பேய்களும், பேயோட்டியும்
-கனடாவில் இருந்து, டாக்டர் S நஜிமுதீன்-
இலங்கும் இலங்கை என்கின்ற ஸ்ரீ லங்காவில் அண்மையில் ஏற்பட்ட ஆழிஇந்து சமுத்திரத்தின் முத்து எனவும் மாணிக்க துவீபம் எனவும்,சரந்தீப், எனவும் பலப்பல பெயர்களில் ப்பேரலை மிகப்பெரிய அழிவினை ஏற்படுத்தி ஒளிந்திருக்கிறது. பதினான்கு வருடங்களுக்கு முன்னர் சுமத்ராவில் உற்பத்தியாகி கரையோரம் யாவற்றையும் புரட்டிப் போட்ட அந்தப் பேரலையின் வருடாந்த நினைவினை கொண்டு வருவது எனது நோக்கல்ல.
அண்மையில் இந்த நாட்டு அரசியலில் ஏற்பட்ட சுனாமி பேரலையையே குறிப்பிடுகின்றேன், அந்தப் பேரலையும் எம்மை முன்னறிவித்தல் இல்லாமல்தான் தாக்கியது. இந்தப் பேரலையும் அப்படியே. இருந்த போதிலும் இவை இரண்டிற்கும் இடையில் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது இரண்டும் அழிவில் கைகோர்த்தாலும் இலக்கு நிர்ணயத்தில் வித்தியாசப்படுகின்றன. அது இலக்கின்றி அறைந்து சென்றது. இந்தப் பேரலை இலக்கு வைத்து தாக்கினாலும் தனக்கே சேதத்தை உண்டாக்கிக் கொண்டது.
இதனை பேருவளை.அளுத்கம காலி சம்பவங்களுடன் ஒப்பிடலாம். அவை இலக்கு நிர்ணயிக்கப்பட்டவை தான், ஆனால் சேதம் அடித்தவர்களுக்கே. அது போலவே அண்மைய அரசியல் சித்து விளையாட்டும் அமைந்திருந்தது. அரங்கேறிக் கொண்டிருந்த நாடகங்களை தூர தேசத்தில் இருந்து கூர்மையாய் அவதானித்து வந்த எங்களுக்கு, எங்கள் கண்களையோ காதுகளையோ நம்ப முடியாதபடி இருந்தது. எப்படி இது சாத்தியமாயிற்று.
சில வருடங்களுக்கு முன் மேடை மேடையாய் மிகக்கடுமையாக விமர்சித்து குற்றம் சாட்டி, பயம் காட்டி, பரிதாபம் மேலோங்கச் செய்து, எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டையே கழுவிச் சுத்தம் செய்யப் போகின்றேன் என்று வீர வசனம் பேசிய ஒரு மனிதன் எப்படி இப்படி மாறலாம் என்பது வியப்பின் உச்சம் என்றால், தன்னை மேலே ஏற்றி அழகு பார்த்த அல்லது கரை சேர்த்த ஓடத்தை ஒன்று மில்லாமல் ஆக்குவதற்கு துணிவது என்பது மிகவும் கீழ்த்தரமான ஒரு அரசியல் அசிங்கம் என்று குறிப்பிடலாம்.
என்ன அசிங்கமான பேச்சுக்கள். என்ன அருவருக்கத்தக்க நடவடிக்கைகள். எப்படிப்பட்ட பொறுப்பற்ற இழுத்தடிப்புக்கள். கடைசியாக நீதிமன்றங்கள் மூக்கணாங்கயிற்றை இழுத்துப் பிடிக்க வில்லையானால் வண்டியை கவிழ்க்காது ஓய மாட்டேன் என்று அந்த பொலநறுவையில் சுயமாக வளர்ந்த முரட்டுக் காளை ரொம்பவும் முரண்டு பிடித்து விட்டது. இன்னும் அது சுயத்துக்கு வந்ததாக தெரியவில்லை. மூக்கை நுழைத்து காயப்படுத்திக் கொண்ட வலி ஆறாத வரை அது சினம் தணியும் போல் தெரியவில்லை.
