"என்ன ஹாஜி நல்லா, மெலிஞ்சி போயிட்டீங்க...”
“ஒன்னுமில்லை கொஞ்சம் சுகர் இருக்கு அதுதான்”..... “தம்பி கொஞ்சம் சீனி கொறச்சி tea ஒன்று “...... “என்ன ஒங்களுக்கும் இந்த வயசில சீனி வருத்தமா?” இது நமது வாழ்வில் தினமும் கேட்கின்ற, சாதாரணமாக கேட்கின்ற உரையாடல்கள். ஒவ்வொரு நாளும் இப்படியான நிறைய உரையாடல்களை நாம் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம். சீனி அல்லது டயபடிக்( diabetic) என்பது சமூகத்தில் ஒரு கௌரவ சொல்லாக மாறியிருக்கிறது, இது சமூகத்தை விட்டும் பிரிக்க முடியாத, வாழ்வின் அங்கமாக மாறிவிட்டிருக்கின்றது. மிக அண்மைய தரவுகளின் அடிப்படையில் நம்மில் மூவரில் ஒருவர் இந்த வியாதியினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது மிக கவலை தரும் செய்தியாக இருக்கிறது. சிலவேளைகளில் இதை வாசிக்கின்ற நாமோ, அல்லது நமது உறவினர்கள், நண்பர்களில் குறைந்தது ஒருவரோ இந்த நோயாளியாக இருப்பதை யாரும் மறுப்பதிற்கில்லை.
டயபடிக், பொதுவாக சீனி வியாதி என்பதாக அறியப்பட்டாலும் அது இந்த நோயின் சரியான விளக்கத்தை வழங்குவதாக இல்லை. நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருப்பது இந்த வியாதி ஏற்படுவது சீனியினால் என்று. அதனால் அவர்கள் சீனியைத் தவிர்த்து, அனைத்து வகையான ஏனைய மாப்பொருட்களை உண்ணுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது மிகவும் தவறான ஒரு உணவு பழக்கத்தும், கட்டுப்படுத்த முடியாத நோய் நிலைமைக்கும் இட்டுச் செல்லக்கூடியதாகவும் இருக்கின்றது.
டயபடிக் நமது உடலில் ஏற்படுகின்ற ஒரு குணப்படுத்த முடியாத நீண்ட கால பிரச்சினைகளை ஏற்படுத்தும் நோய் நிலைமை. இது உடலில் சாதரணமாக பேண வேண்டிய சீனியின் அளவை விட மேலதிக அளவில் சீனி பேணப்படுவதால் ஏற்படுகின்றது. அதாவது மாப்பொருள் (carbohydrates) உணவுச் சமிபாட்டில் உடலில் ஏற்படுகின்ற ஒரு மாற்ற நிலை. இதனால் குருதியில் பேணப்பட வேண்டிய சீனியின் அளவு தாறுமாறாக அதிகரித்து செல்லுவது தான் இந்த நோயின் ஆபத்தாக இருக்கிறது.
இந்த டயபடிக் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால் சில அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் தினமும் உட்கொள்கின்ற உணவு வகைகளை நான்கு வகைகளாக பிரிக்கலாம்.
1.Carbohydrates எனப்படும் மாப்பொருட்கள் : நமது உணவின் பெரும்பகுதி இதுவாகவே இருக்கின்றது. சோறு, மாவு, கடலை, சீனி, இனிப்பு வகைகள், பழச்சாறு, தானியங்கள், பருப்பு, கிழங்கு வகை என்பன இதில் அடங்கும்.
2.Protein எனப்படும் புரத உணவுகள் - பெரும்பாலும் மாமிச உணவுகள் இதில் அடங்குகின்றன. இறைச்சி, மீன், முட்டை, பால் போன்ற உணவுகள்.
3.Lipid எனப்படும் கொழுப்பு வகைகள் - இதில் எண்ணை வகைகள், பட்டர், மீன், இறைச்சி,முட்டை கொழுப்புக்கள் என்பவை அடங்குகின்றன.
4.ஏனயவை Vitamin & Minerals - விட்டமின்களும் கனியுப்புக்களும் இவைகள் மரக்கறி, பழங்கள் மற்றும் கீரைகள், தானியங்கள், நீர் ,அதுபோல் இறைச்சி, மீன் முட்டை போன்றவற்றில் மிகச் சிறிய அளவுகளில் காணப்படுகின்றது.
