எதிர்க்கட்சித் செயலகம் சம்பந்தனின் பொறுப்பில் - கௌரவமாக பதவிவிலக மகிந்த கோரிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான இழுபறிக்கு இன்னமும் முடிவு காணப்படாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் இன்னமும், இரா.சம்பந்தனின் பொறுப்பிலேயே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் அறிவிப்பை வெளியிடாமல், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.
இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன.
அத்துடன் மகிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து விட்டு,நேற்று முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய கூறியிருந்தார்.
கைவிரித்தார் சபாநாயகர்
எனினும், நேற்றைய அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான தமது முடிவை சபாநாயகர் அறிவிக்கவில்லை.
”இதுகுறித்து ஆராய தெரிவுக்குழு ஒன்றை அமைக்கும் யோசனை அடங்கிய பிரேரணை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீரவும் கடிதம் ஒன்று தந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் எனக்கு மேலதிக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இவற்றையெல்லாம் ஆராய்ந்து விட்டு, எனது நிலைப்பாட்டை கூடிய விரைவில் சபையில் அறிவிப்பேன்” என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று கூறியிருந்தார்.
சம்பந்தனிடம் செயலகம்
இதனால், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
அதேவேளை,இரா.சம்பந்தனின் பொறுப்பிலேயே எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் இருக்கிறது.
சபாநாயகர் தமது முடிவை அறிவிக்காததால், அவர் அதனை இன்னமும் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவினால், பிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடமான அலரி மாளிகைக்கு செல்ல முடியவில்லை.
ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்து வெளியேறாததால், அலரி மாளிகைக்குச் செல்ல முடியாத நிலையில் மகிந்த பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கௌரவமாக விலக வேண்டும்
அதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இரா.சம்பந்தன் கௌரவமான முறையில் மகிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.
Post a Comment