எச்.பி.வி. தடுப்பூசித் திட்டத்தை, ஆதரிக்க அதிபர்கள் தயக்கம் - ஒத்துழைப்பு நல்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை
பாடசாலை மாணவிகளுக்கு பபில்லோமா வைரஸ் (எச்.பி.வி.) எனும் தடுப்பூசி போடும்; திட்டத்தை, கொழும்பிலுள்ள தேசிய பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள் ஆதரிக்கத் தயக்கம் காட்டுவதாக, சுகாதார மேம்பாட்டுச் சபையின் பணிப்பாளர், வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிகளவான பெண்கள் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, அதற்கு அடுத்தபடியாக கர்ப்பப்பை புற்றுநோயினாலும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படி தடுப்பூசி போடும் நடவடிக்கையானது 11 வயதுக்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளுக்கு மேற்கொள்ளப்படுகின்றது. எனவே, ஆபத்தான சூழ்நிலையிலிருந்து பெண் பிள்ளைகளை பாதுகாப்பதற்கு பெற்றோர் முன்வர வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக புற்றுநோய்த் தினத்தையொட்டி, இலங்கை மருத்துவச் சங்கத்தில்
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் நோக்கில், எச்.பி.வி. எனும் தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், கடந்த 2018ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் புற்றுநோயினால் 29 ஆயிரத்து 843 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment