இலங்கையின் சுதந்திரத்தின் வயது 71, சிறுபான்மையினரின் சுதந்திரத்தின் வயது...?
- பரீட் இக்பால் -
இலங்கையின் 71ஆவது சுதந்திர தின விழா இன்று காலை பெப்ரவரி 4ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் கொழும்பு,காலி முகத்திடலில் இடம்பெறுகிறது. இந் நிகழ்வில் விசேட அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ஸாலிஹ் அவர்களும் பாரியாரும் கலந்து கொள்ளுகிறார்கள்.
ஆங்கிலேயரிடமிருந்து நாட்டை மீட்பதற்காக இலங்கையர் அனைவரும் இன மத மொழி பேதமின்றி முயற்சி செய்துள்ளனர். சிங்களவர்கள், தமிழர்கள். முஸ்லிம்கள் ஆகியோர் இணைந்து பெற்ற சுதந்திரத்தை, தலைமுறை தலைமுறையாக நாம் காத்து வந்த ஒற்றுமையை கடந்த சிலகாலமாக பேணிப்பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. இது கவலைக்குரிய விடயமாகும். எமது தாய்த்திருநாடான இலங்கை அந்நியர்களிடமிருந்து சுதந்திரமடைந்து பெப்ரவரி நான்காம் திகதியான நாளை71 ஆவது ஆண்டாகும்.
இலங்கையின் சுதந்திரத்தின் வயது 71 வருடங்கள் ஆகும். சிறுபான்மையினரின் சுதந்திரத்தின் வயது..........?. ஒரு நாட்டின் சகல இன மக்களும் ஒரே மாதிரியான அந்தஸ்து, உரிமை, சலுகை சமமாக அனுபவிக்க கிடைக்கிறதோ அதுவே ஒரு பரிபூரண சுதந்திரமாகும். எமது நாட்டில் பெரும்பான்மையினர் அனுபவிக்கும் அந்தஸ்து, உரிமை, சலுகை, வேலைவாய்ப்பு சிறுபான்மையினரான தமிழர், முஸ்லிம் ஆகிய எங்களுக்கும் சமமாக கிடைப்பதில்லை. எப்பொழுது எமது நாட்டில் சகல இன மக்களுக்கும் ஒரே மாதிரியான சமமான பிரஜாவுரிமை கிடைக்கிறதோ அதுவே பரிபூரண சுதந்திரமாகும். புதிய அரசியல் அமைப்பின் மூலம் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பு என்றால் மிகையாகாது.
ஒரு நாட்டின் சுதந்திரமானது இன, மொழி, மத வேறுபாடுகள் இன்றி உணவிலும், கல்வியிலும், அரசியலிலும், வேலைவாய்ப்பிலும், பெண் விடுதலையிலும் கருத்துவேறுபாடுகள் அற்று ஆண், பெண் என்ற இரு சாராருக்கும் சமஅளவில் கிடைக்கவேண்டிய சமத்துவ உரிமை எப்பொழுது ஒரு நாட்டில் சீராக, நிலையாக நிலவுமோ அதுவே ஒரு நாட்டின் சுதந்திரம்
ஆகும். சுதந்திரமடைந்த இலங்கை நாட்டில்சிங்களவர்கள்,தமிழர்கள்,முஸ்லிம்கள்,கிறிஸ்;தவர்கள் என அனைத்து இன மக்களுக்கும் சம அளவிலான உரிமைகள் வழங்கப்படவேண்டும்.
ஒருவர் தன்னிடமுள்ள கைத்தடியை தனது விருப்பம் போல சுழற்ற முடியும். அது அவரின் உரிமை. அந்த உரிமையானது, அடுத்தவரின் மூக்கின் நுனியோடு மட்டுப்படுத்தப்படல் வேண்டும். அந்த வகையில் சுதந்திரமடைந்த ஒரு நாட்டில் எந்தவொரு தனிமனிதனுக்கும் அல்லது ஒரு சமூகத்திற்கும் தாங்கள் விரும்பிய ஒரு மதத்தை சரிகாண்பதற்கும் அதனை பின்பற்றுவதற்கும் பூரண அனுமதியுண்டு. அதேபோல தொழில்,கலாசாரம்,மொழி போன்ற அனைத்துவிதமான செயற்பாடுகளையும் தங்களின் விருப்பம் போல மேற்கொள்வதற்கு எந்தவொரு தடையும் கிடையாது.
மாறாக ஒருவரின் விருப்பு வெறுப்புக்களை தடை செய்வதோ அல்லது அதனை முறையற்ற வகையில் விமர்சிப்பதோ அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறலாகும். ஒருவருக்கு இருக்கும் உரிமைகளும் மத, கலாசார, கொள்கை சுதந்திரங்களும் இன்னுமொருவருக்கு இடைஞ்சலாக இருக்க முடியாது என்பது சுதந்திர நாடுகளின் தத்துவங்களில் ஒன்றாகும். அரசு இந்த விடயத்தில் பொறுப்புடன் கூடிய கவனம் செலுத்தி பெறப்பட்ட சுதந்திரத்தை ஆரோக்கியமான முழுமையான ஒரு சுதந்திரமாக ஆக்கவேண்டும் என்பதே சிறுபான்மையினராகிய தமிழர்,முஸ்லிம்களது எதிர்பார்ப்பும் அபிலாஷையும் ஆகும்.
