உவைஸ் அல்கர்னியும், பெற்றோருககு பணிவிடை செய்தலின் கட்டாயமும்
வரலாற்றில் வாசம் வீசுவோரில், உவைஸ் அல்கர்னி (ரஹ்)
“கலீஃபா உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் உதவிப்படைகள் வந்தால், அவர்களிடம் உங்களிடையே உவைஸ் இப்னு ஆமிர் இருக்கிறாரா? என்று கேட்பார்கள்.
இந்நிலையில் ஒருமுறை (யமன்வாசிகளின் உதவிப்படைகளுடன் உவைஸ் இப்னு ஆமிர் (ரஹ்) வந்தபோது) நீர்தான் உவைஸ் இப்னு ஆமிரா என்று கேட்டார்கள்; அதற்கு உவைஸ் அல்கர்னி (ரஹ்) அவர்கள் ‘ஆம்’ என்றார்கள்.
உமர்(ரலி) அவர்கள் அவரிடம் ‘முராத்’ கோத்திரத்தையும் ‘கரன்’ கிளையையும் சேர்ந்தவரா? என்று கேட்டார்கள்; அதற்கு உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்கள் ஆம் என்றார்கள்.
உமர்(ரலி) அவர்கள், உங்களுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு அதில் ஒரு திர்ஹம் அளவு (அடையாளம்) தவிர மற்றவை குணமாகிவிட்டதா என்று கேட்டார்கள்; அதற்கு உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்கள் ‘ஆம்’ என்றார்கள்.
உமக்கு தாயார் இருக்கிறாரா என்று கேட்டார்கள்; அதற்கு உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள்.
உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்:- அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறியிருக்கிறார்கள்:
யமன்வாசிகளின் உதவிப்படையினருடன் ‘முராத்’ கோத்திரத்தையும் ‘கரன்’ கிளையையும் சார்ந்த உவைஸ் இப்னு ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார்; அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு பின்னர் ஒரு திர்ஹம் அளவு (அடையாளம்) தவிர மற்றவை குணமாயிருக்கும்; அவருக்கு தாயார் ஒருவர் இருப்பார்; அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார்; அவர் அல்லாஹ்வின்மீது சத்தியமிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காக பாவமன்னிப்புக் கோரி பிரார்த்திக்க வாய்ப்பு கிட்டினால் அவரை பிரார்த்திக்க சொல்லுங்கள்! (அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளபடி) எனக்காக பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள் என்றார்கள்! அவ்வாறே உவைஸ் (ரஹ்) அவர்களும் உமர்(ரலி) அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள்.
பிறகு உமர்(ரலி) அவர்கள், நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று வினவினார்கள்; அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள் “கூஃபாவிற்கு” என்று பதிலளித்தார்கள். கூஃபாவின் ஆமிலிடம் (கலக்டர்) உமக்காக (பரிந்துரைத்து) கடிதம் எழுதட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்கள், ”சாதாரன மக்களில் ஒருவனாக நான் இருப்பதே எனக்கு விருப்பமானதாகும்” என்று கூறிவிட்டார்கள்.
அடுத்த ஆண்டில் கரன் கிளைய சார்ந்த பிரமுகர் ஒருவர் ஹஜ்ஜுக்காக சென்றிருந்தபோது உமர்(ரலி) அவர்களை தற்செயலாக சந்தித்தார். அப்போது உமர்(ரலி) அவர்கள், உவைஸ்(ரஹ்) அவர்களைப் பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர், “மிக எளிய குடிலில் (நெருக்கடியான வாழ்விலும்) மிகக் குறைவான வாழ்க்கை சாதனங்களிலுமே அவரை விட்டும் வந்துள்ளேன் என்று கூறினார்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறியிருக்கிறார்கள்: யமன்வாசிகளின் உதவிப்படையினருடன் ‘முராத்’ கோத்திரத்தையும் ‘கரன்’ கிளையையும் சார்ந்த உவைஸ் இப்னு ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார்; அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு பின்னர் ஒரு திர்ஹம் அளவு (அடையாளம்) தவிர மற்றவை குணமாயிருக்கும்;அவருக்கு தாயார் ஒருவர் இருப்பார்; அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார்; அவர் அல்லாஹ்வின்மீது சத்தியமிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றிவைப்பான். (உமரே!) அவர் உமக்காக பாவமன்னிப்புக் கோரி பிரார்த்திக்க வாய்ப்பு கிட்டினால் அவரை பிரார்த்திக்க சொல்லுங்கள்! என்று உமர்(ரலி) அவரிடம் சொன்னார்கள்.
ஆகவே அப்பிரமுகர் உவைஸ் அல்கரனி (ரஹ்) அவர்களிடம் சென்று எனக்காக பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள் என்று கோரினார். அப்போது உவைஸ் அவர்கள் “நீர்தான் இப்போது ஹஜ் கடமையை நிறைவேற்றி வந்துள்ளீர்! ஆகவே நீர்தான் எனக்காக பாவமன்னிப்பு கோர வேண்டும்; “நீர் உமர்(ரலி) அவர்களை சந்தித்தீரா? என்று கேட்டார்கள். ‘ஆம்’ என்று அவர் பதிலளித்தார். உவைஸ் (ரஹ்) அவர்கள் அவருக்காக பாவமன்னிப்பு கோரி பிரார்த்தித்தார்கள்.
அப்போதுதான் மக்களும் உவைஸ் அல்கரனி (ரஹ்) அவர்களை அறிந்துகொண்டனர். பிறகு உவைஸ் (ரஹ்) அவர்கள் தமது திசையில் நடக்கலானார்கள்.
தொடர்ந்து (உஸைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் உவைஸ் (ரஹ்) அவர்களுக்கு (நல்ல) போர்வையொன்றை அணியக் கொடுத்தேன்; அவரை யாரேனும் ஒருவர் காணும்போதெல்லாம் உவைஸ் அவர்களுக்கு இந்த போர்வை எப்படி கிடைத்தது என்று கேட்பார்கள். (உஸைர் இப்னு ஜாபிர் (ரலி), முஸ்லிம் 2542)
உவைஸ் அல்கரனி (ரஹ்) அவர்கள் தாபீயீன்களில் முதன்மையானவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இவர் வாழ்ந்தபோதும் நபி (ஸல்) அவர்களை சந்தித்ததில்லை. உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்கள் தாயாருக்கு பணிவிடை செய்வதில் மிகவும் போற்றத்தக்கவகையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதால் நபி (ஸல்) அவர்களை சந்திக்க இயலவில்லை. உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்களுக்கு கிடைத்த மாபெரும் சிறப்பு அந்தஸ்திற்கான காரணம், தாயாருக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டதாகும் என்பதாக அறிஞர்கள் விளக்கமளித்துள்ளார்கள். எனவே நாமும் பெற்றோருக்கு செய்யவேண்டிய கட்டாயக் கடமைகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு வெறுமனே ஒதுங்கிவிடாமல், அதற்கும் மேலான உபரியான பணிவிடைகளையும் செய்து, அவர்களின் கண்குளிர்ச்சியில் நாமும் பங்குபெற்று அல்லாஹ்سبحانه وتعالى வின் திருப்பொருத்தத்தை அடைய முயற்சிப்போமாக!.
-Abu Iman Sahwi-
Allahu Akbar
ReplyDelete