Header Ads



யாழ் - ஒஸ்மானியா, கல்வி மேம்பாட்டுத் திட்டமும், அதிபரின் உருக்கமான வேண்டுகோளும்...!!

கடந்த  27.1.2019 அன்று ஒஸ்மானியா கல்லூரி அதிபர் மற்றும் யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் அபிவிருத்திக் குழு  ஆகியன பங்குபற்றிய  ஒஸ்மானியாவின் கல்வி மேம்பாட்டுத்திட்டம் சம்பந்தமான கூட்டமும் கலந்துரையாடலும் நீர்கொழும்பு விஸ்டம் கல்லூரியில் இடம்பெற்றது. 

இக்கூட்டம் ஒஸ்மானியாவின் முன்னாள் மாணவன் அஷ் ஷெய்க் ஜே. சபீர் (ஜாபிர்) மௌலவியின் இனிய கிரா அத்துடன் ஆரம்பமானது.

இக்கூட்டத்தில் வரவேற்புரையை நிகழ்த்திய ஒஸ்மானியாவின் முன்னாள் மாணவனும் ஓய்வு பெற்ற ஆசிரியருமாகிய எம்.எம். முஸாதீக், சமூகத்தின்  அபிவிருத்தி என்பது அச்சமூகத்தில் காணப்படும் பாடசாலைகளின்  கல்வி அபிவிருத்தியுடன் பெரிதும் தொடர்பு பட்டது என்று சொன்னார். மேலும் 1990 இக்கு முன்பு ஒஸ்மானியாவும் ஹதீஜாவும் சமூகத்தின் இருகண்களாக இருந்தன. அவை இப்போதும் பாதுகாக்கப் பட வேண்டும். அதற்கு ஒஸ்மானியாவில் கல்வி கற்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். 

தொடர்ந்து உரையாற்றிய எம்.எம். அஜ்மல் 2003 ஆம் ஆண்டு 37 மாணவர்களைக் கொண்ட ஒரு பாலர் பாடசாலையாகத்தான் ஒஸ்மானியா மீள ஆரம்பிக்கப் பட்டதென்றும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்விப் பணி ஆரம்பிக்கப் பட்டதெனவும் தெரிவித்தார். 2003 தொடக்கம் 2012 வரை பாடசாலையில் நிலவிய ஆசிரியப் பற்றாக் குறையை தொண்டர்  ஆசிரியர்கள் மூலம் நிறைவேற்றி அவர்களுக்கு சம்பளம் வழங்கும் விடயத்தை  எம்.எம். ரமீஸ், எம்.எஸ். ஜினூஸ் ஆகியோருடன் சேர்ந்து தாங்கள் பொறுப்பெடுத்துக் கொண்டதாக தெரிவித்தார். இந்த நிதிக்கு சில வர்த்தகர்களும் தங்கள் ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். ஒஸ்மானியா தொடர்ந்து முன்னேற அங்கு உயர்தரக் கல்வி ஆரம்பிக்கப் பட வேண்டுமெனவும் தான் ஒஸ்மானியாவின் மாணவன் இல்லாவிடினும் அதற்கு பங்களிப்புச் செய்வேன் எனவும் அவர் தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஒஸ்மானியாவின் முன்னாள் அதிபரும் ஓய்வு பெற்ற பிரதி கல்விப் பணிப்பாளருமாகிய எம்.ஏ.ஆர். அப்துல் ரஹீம் அவர்கள்  ஒஸ்மானியாவில் க.பொ. த (உயர்தர வகுப்புகள்) ஆரம்பிக்கப் பட்ட பின்னர் கல்வித் துறை மேலும் முன்னேறியதுடன் ஒஸ்மானியாவிலிருந்து மாணவர்கள் பல்கலைக் கழகம் புகத் தொடங்கினார்கள் என்று தெரிவித்தார். தான் சவூதியில் பணிபுரிந்த காலத்தில் ஒரு சங்கத்தை அமைத்து அதனூடாக  திருமண விடயங்களுக்காக உதவிகளை வழங்கிய போது ஒஸ்மானியாவின் பழைய மாணவர்களே அதிகமான உதவிகளை வழங்கி அத்திட்டத்தை வெற்றிபெறச் செய்தனர் என்று தெரிவித்தார். 

தான் அதிபராக இருந்த பாடசாலைகளில் எல்லாம் உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் தற்போது அந்த பாடசாலைகளில் இருந்து அதிகமான  பட்டதாரிகள் மற்றும் அரசாங்க உத்தியோகம் செய்வோர் உருவாகியுள்ளனர் என்று தெரிவித்தார். எனவே ஒஸ்மானியாவில் மீண்டும் உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதுடன் அதனூடாக கல்லூரியின் தரத்தை உயர்த்தி ஒஸ்மானியாவினூடாகவே மாணவர்கள் பல்கலைக் கழகம் நுழைய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் அதற்கு சகல பழைய மாணவர்களும் உதவி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். 

ஒஸ்மானியாவின் தற்போதைய அதிபர் எம். சேகு ராஜிது அவர்கள் பேசும் போது  ஒஸ்மானியாவை முன்னேற்றுவது எனது இலட்சியம் அந்த இலட்சியத்துடன் தான் சனி ஞாயிறு தினங்களில் கூட என குடும்பத்தைக் காணச் செல்லாமல் பாடசாலையிலேயே எனது நேரத்தை செலவளிக்கின்றேன் என்று கூறினார். 

வெளி நாடுகளில் உள்ள சில அமைப்புக்களின் உதவியுடன் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் வகுப்புக்களை சிறப்பாக நடத்தி யாழ்ப்பாணத்தின் முன்னனி பாடசாலைகளுக்கு ஒப்பாக 68 சதவிகிதம் மாணவர்களைச் சித்தியடைய வைத்துள்ளோம் என்று கூறினார்.  ஒஸ்மானியாவின் புலமைப் பரிசில் முன்னேற்றத்தை கண்டு சில பெற்றோர் வேறு பாடசாலைகளில் கற்ற தமது பிள்ளைகளை ஒஸ்மானியாவில் சேர்த்துள்ளனர். மேலும் சில முன்னனி ஆசிரியர்கள் ஒஸ்மானியாவுக்கு மாற்றம் பெற தன்னை அனுகியுள்ளதாகவும் தெரிவித்தார். 

அதே போன்று க.பொ. த. சாதாரண தர வகுப்புகளுக்கும் மேலதிக வகுப்புக்கள் ஏற்பாடு செய்தால் கல்வித் திணைக்களத்தின்  நிபந்தனைகளை நாம் பூர்த்திசெய்யலாம்  என்றும் அதற்கான வகுப்புக்களை ஆரம்பிக்கவும் டியூஸன் வகுப்புகளுக்கு அனுப்பவும் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் தேவை எனவும் தெரிவித்தார். 

கடந்த காலங்களில் ஒஸ்மானியாவில் சாதாரண தரம் வரை படித்து வேறு பாடசாலைகளில் உயர்தரம் கற்ற பத்து மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர்,. இவர்கள் ஒஸ்மானியாவில் உயர்தரம் கற்றிருந்தால்  அந்தப் பெருமை ஒஸ்மானியாவையையே சேர்ந்திருக்கும் எனத் தெரிவித்தார். அந்த சந்தர்ப்பம் இழக்கப் பட்டுவிட்டது என கண்ணீருடன் கூறினார்.  அத்துடன் உயர்தர வகுப்பை ஆரம்பித்தால்  தான் சாதாரண தர வகுப்பினரையும் கல்வி இலட்சியத்துடன் உற்சாகமாக வைத்திருக்க முடியும் என தெரிவித்தார்.  ஏற்கனவே மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக சாதாரண தரப் பரீட்சையில் அதிக வீதமானோர் சித்தியடையாததால்  உயர்தர வகுப்பை ஆரம்பிக்க சில தடைகள் உள்ளன. அவற்றை அகற்ற எமது செலவிலேயே அதனைச் செய்ய வேண்டியுள்ளது. சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புக்களை அடுத்த மூன்று வருடங்களுக்கு சிறப்பாக செய்து முன்னேற்றினால் தான் உயர்தர வகுப்புக்களை அரசாங்க உதவியுடன் முன்னெடுக்க வழிபிறக்கும் என்றும் எனவே முன்னாள் மாணவர்கள் மனசு வைத்தால் இந்த பணியை தான் பொறுப்பெடுத்துச் செயற்பட திடசங்கட்பம் பூண்டுள்ளதாக அவர் கண்ணீர்மல்க கூறினார். 

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த பல்வேறு  பழைய மாணவர்களும்  இந்த உயர்தர வகுப்பு ஆரம்பிக்கும் திட்டத்தை கைவிட வேண்டாமெனவும் எமது மாணவர்கள் இன்று வசதியாக வாழ்வதாகவும் அவர்களிடம் உதவிகளை பெற்றுத்தர தாமும் உதவுவதாகவும் தெரிவித்தனர்.  ஒஸ்மானியாவில் இதுவரை ஐயாயிரம் பேர் கல்வி கற்றுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் ரூபாவை பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கினாலும் ஐம்பது இலட்சத்தை சேர்க்கலாம் எனவும் அதை வைத்து இந்த திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் எக்காரணம் கொண்டும் உயர்தர வகுப்பு ஆரம்பிக்கும் திட்டத்தை கைவிட வேண்டாமெனவும் வந்திருந்த பழைய மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்திருந்தனர். 

அங்கு உரையாற்றிய நூருல் ஹசன் மௌலவி அவர்கள் ஈமானின் ஒரு அடையாளம் சமூகப் பற்று இருப்பது என்று தெரிவித்தார். சமூகத்தின் நலவுகளுகளுக்காக செலவளிப்பவரை அல்லாஹ் ஒருபோதும் கைவிடுவதில்லை என்றும் தெரிவித்து  அலி (ரலி) அவர்கள் கொடுத்த 6 திர்ஹம்கள் 60 திர்ஹம்களாக கிடைத்த சம்பவத்தை ஞாபகப் படுத்தினார். 

எனவே ஒஸ்மானியாவின் உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்கவும் சாதாரண தர மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை நடத்தவும் மேலும் பாடசாலையில் கம்பியூட்டர் வகுப்புகள், நீர் குழாய் பொருத்தும் பயிற்சி, மின்சார வேலைகள் போன்ற பயிற்சிகளையும் ஆரம்பித்து பாடசாலையில் இருக்கும் பிந்தங்கிய மாணவர்களையும் தொழி துறையில் பயிற்சி மிக்கவர்களாக உருவாக்கும் திட்டமும் தம்மிடம் இருப்பதாக ஒஸ்மானியாவின் கல்வி அபிவிருத்திக் குழு சார்பாக அதிபர் தெரிவித்தார்.  

இந்த நிதி சேகரிப்புக்காக ஆரம்பிக்கப் பட்டுள்ள இணைப்பு கணக்கின் கையொப்பதாரிகளாக எம். சேகு ராஜிது அதிபர் அவர்களும் அஜ்மைன் ஆசாத் அவர்களும் எம்.பி. நஜிமுதீனும் இருக்கின்றனர். இந்த கணக்குக்கு நிதியை சேகரிப்பது எனவும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கணக்கை வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப் பட்டது. 

எனவே வெளிநாடுகளில் வாழும் ஒஸ்மானியாவின் பழைய மாணவர்களும் சமூக நலனில் அக்கறையுள்ள யாழ்ப்பாணத்தின் ஏனைய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் இத்திட்டத்துக்கு உதவி செய்யுமாறு ஒஸ்மானியாக் கல்லூரி சார்பில் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய  அனைவரும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கீழ்வரும் வங்கிக் கணக்குக்கு பணம் வைப்பிடுவோர் தங்கள் பெயரையும் தாங்கள் வசிக்கும் நாட்டையும் தொகையையும் குறிப்பிட்டுச் சொன்னால் தான் கணக்கு வைப்பது இலகுவாக இருக்கும் என்று அதிபர் தெரிவித்துள்ளார். உங்களுடைய பெயரில் வழங்க விருப்பமில்லையாயின் உங்கள் பிள்ளைகளினதோ அல்லது தாயினதோ பெயரில் வழங்குங்கள்.  சில தர்மங்களை பகிரங்கமாக வழங்கும் போது மற்றவர்களும் அவ்வாறு வழங்க உந்தப் படுவார்கள். 

இந்த நிதிக்காக சகாத் பணத்தையும் வழங்க முடியும். 

மேலும் கல்லூரியின் தற்போதைய நிலமை சம்பந்தமாக பல்வேறு ஆக்கங்கள் யாழ் முஸ்லிம் இணையத்தளம் மற்றும் வட்ஸ் அப் குழுமங்களில் பகிரப் பட்டுள்ளது. மேலதிக தகவல் பெற விரும்பும் நிச்சயமாக உதவி வழங்கக் கூடியவர்கள் அதிபர் சேகுராஜிது அவர்களை அவர்களின் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளமுடியும்.  அதிகமான நேரங்களில் அவர் பணியில் இருப்பதால் உடனடியாக உங்கள் அழைப்பை எடுக்க மாட்டார். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தங்கள் கேள்விகளை வட்ஸ் அப் வொய்ஸ் மெசேஜ் மூலமோ அல்லது குறுந்தகவல் (எஸ் எம் எஸ்) மூலமோ அனுப்பினால் அவர் அதற்கு இன்ஷா அல்லாஹ் பதிலளிப்பார். 

எம் கே சேகுராஜிது  0770245671
BANK ACCOUNT DETAILS
 A/C No 1000120804 
M.K. Segurajidu, Commercial Bank, Jaffna

No comments

Powered by Blogger.