Header Ads



பெப்ரவரி மாதம் முதல்நாள், உலக ஹிஜாப் தினம்

பெண்கள் தங்களை முழுமையாக மறைத்துக் கொள்ளும் பர்தாவுக்கு எதிராக மொத்த பெண்ணியவாதிகளும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்.

பிரான்ஸ் என்ற நாட்டில் பர்தாவுக்கு தடை சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா தொடக்கக் காலம் தொட்டே இஸ்லாத்திற்கு எதிராக வரிந்துக் கட்டிக் கொண்டு நிற்கின்றது. அமெரிக்காவில் புர்காவிற்கு தடையில்லை. ஆனால் புர்கா அணிந்து செல்லும் பெண்கள் கடுமையான கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள்.

அவர்கள் பயணிக்கும் பேருந்துகள், அவர்கள் கல்வி கற்கும் கல்விக் கூடங்கள், கல்லூரிகள், பணி செய்யுமிடங்கள், இப்படி அங்கிங்கெனாதபடி எங்கும் கெடுபிடிகள். குரூரம் நிறைந்த வார்த்தைகளைக் கொட்டி அவர்களின் இதயங்களை குத்திப் பிளப்பது, அவர்களை நிலைகுலையச் செய்வது என ஹிஜாப் அணிந்த பெண்களின் வாழ்வை ரணமாக்கி வந்தார்கள்.

இதையெல்லாம் தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட பெண்மணி தான் நஸ்மா கான்.

அமெரிக்காவை வசிப்பிடமாகக் கொண்ட இந்த நஸ்மா கான், 9/11 என அடையாளப்படுத்தப்பட்ட அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்ப்பிற்கு பின், எதிர்கொண்ட ஏளனங்களும் ஏகடியங்களும் ஏராளம்! தாராளம்!!

இவையெல்லாம் பெரும் அதிர்வுகளை அந்த சகோதரியிடம் ஏற்படுத்தினாலும், அவர் மனம் சோர்ந்து போகவில்லை. எழுந்து நிற்பது என்றும் எதிர்த்து போராடுவது என்றும் முடிவு செய்தார்.

நாள் ஒன்றை தேர்ந்தெடுத்து அதை ஹிஜாப் நாள் என அறிவித்தாள். அந்த நாள் பிப்ரவரி 2013ஆம் ஆண்டில் தொடங்கி அதனை இன்றளவும் திறம்பட நிறைவேற்றி வருகின்றார்.

இந்த உலக ஹிஜாப் தினத்தின் முக்கியக் கூறுகள் “ஹிஜாப் (என்ற பெண்களின் உடலை முழுமையாக மறைத்திடும் ஆடையை) அணியும் பெண்கள், இந்த ஹிஜாப் நாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆடைதான். யாரும் எங்கள் மீது இதை திணித்திடவில்லை. இது எங்கள் உரிமை. இதில் தலையிட யாருக்கும் அனுமதியில்லை” என்பதை உரக்க முழங்கிட வேண்டும்.

ஹிஜாப் தான் பெண்களின் பெருமையையும் கண்ணியத்தையும் பேணுவது, காப்பது, என்பதை உலகம் அறிந்திட செய்திட வேண்டும்.

பிப்ரவரி ஒன்று - இந்த உலக ஹிஜாப் நாளில், இதர மத நம்பிக்கைகளைக் கொண்ட பெண்களும் ஹிஜாப் அணிந்து, எங்களுடன், தங்கள் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் காட்டிட வேண்டும். அதன் மூலம் பெண்கள் தங்கள் உடலை முழுமையாக மறைப்பதின் முக்கியத்துவத்தை உலகறிந்திட செய்திட வேண்டும்.

இதர மத நம்பிக்கையை உடையவர்கள், உலக ஹிஜாப் நாள் அன்று ஹிஜாப் - ஐ அணிந்து வெளியே வரும் போது பல அனுபவங்கள் ஏற்படும் அதில் ஒன்று ஹிஜாப் அணிந்த பெண்கள் படும் அல்லல்களை அனுபவ ரீதியாக, உணர்வார்கள். இதனால் ஹிஜாப் அணிந்த பெண்களை ஏளனம் செய்பவர்களுக்கு எதிராக அணிதிரளும் பெண்களின் எண்ணிக்கை பெருகும். இந்த ஏளனங்கள் இப்போது குறையும், பின்னர் ஒரு முடிவுக்கு வரும்.

இந்த நாளை நாமும் ஹிஜாப் நாளாக அனுஷ்டிப்போம். உலக மங்கைகளுக்குக் கண்ணியமான ஆடைகளை அணிந்திட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவோம்.

