Header Ads



அம்பாறை - கண்டி கலவரங்களினால், நாட்டுக்கு கறுப்புப்புள்ளி ஏற்பட்டுள்ளது - சபாநாயகர் கரு

யாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப்  பெரிய துரோகமாகும். ஜனநாயகத்தைப் பாதுகாத்தது தொடர்பாக உலக நாடுகளின்  கெளரவம் எமக்குக் கிடைத்துள்ளது. அந்த வகையில் நாம் பெருமை அடைகிறோம்.  இந்த நாட்டின் அடுத்த பரம்பரையினருக்கு வழங்கக்கூடிய பெரிய நன்கொடை ஜனநாயகம் ஆகும்  என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.  

தெற்கு அதிவேக வீதியின் நுகதுவ நுழைவாயிலுக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மாநாட்டு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

தொடர்ந்து சபாநாயகர் அங்கு உரையாற்றுகையில், நாம் செய்கின்ற பணிகள் சரியானது  என எமக்குத் தெரியும். என்றோவொருநாள் உண்மை வெற்றி பெறும். நியாயமற்ற விமர்சனங்களுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அது எமக்குப் பிரச்சினை இல்லை. அதனால் உண்மை ஒரு நாள் வெளிவரும்.  

எமது நாடு  சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் கைகோர்த்ததனால்  எமது நாடு சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. அதனைப் பாதுகாப்பதே எமக்குறிய பொறுப்பு ஆகும். குறுகிய இன மற்றும் மத வாதங்களை தூண்டி விட்ட சந்தர்ப்பங்களையும் நாம் கண்டுள்ளோம்.

அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் ((முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களினால்)) எமது நாட்டுக்கு ஏதோ ஒருவகையில் ஒரு கறுப்புப்புள்ளி ஏற்பட்டுள்ளது.  

எனினும் சமயத் தலைவர்களின் மத்தியஸ்தத்தின் மூலம் 72மணித்தியாலங்களுக்குள் அந்த நெருப்பை அணைக்க முடிந்தது.  

எமது நாட்டு நீதித்துறை சர்வதேச மட்டத்தில் தற்போது  ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதனால் வெளிநாடுகளில் எமது நாட்டு வழக்குகளை விசாரிக்க வேண்டும் என யாரும் கோரமுடியாது. அந்த கெளரவம்  எமக்குக் கிடைத்துள்ளது. சுயாதீன ஆணைக்குழு மற்றும் மனித உரிமை ஆணைக்குழு என்பன இன்று உலகில் உயர்ந்த ஆணைக்குழுக்களாக கருதப்படுகின்றன என்றார்.

No comments

Powered by Blogger.