Header Ads



மகிந்த சார்பாக இன்று, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மகிந்த ராஜபக்ச உட்பட முன்னாள் அமைச்சரவையின் உறுப்பினர்கள் அந்த பதவிகளில் செயற்படுவதை தடுத்து நிறுத்தி விதிக்கப்பட்டுள்ள இடைக்கால உத்தரவை நீக்க கோரி, உயர் நீதிமன்றத்திடம் விசேட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச உட்பட முன்னாள் அமைச்சரவையின் 17 பேர் இந்த கோரிக்கை மனுவை சமர்பித்துள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட மனுவை தாக்கல் செய்த ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பிரதமர் மற்றும் அமைச்சரைவை செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படியான உத்தரவை பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக தமது கோரிக்கை மனு தொடர்பான விசாரணை நடத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவு சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்குமாறும், தமது கோரிக்கை தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவை நீக்கி உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.