Header Ads



‘கல்வியமைச்சர் அகில விராஜ்’ – வேறு வழியின்றி ஒப்புக்கொண்ட மைத்திரி

-கி.தவசீலன்-

கூட்டு அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் படத்துடன் அச்சிடப்பட்டிருந்த, மாணவர்களுக்கான சீருடைத் துணி உறுதிச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

கூட்டு அரசாங்கத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம் கல்வி அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.

அப்போதைய கல்வி அமைச்சரின் படத்துடன், மாணவர்களுக்கான சீருடைத் துணி உறுதிச்சீட்டு அச்சிடப்பட்டு தயார் நிலையில் இருந்த போது, கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள், கூட்டு அரசாங்கத்தை சிறிலங்கா அதிபர் கவிழ்த்தார்.

இதைஅடுத்து, சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், கடந்த நொவம்பர் 2ஆம் நாள், இந்த சீருடைத்துணி விநியோகத்துக்கான உறுதிச்சீட்டுகளை வழங்குவதை தடை செய்தது.

மாணவர்களுக்கு உறுதிச்சீட்டுக்குப் பதிலாக, சீருடைத் துணி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

எனினும் நீதிமன்ற உத்தரவுகளால், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான சீருடைத் துணிக்கு கேள்விப்பத்திரம் கோரி, அதனை விநியோகிப்பதற்கு போதிய காலஅவகாசம் கிடைக்காது என்பதால், ஏற்கனவே அச்சிடப்பட்டிருந்த, முன்னாள் கல்வி அமைச்சரின் படத்துடன் கூடிய உறுதிச்சீட்டுகளை வழங்க சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் நாள் வலயக் கல்விப் பணிகளில் இந்த உறுதிச்சீட்டுகளை பெற்று, முடிந்தால் பாடசாலை விடுமுறைக் காலத்தில் விநியோக நடவடிக்கை எடுக்குமாறும் அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படவுள்ளது என்று கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.