எமது நாடு உலக வரைபடத்தில் மிகச்சிறியதாகத் தென்பட்ட போதிலும் சுமார் 2500 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றுப்பின்னணியைக் கொண்டதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். எமது நாடு ஆரம்ப காலந்தொட்டே முற்று முழுதாக மேற்கத்தேயவாதிகளின் ஆதிக்கத்துக்குள்ளேயே அகப்பட்டிருந்தது. 1505 ஆம் ஆண்டு தொடக்கம்,சுதந்திரம் அடைந்த வருடமான 1948 வரைக்குமுள்ள காலப்பகுதியை போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் என மேலை நாட்டவர்களின் ஆக்கிரமிப்புக்களுக்கு பெயர் போன ஒரு தீவாகவே இலங்கைத் தீவு திகழ்ந்துள்ளது. இதற்கு மிகவும் பிரதான காரணியாக அமைந்தது எமது தாய்நாட்டில் காணப்படுகின்ற இயற்கை வளங்களாகும்.
இவ்வளங்களை கைப்பற்றி அவற்றை தங்களின் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் போர்த்துக்கேயர்களும் ஒல்லாந்தர்களும் ஆங்கிலேயர்களும் பெரும் முனைப்புடன் செயல்பட்டனர். ஆங்கிலேயர் 1815 ஆம் ஆண்டில் இலங்கை முழுவதையும் பிரித்தானியாவின் காலணித்துவ நாடாக மாற்றினார்கள். ஆங்கிலேயர் இலங்கையின் தேசிய பொருளாதாரத்தை சூறையாடி எங்கள் நாட்டில் இருந்த விலை மதிப்பற்ற இரத்தினக்கற்களை அபகரித்த போதிலும் அவர்கள் எங்கள் நாட்டின் போக்குவரத்து துறைக்கு செய்த சேவையை நாம் மறந்துவிட முடியாது. மலையகத்தில் குன்றுகளை தகர்த்து பாதைகளை அமைத்தது அவர்கள் செய்த பெரும் சாதனையாகும். அதற்கு முன்னர் நம் நாட்டு மக்கள் மாட்டு வண்டிகளிலும், பல்லக்குகளிலும், குதிரைகளிலும் நடந்தும்தான் மலையகத்தில் உள்ள கிராமங்களுக்கு பயணம் செய்வார்கள்.
தாங்கள் பயிரிடும் தேயிலை, இறப்பர் போன்ற ஏற்றுமதிப்பயிர்களை காலதாமதமின்றி கொழும்புத்துறைமுகத்திற்கு எடுத்து வர வேண்டுமென்ற சுயநல நோக்கத்துடன் பிரித்தானிய ஆட்சியாளர்கள் கொழும்பு முதல் பதுளை வரையிலான மலையக ரயில் பாதையை பாறைகளில் சுரங்கங்களை அமைத்து மிகவும் கஷ்டப்பட்டு நிர்மாணித்தனர். இந்தப் பணி பிரித்தானியாவினால் சுயநல நோக்கத்துடன் செய்யப்பட்டாலும் பின்னர் நம்நாட்டு மக்களுக்கு போக்குவரத்து துறையில் மிகவும் பயனுள்ளதாக அமைந்துவிட்டது.
ஆங்கிலேயர் இன்னுமொரு விடயத்தில் நம் நாட்டு மக்களுக்கு மகத்தான பணியாற்றியிருக்கிறார்கள். ஆங்கிலேயர் இலங்கையில் குறிப்பாக கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் நல்ல ஆங்கில பாடசாலைகளை உருவாக்கினார்கள். இது போன்ற பாடசாலைகள் தென்னிலங்கையிலும், மலையகத்தில் ஓரிரு இடங்களிலும் உருவாக்கப்பட்டமையும் உண்மைதான். இந்தப் பாடசாலைகளை அமைத்து எங்கள் நாட்டில் ஆங்கில அறிவுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை ஆங்கிலேயர் ஏற்படுத்தினார்கள்.
இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து ஒரு வருட இடைவெளியில் கிடைத்தவரை எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு இனித்தேவையில்லை என்ற நிலையிலேயே ஆங்கிலேயர்கள் 1815 ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டனின் காலணித்துவ நாடாக விளங்கிய இலங்கையை 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தினார்கள்.
எமது நாடான இலங்கை இந்தியாவைப் போன்று போர்க்கொடி தூக்கி சுதந்திரத்தை அடையவில்லை. இலங்கைக்கு சுதந்திரம் இலவசமாக கிடைத்தது. நம்நாட்டு மக்கள் சமாதானமாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உண்மை நிலையை விளக்கி சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதில் ஒருவகையில் சாதனை படைத்தார்கள். எமது நாட்டின் சுதந்திரமானது இலவசமாகவும் அமைதியான முறையிலும் கிடைத்த சுதந்திரமாகும்.
இலங்கை 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டபோது எமது நாட்டின் முதல் பிரதம மந்திரியாக டி.எஸ். சேனநாயக்க ஆட்சியில் அமர்த்தப்பட்டார்.
டி. எஸ். சேனநாயக்கா, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்த்தன ,சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம், ரி. பி. ஜாயா, சேர் ராசிக் பரீட் ஆகியோர் ஒன்றாக இணைந்து சமாதானமாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உண்மை நிலையை விளக்கி சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதில் ஒருவகையில் சாதனை படைத்தார்கள்.
எந்தவொரு சமூகமும் அதன் மதவழிபாடுகள், வர்த்தக நடவடிக்கைகள், குடியுரிமைகள் போன்றவற்றை தங்களின் விருப்பத்திற்கேற்ற வகையில் அமைத்துக்கொள்வதற்கு தாராளமான வழிவகைகளை அமைத்துக்கொடுப்பது ஒரு இறைமையுள்ள அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.
Post a Comment