நாம் உட்கொள்கின்ற இந்த உணவுகள் எல்லாமே நமக்கு அன்றாட தொழிற்பாட்டுக்கு தேவையான சக்தியைப் பிறப்பிப்பதோடு போக எஞ்சிய மீதி சேமிப்பாக சேர்த்து வைக்கப்படுகின்றது. ஆனால் நாம் அதிகம் பேசுகின்ற இந்த டயபடிக் என்பது முற்றிலும் 1ம் வகை சார்ந்த மாப்பொருள்களின் தொழிற்பாட்டிலயே தங்கியுள்ளது. நாம் நமது உணவில் எடுத்துக்கொள்கின்ற எந்த மாப்பொருளும் உடலுக்குள் சென்றதும் அவை சீனியாக மாற்றப்படுகின்றன. இது பல்வேறுபட்ட சிக்கலான படிமுறைகள் ஊடாக நடைபெறுகின்றது. சீனியாக மாற்றும் செயற்பாடு வாயில் தொடங்கி இரைப்பை ,குடல், ஈரல், மண்ணீரல் என நீண்டு கொண்டு செல்கின்றது. இவ்வாறு பல படிமுறை மாற்றம் பெற்ற மாப்பொருட்கள் இறுதியில் சீனியாக மாற்றப்பட்டவுடன் இரத்தத்தில் கலக்கப்பட்டு உடல் முழுவதும் எடுத்துச் செல்லப்படுகிறது . இப்போது இரத்தத்தில் உள்ள சீனி (Glucose) ஆனது Pancreas எனப்படும் மண்ணீரலினால் சுரக்கப்படும் இன்சுலின் ஹோர்மோன் இந்த சீனியை,இந்த குளுக்கோசை ,நமது உடல் கலங்களுக்கும் (Cells), ஈரலுக்குள்ளும் (Liver) உட்புகுத்துகின்ற வேலையை செய்கின்றது. உட்புகுந்த இந்த சீனி மாத்திரமே நமக்கு தேவையான சக்தியை பிறப்பிக்கக்கூடிய ஆற்றலை கொண்டிருக்கிறது. இந்த தொழிற்பாடு தான் நமது இரத்தத்தில் சீனியின் அளவை ஒரு சீராக வைத்திருக்க உதவுகின்றது. இதற்கு எதிர்மாற்றமான நிலையே டயபடிக் எனப்படுகின்றது, இதன் போது நமக்கு தேவையான இன்சுலின் சுரக்கப்படாமல் போகின்றது அல்லது சுரக்கப்படுகின்ற இன்சுலின் தரமற்றதாக, பயன்பாட்டில் குறைவுடையதாக அல்லது சொற்ப அளவானதாக சுரக்கப்படுகின்றது, இதனால் குளுகோசின் அளவு இரத்தத்தில் கட்டுப்பாட்டிலில்லாமல் அதிகரிக்கின்றது.
இந்த டயபடிக் என்பது மிக மோசமானதொரு நோய் நிலைமையாகும். சில மருத்துவ பேரறிஞர்களின் கருத்துக்களின் படி இது( கன்சர் )புற்றுநோயை விட கொடியதொரு நோயாக கருதப்படுகிறது. மெல்ல மெல்ல கொல்லும் கொடிய நோய் என்றால் கூட அது மிகையாகாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சமூகம் மிகவும் பராக்கற்ற அல்லது அதிகம் கவனம் செலுத்தாத, பயப்படாத நோயாகவும் இதுவே காணப்படுகிறது. யாராவது ஒருவர் டயபடிக் நோயாளியாக அடையாளப்படுத்தப்பட்டால் இனி வாழ் நாள் முழுவதும் அந்நோயுடனே அவர் வாழ்ந்து மரணிக்க வேண்டிய ஒரு துர்பாக்கியமிக்க நிலைமைக்கு ஆளகின்றமை தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.
டயபடிக் ஏன் எற்படுகின்றது என்பதற்கு தெளிவான ஒற்றைக் காரணம் இல்லாவிட்டாலும் இது பல்வேறு காரணிகளினால் ஏற்படுகிறது. பரம்பரையில் தாய் தகப்பனுக்கு அல்லது உறவுகளுக்கு உள்ள போது ஒருவருக்கு இந்த நோய் ஏற்படும் சாத்தியம் அதிகமாகவுள்ளது. அதுபோலவே கட்டுப்பாடற்ற, ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்கள், போதியளவு உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாமை என இந்த பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது.
