Header Ads



கல்முனை மாநகரின் இருப்புக்கு, அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த சதிக்கும் நாம் துணை போகமுடியாது

தனியான நகர சபையை வென்றெடுப்பதற்காகவே சாய்ந்தமருது தோடம்பழ சுயேட்சைக் குழுவுக்கு எமது மக்கள் வாக்களித்தார்களே தவிர, கல்முனை மாநகர சபையை சீர்குலைத்து, முடக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அல்ல என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது;

"சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான நகர சபை உருவாக்கப்பட வேண்டும் என்ற எமது மக்களின் நீண்ட கால போராட்டம் இன்று தோடம்பழ சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டிருப்பது குறித்து மிகுந்த வேதனையடைகிறேன்.

ஏனெனில் எமது மக்களுக்கு தனியான நகர சபையொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக சில வருடங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண சபையில் தனி நபர் பிரேரணை கொண்டு சென்று, சிலரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அதனை நிறைவேற்றி, இம்மாகாண சபையின் பரிந்துரையை பெற்றுக் கொண்டது முதல் இன்று வரை மிகுந்த கரிசனையுடன், தனிச்சபைக்காக பாரிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றவன் என்ற வகையில் இவர்களது இந்த செயற்பாடு கண்டு வேதனையடையாமல் இருக்க முடியாது.

அதேவேளை எமக்கென தனியான நகர சபை வேண்டும் என்று கோரி சில பொது அமைப்புகளினால் பல வருடங்களாக சந்திப்புகளும் சாத்வீக போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தபோதிலும் கடந்த வருடம் நவம்பர் மாதம் தொடக்கம் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைமைத்துவத்தின் கீழ் இவ்வூர் மக்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து பாரிய எழுச்சிப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்போது நானும் எனது அரசியல் பதவிகளை ஒருபுறம் வைத்து விட்டு, இப்போராட்டங்களுக்கு பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்தேன். 

அதனைத் தொடர்ந்து கடந்த பெப்பரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு சாய்ந்தமருது சார்பில் பெரிய பள்ளிவாசலினால் சுயேட்சைக் குழுவொன்று களமிறக்கப்பட்டபோது எமது ஊரின் ஒற்றுமை, இலக்கு என்பவற்றை கருத்தில் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் இப்பிரதேசத்தில் இருந்து எவரையும் வேட்பாளராக நிறுத்தாமல் விட்டுக்கொடுப்பு செய்தது மாத்திரமல்லாமல் இந்த சுயேட்சைக்குழுவை ஆதரிக்குமாறும் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

சாய்ந்தமருது பிரிந்து செல்கின்றபோது கல்முனை மாநகர சபையின் இருப்புக்கு எவ்வித பாதகமும் ஏற்படாது என்பதை நிறுவுவதற்காகவும் எமது மக்களின் ஒற்றுமையையும் பலத்தையும் வெளிக்காட்டி அரசாங்கத்திற்கும் எமது தலைமைகளுக்கும் அழுத்தம் கொடுப்பதற்காகவுமே இப்படியொரு சுயேட்சைக்குழு களமிறக்கப்பட்டது என்பதை எவரும் மறந்து விடலாகாது. ஆனால் இன்று எமது போராட்டமானது கல்முனை மாநகர சபைக்கும் அடுத்த ஊர்களுக்கும் எதிரானது என்பது போல் சிலரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. 

பள்ளிவாசலை முன்னிறுத்திய இந்த சுயேட்சைக்குழு சார்பில் தெரிவு செய்யப்பட உறுப்பினர்களது பொறுப்பென்பது தமக்கு கிடைத்திருக்கின்ற மக்கள் ஆணையை பயன்படுத்தி, தனியான நகர சபைக்கான முயற்சிகளை முன்னெடுப்பதும் அத்தகைய சபையொன்று கிடைக்கும் வரை கல்முனை மாநகர சபை மூலம் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு ஆற்ற வேண்டிய சேவைகளை பெற்றுக் கொடுப்பதுமாகவே இருக்க வேண்டும். இதை விடுத்து மாநகர மேயருக்கெதிரான அரசியலை செய்வதும் மாநகர சபை நிர்வாகத்தை முடக்க முற்படுவதும் எமது சாய்ந்தமருது பிரதேசத்தின் பின்னடைவுக்கே வழிவகுக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எமது சுயேட்சைக்குழுவில் தெரிவு செய்யப்பட சில உறுப்பினர்கள், பள்ளிவாசலினால் உருவாக்கப்பட்ட சுயேட்சைக்குழுவின் தாத்பரியம், கொள்கை, கோட்பாடுகள் அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, மக்கள் ஆணையை மீறி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற சில அரசியல் தரப்புகளின் அடிவருடிகளாக மாறி, தமது சுயநல அரசியலை முன்னெடுத்து செல்வதை அவதானிக்க முடிகிறது.

