புத்தர் சிலைகளை சேதப்படுத்துவதன் பின்னால், இருப்பது யாரென இதுவரை கண்டறியப்படவில்லை - மாவனல்லையில் இரகசியப் பொலிஸ் குழு
மாவனல்லை பிரதேசங்கள் உட்பட ஏனைய பகுதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் புத்தர் சிலை உடைப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (26) நண்பகல் வேளையிலேயே இரகசியப் பொலிஸ் குழுவொன்று மாவனல்லைப் பிரதேசத்தை நோக்கி அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மாவனல்லை சம்பவம் தொடர்பில் சகோதார மொழி தேசிய நாளிதழொன்று பிரதான செய்தியாக பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது;
மாவனல்லை உட்பட அண்டியுள்ள முக்கி பிரதேசங்களில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை உடைத்த மாற்று மத இளைஞர்கள் இருவரில் ஒருவர் நேற்றுக் காலை மாவனல்லை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுகன்னாவை, மாவனல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலம்பொட, லியன்கஹவெல பிரதேசத்தில் இருந்த புத்தர் சிலைகள் நான்கிற்கு நேற்று (26) அதிகாலை இனந்தெரியாதோரினால் சேதம் விளைவிக்கப்பட்டிடுள்ளது.
இதேவேளை, நேற்று (26) அதிகாலை 4.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் மாவனல்லை லிந்துலவத்தை சந்தியிலுள்ள புத்தர் சிலையை சேதப்படுத்தும் போது பிரதேசவாசிகள் அவர்களைப் பிடிக்க முயற்சித்துள்ளனர்.
அவ்வேளை மோட்டார் சைக்கிளில் வந்தவர் தப்பியோடியுள்ளார். பிரதேசவாசிகளின் தாக்குதலின் பின்னர் புத்தர் சிலையை சேதப்படுத்திய மற்றைய இளைஞன் மாவனல்லைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
கைது செய்யப்பட்ட இளைஞன் மாவனல்லை, ஹிங்குல, தெல்கஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்ற மற்றைய இளைஞனைப் பிடிக்க மாவனல்லைப் பொலிஸார் விசேட பொலிஸ் நடவடிக்கையை நேற்றே (26) முன்னெடுத்துள்ளனர்.
இதற்கு முன்னரும் இதேபோன்று, கண்டி, கடுகன்னாவை, தொடங்வல உட்பட பல பிரதேசங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகளுக்கு சேதங்களை விளைவித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இச்சம்பவத்தையடுத்து அப்பிரதேசத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் விசேட பொலிஸ் அதிரடிப்படை குழுக்கள் அப்பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மாவனல்லை பிரதேச பௌத்த சமயத் தலைவர்கள் ஒன்றுகூடி மாவனல்லை பெலிகம்மன பொத்குல் விகாரையில் விசேட கலந்துரையாடல்களையும் நடாத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை இவ்வாறு உடைத்து சேதப்படுத்துவதற்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படாத இரகசியமாக காணப்படுகின்றது. இது மதக் கலவரங்களை ஏற்படுத்துவதற்கான சதி முயற்சிகளா என்பது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
DC
இது இலங்கையில் குழப்பங்களை உண்டுபண்ணுவதற்காக புலம் பெயர் தமிழ் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் கடந்தகால திகனை சம்பவமும் புலம்பெயர் தமிழ் பயங்கரவாதிகளாலே மேற்கொள்ளப்பட்டதாக நாமல் குமார மூலம் வெளிவந்தது. புலனாய்வுத்துறை இதனை பல கோணங்களில் விசாரிக்க வேண்டும்
ReplyDelete