அப்படி என்னதான் அது செய்து விட்டது என்பது பல பேருக்கு வியப்பாய் இருக்கலாம். எமது நாட்டில் பதினோரு வருட காலம் ஒரு பேய் நடமாடிக் கொண்டிருந்தது. அந்தப் பேய் தான் மட்டும் அல்லாது இன்னும் சில பேய்களுடன் சேர்ந்து ஆடிய பேயாட்டம் இன்னும் எமது நாட்டை விட்டு அகலவில்லை.
முதலாவது அது வேப்ப மரத்தில் ஏறுவதற்கு பாவித்த கயிறு இரவல் வாங்கிய கயிறு. அது இலகுவில் கிடைக்கவில்லை என சொந்தக்காரனுக்கு சீவல் வாங்கி கோணிப்பைகளில் கொல்லையில் கொட்டிக் கொடுத்தது. சீவல் விற்று சொந்தக்காரன் சீமான் ஆகலாம் என்று அவன் கனவு கண்டு கொண்டிருக்கும் போது அதே கயிற்றில் அந்தப் பேய் சொந்தக்காரனையே தூக்கில் தொங்க விட்டது.
சொந்தக்காரனும் அவன் இணை துணைகளும் கழுத்து இறுகி நா வறண்டு கண்கள் மிரள மாண்டு கிடக்கையில், அவனது சொந்தங்களையெல்லாம் கொடுத்த சீவலுக்கு மலிவு விலையில் மடியில் கட்டி தனது இணை துணை காவல் நாய்கள், கட்டியக்காரர்கள், கண்டவர் நிண்டவர் எல்லோருக்கும் இரத்தம் குடிக்கவும், எலும்பு கடிக்கவும் என பங்கு வைத்தது மட்டுமன்றி, மீதமான அத்தனை பேரையும் கம்பி வேலி கட்டி காவலில் போட்டு விட்டது.
பேயாட்டத்தை கண்களால் கண்ட எங்களுக்கு எப்போது இதற்கொரு முடிவு வரும் எனக் காத்திருக்கும் போது தான் இந்த கடைசி துரும்பு ஒரு ஆறுதலாய் வந்தது. நீண்ட கால காத்திருப்பின் எதிர்பார்ப்பின் முடிவாக வந்து சேர்ந்த ஒரு பேயோட்டி இப்படி பேயோடு கூட்டுச் சேரும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்.
அந்தக் கூட்டினுடைய ஒரேயொரு எதிர்பார்ப்பு சிறுபான்மை ஆதரவு மட்டுமே. கடந்த காலத்தை அலசுகின்றபோது அந்த எதிர்பார்ப்பு சரியான ஒரு கணிப்பாகவே தென்பட்டிருக்கும். இரத்தம் உறிஞ்சப்பட்ட ஒரு இனக்குழுமம் இல்லாவிட்டாலும் தொப்பி திருப்பும் ஒரு குழுமம் என்று வர்ணிக்கப்படும் ஒன்று தங்களுடன் கைகோர்க்கும் என்ற எதிர்பார்ப்பு மிகவும் வலுப்பட்ட ஒன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் நடந்ததோ வேறொன்று.
அந்த மூன்றாவது இனக்குழுமம் இப்படி நடந்து கொள்ளும் என்ற ஒரு சின்ன சந்தேகமாவது அவர்களுக்கு இருந்திருக்குமானால் அவர்கள் இவ்வளவு தூரம் போய் இருக்க மாட்டார்கள். ஒரு நாட்டின் தலைவன் ஆதரவை விலைக்கு வாங்கும்படி ஊக்குவித்து அதனை வேடிக்கை பார்ப்பது என்பது எவ்வளவு கேவலமான விடயம்.
அவர்களுக்கு வியாழேந்திரன் மட்டும் ஒரு போனஸ், எம்மவர் என்ன காரணத்துக்காக எதிர்த்தார்களோ யாம் அறியோம், ஆனால் மிகத்தீவிரமாக எதிர்த்தார்கள் என்பது எம்மை பெருமை கொள்ள செய்கிறது. ஜனநாயகம் ஒரு புறம் இருக்கட்டும். அது இஸ்லாம் காட்டிய வழியுமன்று. ஆனால் அவர்களின் நடவடிக்கை நியாயம் வெல்வதற்கு உதவிற்று.
