மைத்திரி கொலைச் சதி, 50 நாட்கள் ஆட்சி புரிந்தவர்களின் நாடகம் - ஜனாதிபதி வெட்கித் தலைகுனிவார்
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்ய எவரும் சதித் திட்டம் தீட்டவில்லை. இது குறுக்கு வழியில் வந்து 50 நாட்கள் மட்டும் ஆட்சி புரிந்தவர்களின் திட்டமிட்ட நாடகம்.”
இவ்வாறு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் இலங்கை செய்தியாளருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்,
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நான் சட்டம், ஒழுங்கு அமைச்சராக இருந்தபோது இந்த விவகாரம் குறித்து இரகசிய விசாரணை நடத்தியிருந்தேன். அதன்போது இந்த நாடகம் தொடர்பில் அறிந்தேன்.
ஆனால் சில மனநோயாளிகளின் வாக்குமூலங்களை நம்பி ஜனாதிபதி மைத்திரிபால புலம்புகின்றார். விரைவில் உண்மை அம்பலமாகும். அப்போது ஜனாதிபதி வெட்கித் தலைகுனிவார்.
தன் மீதான கொலைச் சதி தொடர்பில் தீவிர விசாரணை நடத்தவில்லை என்ற காரணத்தைக் காட்டி சட்டம், ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி தம்வசப்படுத்தி வைத்துள்ளார்.
போலியான இந்தக் கொலைச் சதியை ஜனாதிபதியும், அவரின் கரங்களைப் பிடித்திருக்கும் மகிந்த அணியினருமே பெரிதுபடுத்தினர்” என தெரிவித்துள்ளார்.
Post a Comment