டயபடிக் ஏற்படாமல் தடுப்பது எப்படி?, ஏற்பட்டால் நோய் நிலைமைகளிலிருந்து விடுபடுவது எப்படி? என்பதுதான் இப்பொழுது நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்ற மிகப் பெரிய சவால்.டயபடிக் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறையை குழந்தை கர்ப்பத்தில் தரித்த காலத்திருந்து தாயின் உணவுப் பழக்கத்திலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும். கர்ப்ப காலங்களில் தாய்மார் தங்களது உணவில் போதிய கவனம் செலுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான சாப்பாடுகள், சீனி, சுவையுப்புக்கள், நிறமூட்டிகள் கொண்ட உணவுகளை முற்றாகத் தவிர்ந்து போசாக்கான மரக்கறிகள், பழம், பால், மீன், முட்டை என தேகாரோக்கியம் உள்ள உணவுகளில் அதிகம் கவனம் செலுத்துதல் வேண்டும். அது போல் மன இறுக்கம், மன உளைச்சல் போன்ற உள நிலைமைகளிலிருந்து விடுபட்டு போதுமான தூக்கம் மன அமைதி போன்றவற்றில் கவனம் செலுத்துதல் மிக முக்கியமானதாகும். இதன் மூலம் தங்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் டயபடிக் இருந்து பாதுகாப்பதோடு, தங்களது குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் ஏற்படும் இந்த நிலைமையையும் பாதுகாக்க முடியும். தாய்ப்பால் ஊட்டுதல், இரண்டு வருடங்களுக்காவது தாய்ப்பால் ஊட்டுதல், பிற்காலத்தில் குழந்தைகளுக்கு டயபடிக் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாக நவீன ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன.
உணவுப் பழக்கம் அடுத்த முக்கியமான காரணியாகும்.குழந்தைகளும், பெரியவர்களும்,
அதிகளவான இனிப்புப் பண்டங்கள், மாப்பொருட்கள், சுவையூட்டிகள், போத்தலில் அடைக்கப்பட்ட , பதப்படுத்தப்பட்ட உணவுகளை இயலுமானவரை தவிர்த்தல் மிக முக்கியமாகும். நாம் எதைச் சாப்பிடுகிறோமோ எதைக் குடிக்கிறோமோ அதுவே நமக்கு தேகாரோக்கியம் மிக்கதாகவோ அல்லது நோய்க்காரணியாகவோ மாறிவிடுகின்றது என்பது தான் இதில் உள்ள இரகசியம். சீனியின் பாவனையை எப்படி நாம் குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறோமோ அதுபோலவே மாப்பொருட்களை(சோறு, கிழங்கு, மாவுப் பண்டங்களை) இயலுமானவரை குறைத்துக் கொள்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். மாவுப் பொருட்கள் என்கின்ற போது அது பிஸ்கட், சோற் ஈட்ஸ், பேக்கரி உணவுப் பண்டங்கள், என விரிந்து செல்கின்ற பட்டியலை கொண்டிருக்கிறது. இந்த மாப்பொருட்களை குறைத்துக் கொள்வதனால் நமது இன்சுலின் தேவைகளை குறைத்துக் கொள்ளலாம். அதுபோலவே சீனியின் அளவையும் இறுதியில் குறைத்துக் கொள்ளலாம்.
அளவான, தொடர்ச்சியான உடற்பயிற்சி நமது உடலின் குருதி அளவை குறைத்துக் கொள்ள உதவும் மிக முக்கிய காரணியாக இருக்கின்றது. உடற்பயிற்சி என்பது ஜிம் அல்லது விளையாட்டு மைதானத்திற்கு சென்றுதான் மேற்கொள்ள வேண்டும் என்பது ஒரு தப்பான கணிப்பீடாக உள்ளது. சாதாரணமாக உடல் வியர்த்துக் கொள்கின்ற அளவுக்கு நடைப்பயிற்சியோ, உடல் உழைப்போ, வீட்டு வேலையோ, தொடர்ச்சியாக தினமும் செய்யக்கூடியதாக இருத்தல் கூட நல்ல உடற்பயிற்சி தான். உதாரணமாக கடைகளுக்கு, வணகஸ்தலங்களுக்கு நடந்து செல்லுதல், வீட்டைச் சுத்தப்படுத்தல், சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தல், இயலுமானவரை மோட்டார் வாகனங்களை தவிர்த்து சைக்கிள்களை பயன்படுத்தல், நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதை தவிர்த்தல் , இப்படி பற்பல வகைகளில் உடற்பயிற்சி செய்து கொள்ள முடியும்.
அடுத்ததாக இன்சுலின் தொழிற்பாட்டை, உற்பத்தியைக் கூட்டுதல், இதற்கு நோன்பிருத்தல் (intermittent fasting), பசி வந்தால் மட்டுமே சாப்பிடுதல், இடை உணவுகளை இயன்ற வரை தவிர்த்தல், மன அழுத்தத்தை இல்லாமல் செய்தல் என்பன மிகவும் அதிகம் பயனுடையவையாக இருக்கின்றன.நமது மூதாதையர்களின் நல்ல பண்புகளான அதிகாலையில் விழித்தெழுவதும், நேரகாலத்தோடு தூங்கச் செல்வதும் உடலின் எதிர்ப்புச் சக்தியை, நோய் எதிர்ப்பு வீரியத்தை அதிகரிக்க உதவும் என நவீன விஞ்ஞானமும் உறுதி செய்கிறது.
