Header Ads



ஆசிரியரின வீட்டில் திருடிய 4 மாணவர்கள் கைது - இறுதியாக ATM அட்டையை திருடியபோது சிக்கினர்

-பாறுக் ஷிஹான்-

தமக்கு கல்வி கற்பித்த   ஆசிரியரின் வீட்டில் திருடிய குற்றச்சாட்டில் நான்கு பிரபல பாடசாலை மாணவர்கள்  யாழ்.பொலிஸாரினால் நேற்று(26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நகரப்பகுதியில் உள்ள மிகப் பிரபலமான பாடசாலையில் கல்வி பயிலும் அரியாலை பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

யாழ் கச்சேரி நல்லூர் வீதியில் வசிக்கும் ஆசிரியர் இந்த மாணவர்களில் ஒருவருக்கு கற்பித்துள்ளார்.சிறிது காலத்தின் பின்னர் ஆசிரியரின் மகளுடன் அம்மாணவன்  நட்பை பேணி வந்ததுடன் அதை தொடர்ந்து  ஆசிரியரிடம் கதைப்பது போன்று பாசாங்கு காட்டி தினமும் அவர்களது வீட்டிற்கு மாணவனும் நண்பர்களும்  சென்று வந்துள்ளனர்.

இவ்வாறு சென்று வந்தவர்களில் மாணவர் ஒருவர் பல தடவைகள் வீட்டில் இருந்த மடிக் கணினி மற்றும் தொலைபேசி மற்றும் காசு உள்ளிட்ட பெறுமதி மிக்க பொருட்களை திருடியுள்ளார்.இவர்கள் வேறு யாரோ திருடுகிறார்கள் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். ஆனால் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு வங்கி ATM அட்டையை திருடிச் சென்றதுடன், இரண்டு வாரங்களுக்குள் புட் சிற்றி(food city) ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.

அதேநேரம், ATM திருடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த மாணவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.தனது நண்பர்களுடன் யாழ். நகரில் உள்ள விருந்தினர் விடுதிக்கு சென்று அங்கு மதுபானம் அருந்தி உணவுகள் உட்கொண்டு பெரும் ஆரவாரமாக இருந்ததுடன் புகைப்படங்களும் எடுத்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த யாழ்ப்பாணம் பொலிஸார் அவர்களை பின் தொடர்ந்து, வீட்டிற்குச் சென்று அவர்களது வீட்டில் வைத்து நால்வரையும் கைது செய்துள்ளனர்.இதேவேளை, கைது செய்யப்பட்ட நால்வரிடமும் யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.