மூதூர் விபத்தில் ஒருவர் வபாத் - பொலிஸ் காவலரணை உடைத்தெறிந்த மக்கள், வீதியை மறித்து டயர்போட்டு எரிப்பு
மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (11) இரவு வாகன விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். மூதூர் பெரிய பாலம் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான மஹ்ரூப் மௌசூன் (29 வயது) என்பவரே இவ்வாறு பலியானவராவார்.
பெரிய பாலம், மட்டக்களப்பு -மூதூர் வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மூதூரை நோக்கிச்சென்ற டிப்பர் வாகனமொன்று மற்றொரு வாகனத்தை முந்திச்சென்றபோது துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
டிப்பர் வாகன சாரதி துவிச்சக்கர வண்டியுடன் மோதிய பின்பு வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து ஓட்டிச்சென்றதால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் திரிசீடி சந்தியிலிருந்த பொலிஸ் காவலரணை உடைத்தெறிந்ததோடு வீதியை மறித்து டயர் இட்டு எரித்தனர்.
இதன்போது மட்டக்களப்பு - மூதூர் வீதியில் ஸ்தம்பித்திருந்த வாகனப் போக்குவரத்து சில மணித்தியாலயங்களின் பின்பு வழமைக்குத் திரும்பியிருந்தது.
வாகன சாரதியை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
தூரப் பிரதேசங்களுக்கு மணலை எடுத்துச் செல்லும் டிப்பர் வாகனங்கள் ஏனைய வாகனங்களை முந்திக்கொண்டு வேகமாகப் பயணிப்பதால் இதற்கு முன்பும் இத்தைகைய விபத்துக்கள் பல ஏற்பட்டுள்ளன.
மூதூர் மற்றும் சேருவில பிரதேசங்களுக்கு மேற்குப் புறமாக உள்ள கங்கை ஆற்றிலும் அதன் அயல் பகுதியிலுள்ள விவசாயக் காணிகளிலும் முறைகேடாக இடம்பெற்று வரும் மணல் அகழ்வினால் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான டிப்பர்கள் மணல் எடுத்துச் செல்லும் செயற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
முறைகேடாக இடம்பெற்றுவரும் மணல் அகழ்வை நிறுத்துமாறு மூதூர் மற்றும் சேருவில பிரதேசங்களைச் சேர்ந்த சமூக நல அமைப்புக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில் சில அரச அதிகாரிகளின் ஒத்துழைப்போடு முறைகேடான மணல் அகழ்வு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment