Header Ads



ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய பேட்டி, இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவில் ஒப்படைப்பு


பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக  பாராளுமன்ற உறுப்பினர்களி;ற்கு இலஞ்சம் கொடுத்து அவர்களின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என டிரான்ஸ்பரன்சி இன்டர்நசனல் வேண்டுகோள் விடுத்துள்ளது

இலஞ்ச ஊழல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் டிரான்ஸ்பரன்சி இன்டர்நசனல் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு இலஞ்சம் வழங்குவதற்கான முயற்சிகள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என டிரான்ஸ்பரன்சி இன்டர்நசனல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பின் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் விலைகள் அதிகரித்தமையின் காரணமாகவே மகிந்த ராஜபக்ச தரப்பினால் பெரும்பான்மையை நிருபிக்கமுடியவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளமையும் , நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு பெருமளவு பணத்தை வழங்கி பேரம் பேசும் நடவடிக்கைகள் இடம்பெற்றதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதும் முழுமையான விசாரணைகள் இடம்பெறவேண்டியதன் அவசியத்தை புலப்படுத்தியுள்ளது என டிரான்ஸ்பரன்சி இன்டர்நசனல் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பேட்டியை பதிவு செய்துள்ள டிரான்ஸ்பரன்சி இன்டநசனல் அதனை  இலஞ்ச ஊழல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளது.

இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள டிரான்ஸ்பரன்சி இன்டநசனல் ஸ்ரீலங்காவின் நிறைவேற்று இயக்குநர் அசோக ஒபயசேகர ஜனாதிபதி தான் அரசியல்வாதிகளிற்கு இலஞ்சம் வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ள போதிலும், இலஞ்சம் வழங்குவதற்கான முயற்சிகள் குறித்து தனக்கு தெரியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை அரசியல்வாதிகளை மையப்படுத்தி குற்றசெயல்கள் இடம்பெறுவதை புலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தானாக முன்வந்து இலஞ்ச ஊழல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆணைக்குழுவிடம் தனக்கு தெரிந்த தகவல்களை  வழங்குவதன் மூலம்  வெளிப்படை தன்மை மற்றும் பதிலளிக்கும் கடப்பாடு குறித்த தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவேண்டும் எனவும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நசனல் இன்டநசனல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.