மொஹமட் ஷிராஷூம் இலங்கை, குழாத்தில் பெயரிடப்படுவதற்கான வாய்ப்பு
கடந்த காலங்களில் இலங்கை அணி அடைந்த தோல்விகளை கருத்திற்கொண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் அணித்தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இது தொடர்பிலான உறுதியான தகவல்களை வெளியிடவில்லை.
இலங்கை அணியின் தலைவரான தினேஸ் சந்திமால் தான், இறுதியாக விளையாடிய 10 இன்னிங்ஸ்களிலும் ஒரேயொரு அரைச்சதத்தை மாத்திரம் பதிவு செய்துள்ளார்.
இதன் காரணமாகவும் கடந்த காலங்களில் இலங்கை அணி அடைந்த தோல்விகளை கருத்திற்கொண்டும் தினேஸ் சந்திமாலுக்கு ஓய்வளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.
நேற்று நிறைவுக்கு வந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஷேன் வோர்ன் – முரளிதரன் வெற்றிக் கிண்ணத்தையும் இலங்கை அணி 2 – 0 என தாரைவார்த்தது.
ஷேன் வோர்ன் – முரளிதரன் வெற்றிக் கிண்ணத்தின் 2 டெஸ்ட் போட்டிகளின் 4 இன்னிங்ஸ்களிலும் தினேஸ் சந்திமால் 15 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலேயே தினேஸ் சந்திமால் இலங்கை அணிக்காக இறுதியாக அரைச்சதமொன்றை பதிவு செய்திருந்தார்.
எவ்வாறாயினும், இம்மாதம் 13 ஆம் திகதி தென்னாபிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தினேஸ் சந்திமாலுக்கு ஓய்வளிக்கப்படும் பட்சத்தில் தற்போதைய உப தலைவரான திமுத் கருணாரத்ன இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்படுவார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன.
இந்த ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்தில் அவிஸ்க பெர்னாண்டோ, கமிந்து மென்டிஸ், உபுல் தரங்க, தலைவரான ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோர் பெயரிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயர்லாந்து ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் அவர்கள் வெளிப்படுத்திய ஆளுமைகளுக்கு அமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முதல்தர கிரிக்கெட் தொடரில் கொல்ட்ஸ் கழக அணிக்காக விளையாடும் துடுப்பாட்ட வீரரான மொஹமட் ஷிராஷூம் இலங்கை குழாத்தில் பெயரிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் நிலவுகின்றன.
Post a Comment