டயபடிக் ஏற்கனவே வந்துவிட்டாலும் வராவிட்டாலும், இந்த நோயிலிருந்து பாதுகாப்பு பெற ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையை முற்றாக மாற்றிக் கொள்ள வேண்டும். உணவுப் பழக்கத்தை மாப்பொருட்கள் அதிகம் கொண்ட உணவிலிருந்து மாற்றி அதிக புரதம், மரக்கறி போன்ற உணவுகளை உட்கொள்ள பழகிக் கொள்ளல் நலம். வயிறு முட்ட உண்பதை தவிர்த்துக் கொள்ளல், வயிற்றை எப்பொழுதும் ஓரளவு காலியாக வைத்திருத்தல், அளவான உடற்பயிற்சி செய்தல், என்பன எல்லோருக்கும் நன்மை தரும் விஷயங்களாக இருக்கின்றன.
டயபடிக் உள்ளவர்கள் தொடர்ச்சியாக வைத்திய ஆலோசனைகளை பெற்று அதனடிப்படையில் குருதியில் உள்ள சீனியை கட்டுப்படுத்திக் கொள்ளல், உரிய காலங்களில் கண்களை, இதயத்தை, நரம்புத் தொகுதிகளை, சிறுநீரகங்களை சீராக பரிசோதனை செய்தல், குருதியில் கொழுப்பின் (Cholesterol) அளவை உரிய முறையில் கட்டுப்பாட்டில் வைத்தல் என்பன மிக அவசியமாகும்.டயபடிக் என்பது வெறும் சீனியின் அளவு மாத்திரமல்ல அது கண்களை குருடாக்கும், கால்களை முடமாக்கும், சிறுநீரகங்களை (Kidney) பழுதாக்கும், அதுபோல் உடலை இழைத்து நோயாளியாக்கி முடக்கி விடும் என்பதை நாம் ஒவ்வொருவரும் விளங்கி வைத்துக் கொள்ள வேண்டும். குருதியில் தொடர்ச்சியாக அதிகரித்த சீனியினால் உடல் அவயங்கள் எல்லாவற்றுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக கண்பார்வை வீச்சு குறைவடைதல், இரவுப் பார்வை குறைபாடு, கண் மங்கமாகுதல், என விரிந்து இறுதியில் கண் குருடாகுதல் என்பதில் இதன் பாதிப்பு முடிவடைகின்றது. அதுபோல இரத்த குழாய்களில் அதிகளவான கொழுப்பு படிவதால் அவைகள் அடைபட்டு குருதியோட்டம் தடைபடுவதலால் ஹார்ட் அட்டக், நெஞ்சுவலி, பாரிசவாதம், காயங்கள் ஆறாத்தண்மை அதனால் அவயங்களை இழத்தல் என நீண்டு செல்லும் இந்தப் பட்டியல் இறுதியில் கிட்னி பெய்லியர் எனும் நிலையில் முடிவடைகின்றது.
குருதியில் அதிகரிக்கின்ற சீனியின் அளவு ஆரம்பத்தில் எந்தவிதமாக நோய் அறிகுறிகளையும் தென்படுத்தாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் நிறையப்பேர் தங்களுக்கு டயபடிக் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்வதற்கு பல வருடங்கள் கடந்து சென்று விடுகின்றது. சில சமயங்களில் இந்த நோயின் தாக்கம் முற்றி இரண்டு கிட்னிகளும் பழுதடைந்த பிறகுதான் தெரிய வந்த சம்பவங்கள் நிறையவே இருக்கின்றன. இந்த நோயின் ஆரம்பக் குறிகளாக அதிக தாகம் பசி, அதிகளவு சிறுநீர் வெளியேறல், தூக்கத்தில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழித்தல், உடல் இழைத்துப் போகுதல், தகுதியான காரணமில்லாமல் உடல் நிறை குறைதல் என இந்தப் பட்டியல் நீட்சியடைகின்றது. ஆகையால் 40 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவரும், விஷேடமாக குடும்பத்தில் டயபடிக் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தங்களது குருதியில் சீனியின் அளவை பரிசோதித்து கொள்வது மிக நன்று.
ஆகவே நாம் ஒவ்வொருவரும் இது குறித்து கவனம் எடுப்பதோடு நமது பெற்றோர், உறவினர்கள், நண்பர்களுக்கு இது பற்றி விழிப்புணர்வூட்டுவதும் நம் கடமைகளில் உள்ளதுமாகும். அதுபோல் வருமுன் காப்பதே சிறந்தது என்பதை புரிந்து நமது உணவுப் பழக்கத்தில் உடனடி மாற்றம் கொண்டுவருவதும் அவசிய தேவையாக உள்ளது.
Post a Comment