மாவனல்லை விசயத்தில், அவசரப்பட வேண்டாம்
மாவனல்லை மற்றும் அண்டிய பகுதிகள் பலவற்றிலும் புத்தர் சிலைகள் பலவற்றுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவங்களைத் தொடர்ந்து அந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினைத் தணிப்பதற்கு சமூகத்தின் அரசியல் சிவில் மற்றும் சன்மார்க்கத் தலைமைகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சமூக ஊடகங்களில் முன்யோசனைகள் இன்றி வெளியிடப்படும் கருத்துக்கள் எதிர்வினைகளை நாமாகவே வரவழைத்துக் கொள்ளும் வகையில் காணப்படுகின்றன.
குறிப்பாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது பெறப்பட்ட வாக்குமூலங்கள் குறித்த தகவலறிந்த சிலர் விசாரணைகள் முடியுமுன் முடிவுகளிற்கு வந்து கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர், குறிப்பிட்ட விடயத்தில் இல்லாவிட்டாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் தடுத்து வைக்கப் பட்டவர்கள், அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்ட விதங்கள் குறித்தெல்லாம் பல தரப்புக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளன.
தற்பொழுது முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய சமூகத் தலைமைகளின் முனைப்புக்களினால் பொலிஸ்மா ஆதிபரின் விஷேட பணிப்புரையின் பேரில் கொழும்பிலிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள சிறப்புக் குழு ஒன்று அங்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
எனவே, விசாரணைகள் முடிவுறும் வரை சட்டத்தை வேறு சக்திகள் எவ்வாறு கையிலெடுக்க கூடாதோ அவ்வாறே தீர்ப்பு வழங்குகின்ற முடிவுகளை எடுக்கின்ற அதிகாரத்தையும் நாம் கையிலெடுக்க முனையக் க்கூடாது.
அவ்வாறு உஷார் மடையர்களாக ஆத்திர அவசரத்தில் நாம் செயற்படுகின்ற பொழுது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்த பாடுபடுகின்ற தரப்புக்களிற்கு பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டிஎற்படுவதொடு சிலவேளைகளில் நிலைமைகள் கட்டுக் கடங்காமல் சீர்குழைந்து விடவும் இடமிருக்கிறது!
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டவர்கள் நிரபராதிகளா?, தூண்டப்பட்டவர்களா?, பலவந்தப் படுத்தப் பட்டவர்களா?, அல்லது குற்றவாளிகள் தானா ? என்பதனைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை அவர்கள் விடயத்தில் எடுப்பதற்குரிய அவகாசத்தை சட்ட ஒழுங்கு நீதித்துறைக்கும் சமூகத் தலைமைகளிற்கும் வழங்குவதே அறிவு பூர்வமான ஆரோக்கியமான சமயோசிதமான அணுகுமுறையாகும்!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
Post a Comment