Header Ads



பள்ளிவாசல் இமாம்களின் வாழ்க்கையும், பிரச்சினைகளும்

நமது நாட்டில் 2500 இக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இந்தப் பள்ளிவாசல்களில் அனேகமானவற்றில்  ஒருவர் இமாமத்துச் செய்வதற்காகவும் இன்னொருவர் பள்ளிவாசலை பராமரிக்கவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.  ஆனால் அதிகமான பள்ளிவாசல்களில் இந்த பள்ளிவாசல் பணியாளர்களுக்காக வழங்கப் படும் சம்பளம்  போதாமல் உள்ளது. பலர் நாளாந்த வாழ்க்கையை கொண்டு நடாத்த மிகவும் சிரமப் படுகின்றனர். சிலர் வாய் விட்டுக் கேட்க வேண்டிய நிலைக்கும் தள்ளப் படுகின்றனர். இந்த நிலமை இன்வரும் காலங்களிலும் தொடர நாம் அனுமதிக்கக் கூடாது.

திருமணம் முடிக்காத ஒருவராயின் அவரின் நாளாந்தச் செலவே பெரிய தொகையாக இருக்கின்றது. மேலும் அவர் தனது பெற்றோருக்கும் செலவுக்கு பணம் அனுப்ப வேண்டியவராக இருப்பார். எனவே இன்றைய காலகட்டத்தில் திருமணம் முடிக்காத ஒருவரின் செலவுகளுக்கும் குடும்ப பராமரிப்புக்கும் ஏறக் குறைய 25000 ரூபா தேவைப் படும். 

திருமணம் முடித்த ஒருவரின் நிலை மிகவும் பரிதாபம். அவருக்கான  செலவினங்கள் அவரின் பெற்றொருக்கான  பரமரிப்புச் செலவு  மனைவிக்கான செலவுகள் பெருநாள் திருமண வைபவக்களுக்கு அணிவதற்கான ஆடைச் செலவுகள் என்று திருமணம் முடித்த ஒருவரின் செலவுகள் 35 ஆயிரம்  தொடக்கம்  40 ஆயிரம் வரை உள்ளது. 

அவருக்கு பிள்ளைகள் பிறக்கும் போது அவர்களுக்கான செலவுகள் மேலும் அதிகரிக்கின்றது. இன்றைக்கு இலங்கையில் நுகர்வோர் சங்கங்கள் சராசரியாக மாதமொன்றுக்கு ஒரு குடும்பத்துக்கு 25000 ரூபா தேவை என மதிப்பீடு செய்துள்ளன.  இது மரக்கறியுடன் சாப்பிடுபவர்களின் 80 சதவிகிதமான மக்களினதும் 20 சதவிகிதம் கறியுடன் சாப்பிடுபவர்களின் செலவுகளை மதிப்பீடாக வைத்துச் செய்யப் பட்ட அளவீடாகும். 

ஆனால் தனியே முஸ்லிம் குடும்பங்களை எடுத்துக் கொண்டால் அவர்களின் மாதாந்த  செலவுகள்  சராசரி மக்களின் செலவீனங்களை விட அதிகமானதாகும். இன்றைய காலகட்டத்தில் ஒரு கிலோ மாட்டிறைச்சி 1000 ரூபா ஆடு 2000 ரூபா கோழி 500 ரூபா மரக்கறிகள் எல்லாம் ஒரு கிலோ 150 ரூபாவுக்கு மேற்பட்டது.  அதே வேளை சாதாரண ஒரு குடும்பத்துக்கு தண்ணீர் கட்டணம் 1500 ரூபாவாகவும் மின் கட்டணம் 2000 ரூபாவாகவும்  காணப்படுகின்றது.  இவ்வாறான கட்டணங்கள் மற்றும் உணவு போக்குவரத்து செலவுகள் அடிப்படையில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் மாதாந்தச் செலவு 35000 ரூபாவுக்கு மேற்பட்டதாக இருக்கின்றது. புதிய உடைகள் வாங்கவோ நகைகள் வாங்கவோ சேமிக்கவோ அவர்களின் பொருளாதார நிலை அவர்களை அனுமதிப்பதில்லை. 

பள்ளிவாசல்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளமோ 15000 தொடக்கம் 20000 வரையே வழங்கப் படுகின்றது. தேவைகள் ஆயிரத்தில் இந்த சிறுதொகையைக் கொண்டு அவர்கள் எந்தத் தேவையை நிறைவு செய்வார்கள். 