அந்த வகையில்தான் அத்தகைய அரசியல் தரப்புகளுடன் இணைந்து கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபைக்கூட்ட அமர்வுகளை தொடர்ச்சியாக குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் அந்த மாநகர சபையின் இயல்பு நிலையை சீர்குலைத்து, முடக்குவதற்கு இவர்கள் முனைந்துள்ளனர். இச்செயற்பாடுகளின் மூலம் இந்த உறுப்பினர்கள் எதனை சாதிக்க விரும்புகின்றனர்? சில அரசியல் சக்திகளின் கொந்தராத்தை நிறைவேற்றுவதற்காகவா இவர்களை சாய்ந்தமருது மக்கள் தெரிவு செய்தனர் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

அரசியல் கட்சி சார்ந்தவர்கள் தமது அரசியல் இலாபங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்து விட்டு போவார்கள். ஆனால் அவர்களுடன் கூட்டுச்சேர்ந்து மாநகர சபையை முடக்குவதற்காகவா சாய்ந்தமருது மக்கள், தோடம்பழ சுயேச்சைக்குழுவுக்கு வாக்களித்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது பள்ளிவாசல் பிரகடனத்திற்கும் பள்ளிவாசலில் செய்யப்பட சத்தியத்திற்கும் மக்களின் நம்பிக்கைக்கும் செய்கின்ற பாரிய துரோகம் இல்லையா? இது விடயத்தில் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் நிலைப்பாடு என்ன?

கல்முனை மாநகர சபையின் ஊடாக தமது பிரதேசத்திற்கு தம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என எமது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் கருதினால், அந்த மாநகர சபையை முற்றாக பகிஸ்கரித்து ஒதுங்கிக் கொள்வதே சிறப்பான வழிமுறையாக அமையும். இந்த பகிஸ்கரிப்பானது எமது பிரதேசத்தின் ஒட்டுமொத்த மக்களும் அரசாங்கத்திற்கு கொடுக்கின்ற அழுத்தமாக அமையும் என்பதில் சந்தேகம் கிடையாது.

இதை விடுத்து பல ஊர்களையும் நிர்வகிக்கின்ற கல்முனை மாநகர சபையின் செயற்பாடுகளை சீர்குலைக்க  முற்படுவதனால் அந்த ஊர்களுக்கான சேவைகளையும் நாம் முடக்க முற்படுகிறோம் என்கின்ற பார்வையும் பகைமையுமே ஏற்படும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள கல்முனை மாநகரின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த சதி நடவடிக்கைகளுக்கும் நாம் துணை போக முடியாது. அத்தகைய செயற்பாடுகள் சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால அபிலாஷையை வெற்றி கொள்வதற்கு முட்டுக்கட்டையாகவே அமைந்து விடும் என்கிற அபாயம் இருப்பதையும் சம்மந்தப்பட்டோர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்பின்னணியில் எமது சுயேட்சைக்குழு உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அவசரமாக ஆராய்ந்து, தீர்க்கமான தீர்மானங்களையும் வழிகாட்டல்களையும் மேற்கொள்ளத் தவறினால் எமது மக்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள் என்பதுடன் தனிச்சபைக்கான எமது போராட்டமானது கறைபடிந்த வரலாறாக மாறி விடும் என்பதை பொறுப்புடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்." என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

2 comments:

  1. நல்ல புத்திமதி. புரிந்தால் சரி

    ReplyDelete
  2. வரவேற்கத்தக்க கருத்து... உங்களுடைய தனி உள்ளூராட்சி கோரிக்கை கல்முனையை விழுங்க காத்திருக்கும் இனவாத தமிழ் சக்திகளுக்கு சாதகமாகிவிட கூடாது

    ReplyDelete

Powered by Blogger.