Header Ads



நல்லாட்சி என்ற சொல்லை, நாம் பயன்படுத்தியபோதும்...!

சட்டவிரோத நடவடிக்கைகள், முறைகேடுகள் தொடர்பில் எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரச அதிகாரிகள் அதற்கு இடமளிக்கக்கூடாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 

ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 

புதிய அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்ததன்பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சரியான தீர்மானங்களை மேற்கொள்ளும் அரச அதிகாரிகளுக்காக ஜனாதிபதி என்ற வகையிலும் தனிப்பட்ட வகையிலும் தான் குரல் கொடுப்பதாக தெரிவித்தார். 

நல்லாட்சி என்ற சொல்லை நாம் எங்கு பயன்படுத்திய போதும் நாட்டின் அரச நிர்வாகம் தூய்மையானதொரு நிர்வாகம் என்ற சான்றிதழை இன்னும் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை என்றும், நாட்டு மக்கள் எதிர்ப்பார்க்கின்ற சிறந்த அரச நிர்வாகத்திற்காக உரிய முறையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்களிடம் கேட்டுக்கொண்டார். 

ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்துடன், தொடர்ந்தும் நாட்டு மக்களுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அரச வளங்களை சேதப்படுத்தி, மக்களின் பணத்தை திருடி மேற்கொள்ளும் ஊழல், மோசடிகள் எப்போதும் இரகசியமாகவே இருக்காது என்றும், அது என்றைக்காவது ஒரு நாள் மக்களுக்கு தெரியவரும் என்றும், குற்றவாளிகள் உரிய தண்டனையை பெறவேண்டியிருக்குமென்றும் குறிப்பிட்டார். 

வறுமையற்ற நாட்டையும் ஒழுக்கப் பண்பாடான சமூகத்தையும் கட்டியெழுப்புவது இன்று எம்முன் உள்ள முக்கிய சவாலாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த சவாலை வெற்றிகொள்வதில் நாட்டின் அரச அதிகாரிகள் மீது தான் முழுமையாக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். 

அமைச்சுக்களிலும் அமைச்சுக்களின் கீழ் உள்ள அனைத்து திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்களின் செயற்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக கண்டறிந்து அவற்றை சரியாக வழிநடத்துவது அமைச்சுக்களின் செயலாளர்களின் பொறுப்பாகுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மாதத்திற்கு ஒரு தடவையாவது குறித்த நிறுவனங்களுக்குச் சென்று பணிக்குழாமினரை சந்தித்து அவர்களை வலுவூட்டுவதற்கும் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் புதிய அமைச்சுக்களின் செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார். 

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

No comments

Powered by Blogger.