Header Ads



நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின், 2வது தேசிய பேராளர் மாநாடு


நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தேசிய கட்சியாக பதிவு செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற 2வது பேராளர் மாநாடு 02.02.2019 சனிக்கிழமை இன்று -02- கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 காலை 9.30 மணிக்கு புஹாரியடி சந்தியிலிருந்து  ஊர்வலத்துடன் ஆரம்பமான இப்பேராளர் மாநாடு, "அனைவருக்குமான அரசியல் தீர்வே நிரந்தரமான தீர்வு" எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. NFGGயின் தவிசாளர் சகோதரர் சிராஜ் மஷ்ஹூர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் வரவேற்புரையினை NFGGயின் திருக்கோணமலை மாவட்ட அமைப்பாளர் சகோதரர்  JM.சஜீர் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து தலைமை உரை கட்சியின் தவிசாளர் சிராஜ் மஷ்ஹுர் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

 இன்றைய மாநாட்டின் கருப்பொருள் உரையினை NFGGயின் பிரதித்தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர்ரஹ்மான் அவர்கள் நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கட்சிக்கான ஒருகோடி ரூபாய் நிதி திரட்டும் நிகழ்வு உத்தியோக பூர்வமாக தவிசாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதலாம் அமர்வின் இறுதி நிகழ்வாக கலந்து கொண்ட பேராளர்களின் கருத்துரைகள் இடம்பெற்றது. 

 பேராளர் மாநாட்டின் இரண்டாவது அமர்வு சரியாக 2 மணிக்கு மீண்டும் ஆரம்பமானது. இதன் போது 2019ம் ஆண்டிற்கான செயற்திட்ட முன்வைப்பு NFGGயின் தேசிய அமைப்பாளர் நஜா முஹம்மட் அவர்களினால் முன்மொழியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட மட்ட குழுக்கலந்துரையாடல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரத்தியேகமாக நடைபெற்று அதில் எட்டப்பட்ட தீர்மானங்கள் மாவட்ட அமைப்பாளர்களினால் சபைக்கு முன்வைக்கப்பட்டது. இறுதியாக புதிய நாளை பத்திரிகையினை வெளியீட்டு வைக்கும் நிகழ்வு NFGGயின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சகோதரர் முஜிபுர்ரஹ்மான் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இறுதியாக தவிசாளர் சிராஜ் மஸ்ஹூர் அவர்களினால் தொகுப்புரையும் அதனைத்தொடர்ந்து  பொதுச்செயலாளர் ALM. சபீல் நழீமி அவர்களினால் நன்றியுரையும்  வழங்கப்பட்டு இப்பேராளர் மாநாடு 4.30 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

திருகோணமலை செயற்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இம்மாநாட்டில் ,மட்டக்களப்பு ,அம்பாரை,  திருகோணமலை, வன்னி, குருணாகலை, கண்டி, கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், ஸ்தாபக உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள், மகளிர் அணி உறுப்பினர்கள் உட்பட சுமார் 300  பேராளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.