கல்முனையில் இரத்தமோ, கண்ணீரோ சிந்திவிடக்கூடாது - ஜெயபாலன் உருக்கமான வேண்டுகோள்
கல்முனை மக்கள் கல்முனைக்குடி சாய்ந்த மருது சக மாளிகைக்காடு மற்றும் கல்முனை தமிழ் என பிழவுபட்டே சிந்திக்கிறார்கள்.அவர்கள் கல்முனைக் கூட்டுக் குடும்பத்தில் இருந்து நல்லுறவோடு சுமூகமாகத் தனிக்குடித்தனம் போகும் தங்கள் விருப்பத்தை சந்தேகத்துக்கு இடமின்றி தொடர்ந்தும் தெளிவுபடுத்தி வருகிறார்கள். இப்பிழவுகள் தமிழ் முஸ்லிம் மக்களிடையே மட்டுமன்றி கல்முனைக்குடி சாய்ந்தமருதுஎன முஸ்லிம்களிடையேயும் அரசியல் மோதல்களுக்கும் பிளவுகளுக்கும் காரணமாகி வருகிறது. அடிக்கடி அரசியல் மோதல்களாகவும் உச்சபட்டுகிற இப்பிரச்சினை தொடர்வது கல்முனைக்கு மட்டுமன்றிக் கிழக்கின் எதிர்காலத்துக்கும் நல்ல சகுனமல்ல என்பதை அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.
காலாவதியான கூட்டுக்குடும்பமாக உழலும் கல்முனை எதிர்காலத்தில் நிச்சயம் இரண்டுக்கு மேற்பட்ட அலகுகளாகப் பிரிந்து செல்லும். உறவுகளைச் சீரழித்துவிட்டு கண்ணீரும் இரத்தமுமாக பிரிந்து செல்கிற கூட்டுக் குடும்பம் போல் கல்முனை பிரிந்து சென்றால் அது வரலாற்று அவலமாகும். கல்முனை கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் இணக்கமாக தனிக்குடித்தனங்களாகி உறவை பாதுகாத்துக் கொள்வது கல்முனைப் பிரதேச மக்களின் ஒற்றுமைக்கு மட்டுமல்ல கிழக்கு மாகாண ஒற்றுமைக்கும் சுபீட்சத்துக்கும் முக்கியமானதாகும்.
இத்தகைய ஒரு அரசியல் மோதல் சூழலில் கல்முனை நாடாளுமன்ற உறுப்பினர் மான்புமிகு H.M.M. ஹாரிஸ் அவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளூராட்ச்சி மாகாணசபை இராஜாங்க அமைச்சரக நியமிக்கபட்டிருப்பது திருப்புமுனை நிகழ்ச்சியாகும். எனினும் அவரது நியமனம் அறிவிக்கபட்ட உடனேயே சாய்ந்த மருது மாளிகைக்காடு சுயேட்ச்சை அணியினர் தங்கள் தனி நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். மான்புமிகு ஹாரிஸ் அவர்களது முடிவுகளில் கல்முனையின் எதிர்காலம் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தின் எதிர்காலமும் முஸ்லிம் காங்கிரஸ் தமிழர் கூட்டமைப்பு ஐக்கியத்தின் எதிர்காலமும் தங்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது. மேலும் மாண்பு மிகு ஹாரிஸ் அவர்களுக்கு ஊர்வாதத்தால் சிக்கலாகிவரும் கிழக்கு முஸ்லிம்களின் உள் நெருக்கடிகளுக்கு கூட்டுக் குடும்ப மோதலா ஐக்கியமான தனிக்குடித்தனமா தீர்வு என்கிற வரலாற்றுக் கேழ்விக்கும் விடைகானவேண்டிய தார்மீக பொறுபுள்ளது என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன். .
கடந்த காலங்களில் மாண்புமிகு ஹாரிஸ் அவர்கள் சாய்ந்தமருது மாளிகக்காடு மக்களின் தனிக்குடித்தன முன்னெடுப்புகளை முறியடிப்பதில் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார் என சுயேட்சைக்குழு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. இத்தகைய மனநிலையே கல்முனைவாழ் தமிழர் மத்தியிலும் உள்ளது. இத்தகைய சிக்கலான சூழலில் உள்ளூராட்ச்சி மாகாணசபை இராஜாங்க அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுள்ள மாண்புமிகு ஹாரிஸ் அவர்களின் அரசியல் அணுகுமுறைகள் வென்றாலும் தோற்றாலும் கிழக்கில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும். அதனால் என்னுடைய பணிவான வேண்டுகோள் மாண்புமிகு ஹாரிஸ் அவர்கள் சுயவிமர்சனத்தோடு புதிய ஜனநாயக வழிமுறைகளை கையாளவேண்டும் என்பதாகும். அவர் மக்கள் மட்ட குறும்பாக கருத்துக் கணிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படவேண்டும். கல்முனைக் குடி மக்கள் தலைவர்களையும் கல்முனை தமிழ்பிரிவு மக்கள் தலைவர்களையும் சாய்ந்தமருது மாளிகக்காடு முஸ்லிம் மக்கள் தலைவர்களையும் அழைத்து திறந்த மனதுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.. கல்முனையில் இனரீதியாக தமிழர்களும் ஊர் ரீதியாக முஸ்லிம்களும் எதிர்நோக்கும் கூட்டுக்குடும்ப நெருக்கடிகளை ஆராய்ந்து கருத்துக் கணிப்புகளை நடத்தி யதார்த்த நிலமைகளை கண்டுகொள்வது அடிப்படையானதாகும்.
இது இட ஆழுமை (Territoriality) தொடர்பான இன பிரதேச பிரச்சினையாகும். இடம் தொடர்பான முஸ்லிம்களின் ஊர் அடிப்படை கோரிக்கைகளும் இனம் அடிப்படையிலான தமிழர்களின் இடம்சார் கோரிக்கைகளும் கிழக்கு மாகானம் முழுமைக்கும் பொதுவானதாகும். இது முஸ்லிம்களும் தமிழர்களும் முதன்முதல் சந்திக்கிற பிரச்சினையல்ல என்பதை உணர வேண்டும். அதிஸ்ட்ட வசமாக இனம் சார் இட ஆழுமைப் பிரச்சினையை அக்கரைபற்று ஆலையடி வேம்பு மக்கள் ஆரம்ப நிலையிலேயே தனிக்குடித்தன அடிப்படையில் சுமூகமான தீர்வு கண்டுள்ளனர். அதே போலவே முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் ஊர் சார் இட ஆழுமை பிரச்சினைக்கும் அக்கரைபற்று சம்மாந்துறை அட்டாளைச் சேனை முஸ்லிம் மக்கள் கடந்த காலங்களில் சுமூகமான தனிக்குடித்தன அடிப்படையிலேயே தீர்வுகண்டுள்ளனர். இந்த நல்லுதாரனத்தை நாம் கருத்தில் கொள்ள தவறக்கூடாது. இனம் ஊர்சார் இட ஆழுமை தொடர்பான கோரிக்கைகள் கோரிக்கைகள் இன்று கல்முனையில் முனைப்புப் பெற்றுள்ளது. இதன் தீர்வு எதிர்காலத்தில் கிழக்கு மாகாண பிரச்சினைகளை தீர்பதற்கான முன் உதாரணமாகவும் அமையும். கல்முனை கூட்டுக்குடும்பம் கண்ணீரும் இரத்தமும் சிந்தாமல் சுமூகமான நட்புறவுள்ள தனிக்குடும்பங்களாக மாறுவதை அங்கீகரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
Post a Comment