எனவே இந்த விடயத்தில் பள்ளிவாசலுக்கு நம்பிக்கையாளர்களாக இருப்பவர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். புதிய டிரஸ்டிகள் வந்தால் அவர்களுடைய முதல் வேலையே டொயிலட்டை உடைத்துக் கட்டுவது கார்பட் போடுவது குளிர்பதனாக்கி பொறுத்துவது என்று முதல் இருந்த டிரஸ்டியை விட நாங்கள் நன்றாக செய்தோம் என்று காட்டுவதற்காகவோ  அல்லது ஏனைய பள்ளி டிரஸ்டிகளை விட நாங்கள் நன்றாக செய்கிறோம் என்றூ காட்டுவதற்க்காகவோ  சில செலவீனங்களைச் செய்கின்றார்கள்.  அவ்வாறான செலவுகளைச் செய்ய முன்னர் அந்த வேலைத்திட்டம் மிகவும் அத்திவசியமானதா என்றூ பார்க்க வேண்டும். மேலும் அந்த வேலைத் திட்டம் முக்கியமானதா அல்லது சமூகத்தில் வறூமையுடன் வாழும் மக்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வது முற்படுத்தப் பட வேண்டுமா என்பதை  கலந்தாலோசிக்க வேண்டும்.  

 ஒவ்வொரு பள்ளியிலும் கடமை புரியும் ஊழியர்கள் இமாம்கள் வீட்டில் எத்தனை குமர் இருக்கின்றது அவர்களுக்கு திருமணம் செய்வதற்கு போதுமான நிதி இருக்கின்றதா அவர்களுக்கு சொந்தமாக  சிறிய வீடாவது இருக்கின்றதா போன்ற தகவல்கள் யாரிடமும் இருப்பதில்லை.  இது தவறான செயற்பாடாகும். 

சமுதயத்தில் சிலருக்கு  வறுமை நிலமையையும் சிலருக்கு செல்வந்த நிலமையையும் அல்லாஹ் கொடுத்துள்ளான். வசதிபடைத்தவர்கள் ஏழைகள் விடயத்திலும் வருமானப் பற்றாகு குறையுள்ள மிஸ்கீன்கள் விடயத்திலும் அதிக கரிசனை காட்டி உதவ வேண்டும் என்பதற்காகவே சிலருக்கு வசதி வாய்ப்புகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான் என்பதை நாம் உணர வேண்டும். 

வெள்ளம் மண்சரிவு போன்ற தற்காலிக அனர்த்தங்களின் போது பாதிக்கப் பட்ட அந்த மக்களை கவலையுடன் பார்த்து அவர்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு தினமும் கஷ்டத்தில் வாழும் சில பள்ளிவாசல் இமாம்களோ அல்லது ஊழியர்களோ கவனிக்கப் படுவதில்லை என்பது இன்னொரு கவலையான விடயமாகும்.  

எனவே பள்ளிவாசல்களில் கடமை  புரியும் ஊழியர்களின் சம்பளத்தை  திருமணமாகாதவர்களுக்கு ஆகக் குறைந்தது  25000 ஆகவும் திருமணம் முடித்தவர்களுக்கு  30000 ஆகவும் பிள்ளைகள் உள்ளவர்களுக்கு 40000 ஆகவும் நிர்ணயிக்க வேண்டும். இதன் பொறுப்பு ஒவ்வொரு பள்ளியின் டிரஸ்டிமாறுடையதாகும்.  இதனால் தான் பள்ளியின் டிரஸ்டியாக வருவதற்குள்ள நிபந்தனைகளில்  அவர் செல்வந்தனாக இருக்க வேண்டும் சகாத் கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளன.
பள்ளிவாசல் பணியாளர்களின் சம்பளத்தை போதியளவு வழங்க பள்ளிக்கு வருமானம் போதாதவிடத்து செல்வந்தர்களான டிரஸ்டிமார் தமது பணத்திலிருந்து அந்த போதுமான சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருநாள் மற்றும் நோன்புகால வசூலிப்புகள் இந்த பணியாளர்களுக்காக செய்யப் பட்டு அவை வேறாக வழங்கப் பட வேண்டும். 