இதன் மூலமாக துவேசத்தை கட்டி எழுப்பி ஆட்களை வைத்து எல்லாவித அராஜகங்களையும் கட்டவிழ்த்து விட்டு, அவை தங்கள் கைவரிசையைக் காட்டும் வரை கைகட்டி இருந்து விட்டு முதலைக்கண்ணீர் விட்ட சாலவைக்கூட்டத்தை விரட்டி விட உதவியிருக்கிறார்கள்.
அதிகாரத்தை கைப்பற்றிய அடுத்த கணமே ஆட்டத்தை ஆரம்பித்து காவிகளை உள்ளே வைத்த சட்டத்தை சாடுகின்ற சாணக்கியமற்ற முரட்டுக் காளையை மண்டியிடச் செய்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு எத்தனை சபாஷ் போட்டாலும் தகும். முக்கியமாக இந்த விடயத்தில் மிகவும் மும்முரமாய் இருந்த முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். ஹெட்ஸ் ஆப் டு யு தலைவரே.
அந்தப் பேயாட்டம் மீண்டும் தலையெடுத்திருந்தால் தங்களது தகிடு தத்தம் களால் இன்னும் என்னென்ன லீலைகளை அரங்கேற்றி இருப்பார்களோ தெரியாது. ஆனால் செங்கொடி சீனரின் வரவும் ஆதிக்கமும் எமது பெரிய அண்ணனை உசுப்பேற்றி மீண்டும் ஒருமுறை நாம் அனுபவித்த முப்பது வருட கால யுத்தம் போன்ற ஒரு அவலத்தை ஒத்த இன்னுமொரு பேரிடியை எம்மீது இறக்குவதற்கு காலாய் அமைந்து விட்டிருக்கலாம்.
சிறிமா அம்மையாரின் ஏழு வருட ஆட்சியில் நாம் செஞ்சட்டையை நெருங்கியதற்கு எமது நாட்டை எழுபது வருட காலம் பின்னோக்கி தள்ளி விட்டார் எமது பெரியண்ணன், சீரழிவை ஆரம்பித்ததும் அவரே, பின்னர் அதனை முடித்து வைத்ததும் அவரே. இருந்தும் கூட இங்கே சில பேருக்கு சால்வையால்தான் சமாதானம் வந்தது என்றொரு மாயை தொற்றியிருக்கிறது.
யுத்தத்துடன் வாழ்ந்து அதன் அத்தனை கொடூரத்தையும் கண்டு அனுபவித்தவன்என்ற முறையிலும், வவுனியா முகாம்களில் அடைப்பட்டு அல்லல்பட்ட மனிதருடன் இரண்டறக்கலந்து இருந்து ஒவ்வொரு நாளும் மனித அவலங்களை கண்களால் கண்ட ஒரு மனச்சாட்சியுள்ள ஒரு மனிதனாக யுத்தத்தையும் அதன் அவலத்தையும், அதனை முடித்து வைத்த முறையின் கொடூரத்தையும் அங்கீகரிக்காத ஒருவன் என்ற முறையிலும், எப்படி மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் சால்வையை ஆதரிக்க மாட்டானோ அதே போலவே என்னாலும் அவர்களை பொருந்திக் கொள்ள முடியவில்லை.
இவர்கள் குடியிருக்கும் வேப்பமரத்தில் எப்பொழுது இயற்கையின் சீற்றம் தனது கைவரிசையைக் காட்டப் போகின்றது எனக் காத்திருப்பவர்களுள் நானும் ஒருவன். ஒவ்வொரு முஸல்மானும், ஒவ்வொரு பிரகீத் ஏக்நாலிகொட, ஓவ்வொரு வசீம் தாஜூடீன், ஒவ்வொரு லசந்த விக்ரமதுங்க இன்னும் வெள்ளை வேன் கொள்ளை கொண்ட அத்தனை ஆவிகளும் இந்த வேப்பமரத்தை நோக்கி படையெடுக்கும் காலம் இந்த சண்டாளர்களுக்கு சிறப்பானதாய் அமைய போவதில்லை.
இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. சாணக்கியம் இருப்பதனை விட மனித நேயம் மிக்க தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் தலைமைத்துவங்கள் உருவாக வேண்டும். அவர்களுடன் கைகோர்த்து நாமும் பயணம் செய்ய நம் எல்லோருக்கும் எல்லாம் வல்லவன் அருள் கிட்ட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
Post a Comment