Header Ads



சாய்ந்தமருது மக்களின் நீண்டகால, அபிலாஷையை நிறைவேற்றுவாரா ஹரீஸ்..?

சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால அபிலாஷையை நிறைவேற்ற கிடைத்த பொன்னான தருணமே பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களுக்கு மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் பதவி தனித்துவமாக கிடைத்திருப்பதாகும். இதையிட்டு இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்களுக்கு சாய்ந்தமருது மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

"தனியான நகர சபை என்பது பல அரசியல் கட்சிகளாலும் தலைமைகளினாலும் வாக்குறுதியளிக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு, நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்து வந்ததன் விளைவாகவே சாய்ந்தமருது மக்களின் அதிகபட்ச ஆணையை பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே அமைச்சர் ஹரீஸ் கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போது  இம்மக்களின் பாரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 

ஆனால் தற்போதய சூழலில் சாய்ந்தமருது மக்களின் இக்கோரிக்கை தொடர்பில் கடந்த கால கசப்புணர்வுகளை இரு தரப்பினரும் மறந்து தனிப்பட்ட சுயநலன்களுக்கு அப்பால் ஊரின் நன்மை கருதி செயல்பட வேண்டிய தருணமாகவே சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் இதனை பார்க்கிறது. 

தனியான உள்ளூராட்சி மன்ற கோரிக்கை மீதான உண்மையான பற்றாளர்களும் மக்களும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்களுக்கு தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, இலக்கை அடைந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்துவதே புத்திசாலித்தனமாகும்.

நமது இலக்கு தனியான உள்ளூராட்சி மன்றமே. திறந்திருக்கும் பாதையை நமக்கானதாக ஆக்கிக்கொள்வோம்.  

இந்த சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களை வாழ்த்துகிறோம். சாய்ந்தமருது மக்களின் அபிலாஷையை நிறைவேற்றுவதற்காக கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்தி, வரலாற்றுச் சாதனை படைப்போம்" என்று சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் அறைகூவல் விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.