Header Ads



இலவச மின்சாரம், வழங்கத் தயாராகும் சிராஜ் - கை கொடுப்பாரா ஹிஸ்புல்லாஹ்

 – அனஸ் அப்பாஸ் –

M.N. முஹம்மது சிராஜ் அவர்கள் காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்தவர். ஸைத்தூன் பீபி – முஹம்மத் நுஹ்மான் தம்பதிகளின் மூத்த புதல்வரான இவர், காத்தான்குடி அல்-நாசர் வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். 2007 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தனது பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திவிட்டு, தந்தையைப் போன்றே தானும் தேர்ந்த ஒரு தையல் இயந்திர பழுதுபார்ப்பவராக சில வருடங்கள் தொழில் புரிந்தார். பின்னர் (தொழிற்துறை கற்கை மேற்கொண்ட) பத்திர எழுதுனர் (Draftsman) ஆக தொழில் நிமித்தம் கத்தார் நாட்டிற்கு சென்று அங்கு (மேலதிகமாக வரையுனராகவும்) மூன்றரை வருடங்கள் பணி புரிந்தார்.

தற்போது 26 வயதைக் கடக்கும் சிராஜ், ஒரு மணித்தியாலயத்தில் 1,200 முதல் 1,500 வரையான இடியப்பங்களை தயாரித்து வழங்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இவ்வியந்திரம் மின்சாரத்தில் இயங்குகின்றது. இடியப்பம் மட்டுமன்றி முறுக்கு வகைகள், பிஸ்கட் வகைகள் உள்ளிட்ட பல திண் பண்டங்களை இதன்மூலம் தயாரிக்க முடியும். இயந்திரம் மட்டுமன்றி அதனுடன் ஸ்டீமர் (நீராவியில் அவிக்கும் பகுதி) உம் இணைக்கப்பட்டுள்ளது.

சிறு வயதுமுதலே தையல் இயந்திரம் மற்றும் இதர இயந்திர பழுதுபார்த்தல்களை மேற்கொண்டதாலும், பாடசாலைப் பருவ செயற்றிட்ட அனுபவங்கள் என்பனவுமே இந்த கண்டுபிடிப்பின் தோற்றுவாய் என குறிப்பிடும் சிராஜ்,

இதுவே முதல் கண்டுபிடிப்பு. இக் கண்டுபிடிப்புக்கான காப்புரிமை (Patent Right) பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் தற்சமயம் ஈடுபட்டுள்ளார். இதுவரை எவ்வித அங்கீகாரமும் (விருதுகளோ, சான்றிதழ்களோ) இவருக்கு கிடைக்கவில்லை.

இக் கண்டுபிடிப்பை வெளிக்கொணர பொருளாதார ரீதியில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டதாகவும், தந்தையும் சுகவீனமுற்றிருக்கும் நிலையில் அன்றாட ஜீவனோபாய வருமானத்திலேயே இதனை மேற்கொண்டதாகவும் கூறினார்.

இது தனது கண்டுபிடிப்பு என்று சொல்வதை விட தன்னிடமுள்ள ஆக்கத் திறனுக்கான ஒரு மாதிரி (Sample) என்றே குறிப்பிடுகின்றார். உத்தேச கண்டுபிடிப்புகள் தொடர்பாக தன்னிடம் நிறைய செயற்றிட்டங்கள் இருப்பதாகவும், இலங்கையில் மின்சாரத்துறையில் பாரிய பற்றாக்குறைகள் காணப்படுவதாகவும், இதற்கான தீர்வாக மின்வலு உற்பத்தி செய்ய தான் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

இனிவரும் காலங்களில் பல புதிய இயந்திரங்களை கண்டுபிடிப்பதுடன், பாடசாலைகளில் இத்துறையில் ஆர்வத்துடன் காணப்படும் மாணவர்களை இனங்கண்டு அவர்களை ஒன்றிணைத்து, வழிகாட்டும் ஆர்வமும் தன்னிடம் இருப்பதாக குறிப்பிடுகின்றார்.

துரித இடியப்ப தயாரிப்பு இயந்திரத்தை கண்டுபிடித்து 6 மாதங்கள் எவ்வித அங்கீகாரங்களும் இன்றியே இருந்தது. 6 மாதங்களின்பின் சகோதரர் நூர்தீன் அவர்கள் முகநூலில் அதனை பதிந்ததன் பின்னர்தான் வெளியுலகம் கண்டுகொண்டது. பின்னர் ஒரு வாரத்தில் இக்கண்டுபிடிப்பு குறித்து தேசிய நாளிதழ் ஒன்றும் செய்தி வெளியிட்டது. குறித்த முகநூல் காணொளியில் அடுத்து தான் தனது ஊரான காத்தான்குடிக்கு முழுவதும் மின்சாரத்தை வழங்கக்கூடிய கருவியொன்றை (Generator) கண்டுபிடிக்க உத்தேசித்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஒரு மாதம் கடந்தும் யாரும் அதற்கு எவ்வித துலங்களும் காட்டாததால் தனக்கு விரக்தி ஏற்பட்டதாகவும், அவ்வாறன ஒரு இயந்திரத்தின் தேவையை சமூகமோ முதலீட்டாளர்களோ உணரவில்லை என்பது தனக்கு பெரும் கவலை என்பதாகவும் தெரிவிக்கின்றார்.

“அரச மட்டத்தில் உள்ளவர்களை அணுகி இலவச மின்வலு உற்பத்தியைப் பற்றி தெரிவித்திருக்கலாமே! அல்லது தனவந்தர்களை அணுகினால் அவர்கள் உதவுவார்களே” என்று நான் கேட்டதற்கு, இதுவரை அவ்வாறான Proposal ஒன்றை தயாரிக்கவில்லை என்றும், சமூகத்துக்கான / நாட்டுக்கான தேவையை சமூகமே உணராமல், அன்றாட ஜீவனோபாய திண்டாட்டத்துடன் தொடர் முயற்சியை தான் மட்டும் மேற்கொள்வது சலிப்பைத் தருவதாக கூறினார்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் கிழக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராக இவரது ஊரைச் சேர்ந்த M.L.A.M ஹிஸ்புல்லாஹ் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவரது கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டுசெல்லப்பட்டதா என்று கேட்டதற்கு, அவரை சந்திப்பதற்கான முயற்சிகளில் தற்சமயம் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடுகின்றார்.

“சிறு வயதுமுதலே “உன்னால் முடியாது.. உன்னால் முடியாது” என்று பலரும் சொல்வதைக் கேட்டே வளர்ந்தேன். வாழ்வில் நாம் ஒரு அடைவைப் பூர்த்திசெய்யும் வரை யாரும் கவனிக்க மாட்டார்கள். எமக்குள்ளிருக்கும் திறமையை நாம் வெளிக்காட்டதவரை எம்மால் முன்னேற முடியாது, யாரும் அங்கீகரிக்கவும் மாட்டார்கள். பலநாள் தனிமையில் யோசித்திருக்கிறேன். இதன் விளைவாகவே எனது கண்டுபிடிப்பு மலர்ந்தது. முதலில் சிறியதொரு PowerSupply கருவியை 2006 ஆம் ஆண்டு எனது தங்கையின் உதவியுடன் கண்டுபிடித்தேன், அதுவே எனக்கான முதல் உந்துசக்தி. அந்த PowerSupply வெற்றிகரமாக வேலை செய்தது. தற்போது எமதூரில் பெரிய நிறுவனம் ஒன்றை நடாத்திவரும் இயந்திர வல்லுனரான எனது மாமா, அப்போது கொரியாவில் இருந்து வந்ததும் என்னை பாராட்டினார்.” என மாணவர்களுக்கான தனது உற்சாக வார்த்தைகளை குறிப்பிடுகின்றார்.

“முதற்கண் இறைவனுக்கே நன்றி அல்ஹம்துலில்லாஹ்! அடுத்து பெற்றோர், தங்கைமார், உறவினர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றி” பகர்கின்றார். “மின்சார உற்பத்தி என்பது ஒரு அதிசய விடயமாக பேசப்படுகின்றது. ஆனால், அது பூதாகரமாக பேசப்படும் அளவு கடினமானதொன்றல்ல. சிறிய அளவு மின்வலுவை பெருப்பித்தே பாரியளவான மின்வலு உற்பத்தி இடம்பெறுகின்றது. நான் தயாரிக்க உத்தேசித்திருக்கும் PowerSupply மூலம்  முற்றிலும் இலவசமான மின்சாரத்தை ஊர் முழுவதிற்குமான வீதி விளக்குகளுக்கும் கொடுக்க முடியும், இதன்மூலம் ஒரு மாத காலத்திற்கு மின்சாரத்தை வழங்க ஒரு மாநகர சபை செலவு செய்யும் பல இலட்சங்களை சேமிக்க முடியும். இதற்கு பங்களிக்க நான் என்றும் தயார். மேலும், வீடுகளுக்கான PowerSupply யை தயாரித்து வழங்கவும் என்னால் முடியும். இதனால் ஆயுள் முழுதும் இலவச மின்சாரம் உங்களுக்கு கிடைக்கும்” என்றும் குறிப்பிடுகின்றார். இயந்திர வல்லுனர் (Mechanic) ஒருவராக உருவாக வேண்டும் என ஆசை வைத்துள்ள சிராஜுக்கு போதிய வழிகாட்டலை வழங்க துறை சார்ந்தவர்கள் முயற்சித்தால் எட்டாக் கனியாகவுள்ள பயனுள்ள பல வெளியீடுகள் விரைவில் சாத்தியமாக்க முடியும் இன்ஷா அல்லாஹ்! விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ள சிராஜுக்கு வாழ்த்துக்கள்!

4 comments:

  1. Masha Allah.... May Allah bless with him with knowledge that will benefit for both worlds.

    ReplyDelete
  2. Masha Allah, we need to appreciate
    May Allah Reward you good health

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்.... உங்களது முயற்சி மென்மேலும் வெற்றிபெற எனது பிரார்த்தனைகள்....

    ReplyDelete
  4. Why not publish this man's telephone number any other contact way to contact him.

    ReplyDelete

Powered by Blogger.