ரணிலுடன் இணங்கிச்சென்றால் எதனையும், சாதிக்கலாம் என தமிழ்த் கூட்டமைப்பு எண்ணுகிறது - மஹிந்த
தாம் ஆட்சிக்கு வந்தால் அரசியல் கைதிகளில் பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களுக்கு நீதிமன்ற தண்டனை வழங்கப்பட்டு ஏனையவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமது விஜயராமய வீட்டில் இன்று -05- காலை தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே மஹிந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமன்னிப்பு வழங்கப்படும்போது இரண்டு தரப்புக்கும் அது பொதுவானதாக இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது எதிர்கால ஆட்சியின்போது தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படும்.
அவர்கள் அதிலிருந்து விலகி சென்றால், தமிழ் மக்களுடன் நேரடியாக பேசி இனப்பிரச்சினைக்கு தீர்வு எடுக்கப்படும் என்றும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறானதாக இருக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், பேச்சுவார்த்தையின் மூலம் அதற்கான இணக்கப்பாடு எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை முறிவடைந்தமைக்கு அந்தக் கட்சியே காரணமாகும்.
அரசமைப்பை பொறுத்தவரையில் அது தீர்க்கமான கலந்துரையாடல்களின்மூலம் கொண்டு வரப்படவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் நினைப்பதைப்போன்று அவசரமாக அதனை கொண்டு வரமுடியாது என்றும் அவர் கூறினார்.
ரணிலுடன் இணங்கிச்சென்றால் எதனையும் சாதித்து விடலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எண்ணுகிறது.
எனினும் அதனால் பயன் இல்லை என்பதை அந்தக் கூட்டமைப்பு தற்போது உணர்ந்திருக்கிறது என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
தாம் பொதுஜன பெரமுனவில் உறுப்பினர் நிலையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட அவர் தாம் விண்ணப்பத்தை மாத்திரமே கையளித்ததாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பல்வேறு பெயர்கள் பிரேரிக்கப்பட்டபோதும் உரிய நேரத்தில் தாம் வெற்றிப்பெறக்கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவுள்ளதாக மஹிந்த கூறியுள்ளார்.
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கருத்துரைத்த அவர் தொழிற்சங்கங்கள் தம்முடன் அது தொடர்பாக பேசியபோது 1000 ரூபா மொத்த சம்பளத்தையே முன்வைத்தன.
1000 ரூபா அடிப்படை சம்பளத்தை அந்த தொழிற்சங்கங்கள் முன்வைக்கவில்லை என்று மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறியுடன் தொடர்புடைய அர்ஜூன் அலோசியஸ் தமது மகனின் திருமணத்துக்கு வந்தமை தமக்கு தெரியாது. அவருக்கு தாம் அழைப்பிதழ் வழங்கவில்லை என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
Post a Comment