-“மஜ்லிசு நிசா”. சென்னை.

சாதனை மங்கை நஸ்மாகான் அவர்களின் முயற்சிகள் 2013ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றவை. இந்த முயற்சிகள் பலவிதமான அனுபவங்களைப் பெற்றுத் தந்துள்ளது.

பல பெண்கள் - சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இந்த நாளில் ஹிஜாப் அணிந்து, ஹிஜாப்பிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

இந்த ஒரு நாளில் ஹிஜாப் அணிந்து பின்னர் வாழ்க்கை முழுவதும் ஹிஜாப் அணிந்து வாழும் சகோதர சமுதாயத்து பெண்கள் பலர். இவர்களில் சிலர் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள்.

இந்த வருடம் உலக ஹிஜாப் நாளில் பிப்ரவரி 1இல் நியூ மெக்ஸிகோ பல்கலைக் கழக மாணவிகள் கலந்து கொள்வதாக முடிவெடுத்துள்ளார்கள். சென்ற ஆண்டும் இந்தப் பல்கலைக் கழக மாணவிகள் பெருவாரியாகக் கலந்து கொண்டார்கள்.

முஸ்லிம் மாணவிகள், சகோதர சமுதாயத்தைச் சார்ந்த மாணவிகளை ஹிஜாப் அணிய செய்து செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் போடச் செய்கிறார்கள்.

ஹிஜாப் அணிந்த சார ரிவாலி என்ற முஸ்லிமல்லாத பெண்மணி “நான் ஹிஜாப் - இல் மிகவும் அழகாக இருக்கின்றேன் என்று மகிழ்ச்சிடைகிறாள்.

இந்த வருடம், சென்ற வருடத்தைப் போல் வெர்ஜினியா எனுமிடத்தில் உள்ள புரூஃபீல்டு கல்லூரி மாணவிகளும் இதில் கலந்து கொள்ள உள்ளார்கள்.

நன்றி: வைகறை வெளிச்சம் (பிப்ரவரி.2019) இதழ்

1 comment:

  1. ஹிஜாப் - தலை முடியையும் நெஞ்சையும் மறைப்பது.
    நிகாப், புர்கா ஆகியன முகத்தை மூடியிருக்கும் ஆடை.
    பர்தா - தலை முடி, நெஞ்சு மற்றும் கைகளை மறைப்பது.
    அபாயா - முகம் கரங்கள் தவிர்ந்தவற்றை மறைப்பது.

    பெண்களின் ஆடை விடயத்தில், மேலே சொல்லப்பட்ட சுருக்கமான விளக்கங்கள் சரியென்றால், இஸ்லாமிய போதனைகளுக்கு மிக நெருக்கமானது அபாயா எனப்படும் ஆடையாகும்:

    இவர்கள் அந்நிய ஆண்களை முகங்கொள்ள நேரிடும்போது, தம் பார்வையைத் தாழ்த்திக் கொள்வர்.

    தம் அழகலங்காரங்கள் வெளியே தெரியாதவாறு  ஆடைகளால் தம்மை மறைத்து கண்ணியமான பெண்களென அறியப்படக் கூடியவர்கள்.

    தமக்கு எதிர்ப்படும் பெண்கள் மீது ஸலாம் சொல்லக் கூடியவர்கள்.

    பொன்னகையாக புன்னகையை தர்மமாகச் சொரியக்கூடியவர்கள், சகோதரத்துவத்தை வளர்க்கக் கூடியவர்கள்.

    இன்முகம் காட்டிப் புன்முறுவல் பூத்து இதர நம்பிக்கை கொண்ட பெண்களோடும் அன்பையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியவர்கள்.

    அவர்களுக்கும் சொந்தமான இந்த அழகான மார்க்கத்தை அறிமுகப்படுத்தக் கூடியவர்கள்.

    முகத்தை மூடிக்கொண்டு இருப்பவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள அகக் காயங்களை அகற்றக் கூடியவர்கள்.

    பெண்களே சிந்தியுங்கள், நீங்கள் "ரஹ்மத்துல் ஆலமீன்'  ஆன -  அகிலத்துக்கோர் அருட்கொடையான அல்லாஹ்வின் இறுதித் தூதர் காட்டிக் தந்த கருணை மயமான இந்த புனித இஸ்லாத்தை உங்களோடு மட்டும்  வரையறுத்துக் கொள்ளாதீர்கள்.

    முகத் திரை முழுக் காலத் திரையும் அல்ல; முஸ்லிம்களை வேட்டையாட இரையும் அல்ல.

    ReplyDelete

Powered by Blogger.