறே உவைஸுல் கர்ணி (ரஹ்) அவர்களும் உமர்(ரலி) அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள்.
பிரார்த்தனை முடிந்ததும் ஆரத்தழுவி “ நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?” என்று வினவினார்கள் இனி நபி வருவதாக இருந்தால் அது உமராகத்தான் இருக்கும் என்று போற்றப்பட்ட மிகப்பெரும் நபித் தோழர்.
“கூஃபாவிற்கு” என்று பதிலளித்தார் உவைஸ்.
“ அப்படியானால் கூஃபாவின் கவர்ணரிடம் உமக்காக பரிந்துரைத்து கடிதம் ஒன்று தருகிறேன்” என்றார் உமர்.
” வேண்டாம் அமீர்! சாதாரன மக்களில் ஒருவனாக நான் இருப்பதே எனக்கு விருப்பமானதாகும்” என்று கூறி அவ்விடத்தை விட்டும் நகர்ந்தார் உவைஸுல் கர்ணி.
முஸ்லிம் கிரந்தத்தில் வரும் 2542 ஹதீஸை அடியொற்றி எழுதப்பட்ட இந்த வர்ணனை நிறைய விஷயங்களை நமக்கு சொல்கிறது.
உவைஸ் அல்கரனி (ரஹ்) அவர்கள் நபிகளின் காலத்தில் வாழ்ந்தபோதும் நபி அவர்களை ஒரு நாளும் சந்தித்ததில்லை. அதனால் தான் இன்று வரை ரழி அல்லாஹு என்று அழைக்கப்படாமல் ரஹ்மஹுமுல்லாஹ் என்றே அழைக்கப்படுகிறார்கள். ஸஹாபிகளில் ஒருவர் என போற்றப்பட வேண்டியவர் நபிகளாரை சந்திக்காத அந்த ஒரு காரணத்தால் தாபீயீன்களில் ஒருவராக வரலாற்றில் எழுதப்பட வேண்டியதாகிவிட்டது. இதற்கு ஒரே ஒரு ஒற்றைக் காரணம் அவர்கள் தாயாருக்கு பணிவிடை செய்வதில் மிகவும் போற்றத்தக்கவகையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது தவிர வேறெதுவும் இல்லை. உவைஸ் அல்கர்னி(ரஹ்) அவர்களுக்கு கிடைத்த இந்த மாபெரும் சிறப்பிற்கான, அந்தஸ்திற்கான காரணம் தாயாருக்காக ,அவரது கவனிப்புக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டது தான் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படாது .
எல்லையில்லா, எதிர்பார்ப்பு இல்லா தாயன்புக்கு பிரதி உபகாரம் செய்த ஒருவருக்கு இப்படி ஒரு சிறப்பு கிடைக்கத்தானே வேண்டும் என்பது எவ்வளவு யதார்த்தமானது.
Dr PM. Arshath Ahamed MBBS MD PEAD
Senior Registrar in Peadiatric
Lady Ridgeway Hospital for Children
உவைஸ் அவ் கர்ணி ரஹ் அவர்களின் அடக்கஸ்தலம் ஓமானின் சலாலா ,(ஜபல் ஐயூப் செல்லும் வழியில்)என்ற இடத்தில் ஜபல் சம்ஸ் , ஐன் கர்ஸீஸ் என்ற மலையடிவாரத்தில் இருக்கிறது, இந்த சலாலா பிரதேசம் முன்னர் யெமனின் ஒரு பகுதியாகும்
ReplyDelete