கிண்ணியாவில் பதற்றம், 2 பேர் மரணம், வான் நோக்கி துப்பாக்கிச் சூடு
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கை சாவத்து பாலத்துக்கு அருகில் இன்று (29) காலை முதல் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிண்ணியா பகுதியைச் சேர்ந்த மூவர், மணல் ஏற்றுவதற்காகச் சென்ற போது, சட்டவிரோதமாக மணல் ஏற்ற முற்பட்டதாகத் தெரிவித்து, விசேட பொலிஸ் அதிரடிப்படையினர், அவர்களைக் கைது செய்ய முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த மூவரும் தப்பிச்செல்ல முற்பட்ட போது, வான் நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பயம் காரணமாக, அம்மூவரும் கங்கையில் குதித்த வேளை, இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்பதுடன், மற்றுமொருவர் மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் கிண்ணியா, இடிமண் பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, விசேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு தற்போது பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இத்துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
-அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்
Post a Comment