2 வர்த்தகர்கள் படுகொலை, நீதிகேட்டு வீதியில் போராட்டம் - உயிரிழந்தவரிடம் இருந்துவந்த தொலைபேசி அழைப்பு
தென்னிலங்கையில் உயிரிழந்ததாக நம்பப்படும் வர்த்தகரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தமையினால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
புஸ்ஸ, ரத்ன உதாகம பிரதேசத்தில் வர்த்தகர்கள் இருவர் பொலிஸாரினால் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு ரத்கம பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
காலி - கொழும்பு பிரதான வீதி மற்றும் ரயில் வீதியை மறிந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதால், அந்தப் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக காலி - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பல மணித்தியாலங்கள் தடைப்பட்டுள்ளமையினால் பாரிய நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக கடற்கரை ரயில் போக்குவரத்து சேவைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கொலை செய்யப்பட்ட இருவரது உறவினர்கள் உட்பட பிரதேச மக்கள் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு எந்தவொரு அதிகாரியும் முயற்சிக்கவில்லை. ஆர்ப்பாட்ட பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் மாத்திரம் சென்ற நிலையில் அவர்களுக்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் இடத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற கடற்படை அதிகாரிகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு காணாமல் போனதாக கூறப்படுகின்ற மஞ்சு என்பவரின் தந்தைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அந்த அழைப்பில் அப்பா மஞ்சு பேசிகிறேன் என கூறப்பட்டுள்ளது. எனினும் பேசுவது மஞ்சு அல்ல என நினைத்த தந்தை தான் பிறந்த இடத்தையும் பிறந்த திகதியையும் கூறுமாறு கேட்டுள்ளார். எனினும் அதற்கு பதிலளிக்காமல் தான் மஞ்சு எனவும் தனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அழைப்பை ஏற்படுத்திய நபர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்கு பொலிஸாரால் நடத்தப்படும் நாடகம் என அங்குள்ளவர்கள் சந்தேகிப்பதனால் பதற்றமான நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment