Header Ads



புலிகளின் சீருடையில் படம் எடுத்து, தமிழர்களிடம் பணம் கறக்க முயன்றவர்கள் கைது

புலிகளின் சீருடையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட ஆறு இளைஞர்களை வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தகவல் ஒன்றை அடுத்து, சந்தேக நபர் ஒருவரின் வீட்டை சிறிலங்கா காவல்துறையினர் சுற்றி வளைத்த போது, குறித்த நபர் தப்பிச் சென்றிருந்தார்.

அந்த வீட்டில் இருந்த கணினியை சோதனைக்குட்படுத்திய  போது, அதில், விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த 21 இளைஞர்களின் ஒளிப்படங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த 21 சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்த போது, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோர் அந்தப் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்க அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்காக இந்த ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் குழுவொன்று உருவாகி வருவதாக காண்பித்து, புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் திட்டமிட்ட அடிப்படையில் ஒரு குழு செயற்பட்டு வந்திருப்பது, ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

புலிகளின் குழுவொன்று ஆயுதப் பயிற்சி பெறுவது போன்ற படங்களை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பி, அங்கிருந்து நிதியைப் பெற்றுக் கொண்டதாக கைது செய்யப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

அதேவேளை, கிளிநொச்சி- வட்டக்கச்சியில், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் இருவருக்கு புகலிடம் கொடுத்தார், மருத்துவ சிகிச்சை அளித்தார் என்ற குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டார்.

இவரது கணவனும் ஒரு முன்னாள் போராளியாவார். விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க உதவினார் என்ற குற்றச்சாட்டில் அவர் அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

காவல்துறையினர் இவரது வீட்டைச் சோதனையிடச் செல்வதற்கு முன்னரே, அங்கிருந்த இரண்டு சந்தேக நபர்களும் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

அவர்களில் ஒருவர்,  காயமடைந்துள்ளார் என்றும் அவருக்கு குறித்த பெண் வீட்டில் வைத்து சிகிச்சை அளித்துள்ளார் என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல்களை வெளியிட்டுள்ளது. எனினும், அவருக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை எனவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.