முஸ்லிம் சட்டத்தரணிகளின் கவலை, சிந்திக்குமா சமூகம்...???
சமூக விழுமியங்களை சரியாகக் கற்றுக் கொள்ளதாவர்களை பாராளுமன்றம் அனுப்பியதன் விளைவை இன்று நாம் அனுபவிக்கிறோம். இதனால், நாட்டில் ஒரு அரசு இல்லாத நிலையும், மரியாதைக்குரிய பாராளுமன்றில் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக கண்டி முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எம்.ஏ.சி.எம்.யாகூப் தெரிவித்தார்.
கண்டி முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் வருடந்தோறும் வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கற்றல் உபகரணங்களை வழங்கி வருகிறது. அவ்வாறான ஒரு நிகழ்வு வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள பின்தங்கிய பாடசாலையான நுகதெனிய(ஊராதெனிய) அல்அக்ஸா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அவற்றை கையளிக்கும் வைபவத்தில் சிறப்புரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
மாணவர்கள் சிறந்த புத்திஜீவிகளாக இருக்க வேண்டும். இவ்வாறான அன்பளிப்புக்கள் மூலம் மாணவர்களை ஊக்குவிக்க முடிகிறது. இலங்கை முஸ்லிம் சமூகத்தை ஒரு காலத்தில் வர்த்தக சமூகம் என்றார்கள். காலம் மாறி அது பறிபோய் அதன் பிறகு ஆசிரியர்கள் தலைமை தாங்கும் ஒரு சமூகம் என்றார்கள். அக்காலத்தில் அதிகளவு முஸ்லிம் ஆசிரியர்கள் இருந்தார்கள். வீடுவீடாக இரவோடு இரவாக முஸ்லிம் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்ட காலமாக அது இருந்தது.
இப்போது நாம் இரண்டையும் இழந்து முச்சக்கர வண்டி ஓட்டும் சமூகமாக அல்லது அல்லது வெளிநாட்டு சுத்திகரிப்புத் தொழிலாளர்களைக் கொண்ட சமூகமாக மாறியுள்ளோம். ஒரு சமூகம் நிலைத்து நிற்பதற்கும் ஒரு குடும்பத்தை நிலையாகப் பேணுவதற்கும் இந்த முச்சக்கர வண்டிச் சாரதி கோட்பாடு சரி வராது. கற்க வேண்டும். கல்வியால்தான் அதனை மாற்ற முடியும். பெண்கள் அதிகம் கல்வி கற்பது போல் எமக்குத் தோன்றினாலும் காலப்போக்கில் திருமணம், அல்லது வறுமை அல்லது சமூக காரணிகள் போன்றன காரணமாக கல்வியை தொடர இடமளிப்பதில்லை. எனவே நிலையான மாற்றத்திற்காக ஆண்களுக்கு கல்வியின் பால் ஆர்வத்தை ஏற்படுத்துவது பெறறோர்களின் கடமையாகும். எனவேதான் இவ்வாறான வைபவங்களை ஒழுங்கு செய்து மாணவர்களையும் பெற்றோர்களையும் கவர்ந்திழுத்து இச்செய்தியை தெரிவிக்க இவ்வாறு அன்பளிப்புக்களைச் செய்ய வேண்டியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை அதிகமாக ஆண்களை மத்ரஸாகளுக்கு அனுப்புகின்றனர். இதனாலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உலகக் கல்வியையோ அல்லது ஏனைய துறைகளையோ அடைய முடியாது போகிறது. ஒருசில மத்ரஸாக்களில் முறையாக நடந்தாலும் எல்லா இடங்களும் சரியாக திட்டத்தின் கீழ் நடக்கின்றனவா என்பதை கண்காணிக்கும் அடிப்படை ஒன்று இல்லை.
க.பொ.த. (உ.த) இற்கு செல்லும் மாணவர்களுக்கு தனியார் வகுப்புக்கள் தேவைப்படுகின்றன. போதியளவு ஆசிரியர்கள் இல்லாத குறையும் சமூகப்பற்றின்றிய கற்பித்தல் முறைகளும் மற்றும் வேறு காரணங்களும் இதற்குக் முக்கிய காரணிகளாக இருக்கலாம்.
ஆனால் அவ்வாறு வெளியே டியூசனுக்குப் போவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இங்கே பெண்களைப் பொறுத்தவரை ஒரு அபாயாவுடன் ஆடைப்பிரச்சினை தீர்ந்துவிடும். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை சமூக காரணிகளான ஆடம்பர சப்பாத்து, ஆடை, ஸ்மார்ட் போன் என்று ஆதிக்கம் செலுத்துகின்றன. இதன் தாக்கம் காரணமாகவும் குறிப்பிட்ட அளவு மாணவர்கள் உயர் கல்வியை கைவிடுகின்றனர்.
தந்தை வழி பரம்பரையே பொதுவாக பெரிதுபடுத்திப் பேசப்படும் வழக்கம் சமூகத்தில் உண்டு. எனவே தந்தையின் அந்தஸ்துதான் ஒரு குடும்பத்தில் முக்கியமாகப் பங்காற்றும். தாயின் தியாகம் இருந்தாலும் சமூகத்தில் தந்தை வழி செல்வாக்கே பிள்ளைகளை உயர்த்தும். எனவே ஆண்கள் கற்பது மிகமிக முக்கியமாகும். பெண்கள் மாத்திரம் கல்வி கற்பது அடுத்த தலைமுறைக்கு ஒரு சவாலாக மாறிவிடும்.
தம்பிள்னைகளுக்கு சீரான கல்வியை வழங்குவதை தவிர நாம் வழங்கக்கூடிய பெரிய சொத்து எதுவும் கிடையாது. அதனையே ஊக்குவிக்க வேண்டும். நாமும் அதனையே செய்கிறோம். படிக்காதவர்கள் பாராளுமன்றம் சென்றதன் விளைவுகளை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
சட்டத்தரணிகளான பஸ்லின் வாகிட், பைசர் அலி, முஸ்னி யாக்கூப், ஏ.எம். வைஸ், எம்.யூ.எம்.நவுபர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Post a Comment