ஜனாதிபதித் தேர்தலை தற்போது, நடத்துவதற்கான தேவை ஏற்படவில்லை - கோட்டாபய
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்குப் பொதுத் தேர்தலே தீர்வாக அமையும். ஜனாதிபதித் தேர்தலை தற்போது நடத்துவதற்கான தேவை ஏற்படவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
கடந்த மூன்றரை வருடங்களாக அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தாமையே வவுணதீவில் பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவங்கள் போன்றவை இடம்பெறக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜோதிடக் கல்வியை பூர்த்திசெய்தவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாரஹேன்பிட்டி அபயராம விஹாரையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலொன்றே மக்களுக்குத் தற்பொழுது தேவையாகவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான தேவை தற்பொழுது ஏற்படவில்லை. நாடாளுமன்றத்திலேயே பிரச்சினை ஏற்பட்டிருப்பதால், ஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத் தேர்தலொன்றே நடத்தப்படவேண்டும் என்றார்.
நாடாளுமன்ற பிரேரணையொன்றின் ஊடாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டாலும், தேர்தலை நடத்த வேண்டும் என்றே கூறுகின்றனர். நாடாளுமன்றத்தில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை இந்தக் குழப்பங்களுக்குக் காரணமாகின. ஸ்திரமற்ற தன்மை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்குச் சென்ற வரலாறுகள் உள்ளன.
இவ்வாறான நிலையில் தேர்தலொன்றுக்காக மக்களிடம் செல்வதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
தனிப்பட்ட தேவைகளுக்காக அரசியலமைப்புக்களை மாற்றியமைக்கும் போதே இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. தற்பொழுதும் 19ஆவது திருத்தச்சட்ட மூலத்தை மாற்றச்சென்றே குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றார்.
ஒரு நாட்டின் பாதுகாப்பு குறித்து அதனை நிர்வகிக்கும் அரசாங்கம் அக்கறை செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும். நாம் ஆட்சிசெய்யும்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தியிருந்தோம்.
எனினும், கடந்த மூன்றரை வருடங்களாக கடந்த அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் அதிக அக்கறையோ கவனமோ செலுத்தவில்லை. இதனாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்றார்.
அத்துடன், இலங்கை இறைமை உள்ள நாடு என்பதால் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையினரை அழைக்கவேண்டிய தேவை எதுவும் இல்லையென்றும் தெரிவித்தார்.
Post a Comment