அதேவேளை மஹல்லாவாசிகளுக்கும் ஒரு கடமையுண்டு. பள்ளிவாசல்களில் தொழப் போனால் அங்குள்ள பேன்கள் (மின்விசிறிகள்) ஒளி விளக்குகள் நீர் என்பவற்றை நாம் உபயோகிக்கின்றோம். இவையெல்லாவற்றுக்கும் கட்டணங்கள் செலுத்த வேண்டியுள்ளது. சாதாரண வீடொன்றில் 2000 ரூபாவுக்கு மின்சாரக் கட்டணம் வருகின்றது என்றால் பள்ளிவாசலுக்கு ஒரு மாதத்துக்கு நாம் மின்சாரம் நீர் இதர சலுகைகளை பாவிப்பதற்காக ஒரு 500 ரூபா கொடுக்கக் கூடாதா?  வசதி படைத்தவர்கள் அதை விட அதிகமாகக் கொடுக்கலாம். வசதி குறைந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பங்களிப்பு பள்ளிச் செலவுகளுக்காக செய்யவேண்டும், நமது வீட்டில் பாவிக்கும் நீர் மின்சாரம் என்பவற்றுக்கு கட்டணம் செலுத்துகின்றோம். ஆனால் பள்ளியில் அவற்றை உபயோகித்து பயன் பெறும் நாம் அவற்றுக்கு மாதாந்தம் ஒரு 100 ரூபா பங்களிப்புச் செய்யாமல் இருக்கின்றோம். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்களுடைய மஹல்லாக்களுக்கு பங்களிப்புச் செய்வது அந்த இறையில்லங்கள் சிக்கலின்றி இயங்க வழிவகுக்கும். இவ்வாறு செய்வது அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய வெகுமதிகளை இம்மையிலும் மறுமையிலும் பெற்றுத்தரும். 

மாதாந்த சந்தாவையும் வேறாக செலுத்த வேண்டும். இவ்வாறு ஒவ்வொருவரும் பங்களிப்புச் செய்யும் போது மாதாந்த சந்தா வருமானத்தை விட அதிக நிதி சிலவேளைகளில் சேரும். இவ்வாறு சேருமிடத்து அந்த நிதியைப் பயன்படுத்தி பள்ளிவாசல் பணியாளர்களுக்கு போதிய சம்பளம் வழங்க முடியும். ஊரிலுள்ள ஏழைகளுக்கு உதவ முடியும் வாழ்வாதார வசதிகளைச் செய்து கொடுக்க முடியும்.

மேலும் சில பள்ளிவாசல்கள் கடைகள் சொத்துக்கள் மூலமாக செலவுக்கு மேலதிகமாக  வருமானங்களை பெறுகின்றன. அவ்வாறான பள்ளி நிர்வாகிகள் தமது மேலதிக வருமானத்தை வருமானம் குறைந்த பள்ளிவாசல் மதரஸாக்கள் என்பவற்றுக்கு வழங்க முடியும். ஊரிலுள்ள ஏழைகளுக்கு வீடு தொழில் நிதி  போன்றவற்றை வழங்கி ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும். அவ்வாறு செய்யும் போது முதலில் தமது மாவட்டத்துக்கும் பிறகு ஏனைய மாவட்டங்களுக்கும் உதவ முடியும். 

சிலர் இது அகில இலங்கை ஜம் இயதுல் உலமாவின் பொறுப்பு எனக் கூறுகின்றனர். பள்ளிவாசல்களின் பரிபாலனத்தை மேற்பார்வை செய்யும் அமைப்பாக வக்பு சபையும் அதன் தாயமைப்பாகிய முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களமும் தான் காணப் படுகின்றது. ஒவ்வொரு ஊர்களினதும் பள்ளிவாசல்களினதும் வருமான விபரங்கள் என்பவற்றைத் திரட்டுவது என்பது இலகுவான காரியமல்ல. அத்துடன் தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு திரட்டும் செயற்பாடுகளை சுமூகமான நிலை ஏற்படும் வரும் பின்போடுவது தான் நல்லது. 

எனவே பள்ளிவாசல் இமாம் மற்றும் பணியாளர்களின் சம்பள விடயத்தில் எல்லோரினதும் பங்களிப்பும் அவசியமானது.  ஆனால் நிர்வாக சபையே கூடிய பொறுப்புடையவர்களாக இருப்பர். 

ஜான் முஹம்மத்

1 comment:

  1. Kaalathitku thevayana padivu. Ulamakkal orinaindu korikkaigalai munwaippadu melum kaarhiramana pradibalippai undupannalam.

    ReplyDelete

Powered by Blogger.