Header Ads



3 முஸ்லிம் செயலாளர்களையாவது, நியமித்திருக்க வேண்டும், ஒரு முஸ்லிம் ஆளுரையாவது நியமியுங்கள்

இலங்கை முஸ்லிம்களில் கல்வி நிர்வாக சேவையில், தகைமை உடைய பலர் காணப்படுகின்றனர். அரச உயர் நியமனங்களில் இந்த விடயம் கவனத்திற் கொள்ளப்படுவதுடன், முஸ்லிம்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப அரச நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்ததாவது,

உயர் அரச நியமனங்களின் போது, தகைமை கொண்ட  முஸ்லிம்களை உள்ளீர்ப்புச் செய்யுமாறும் , மாகாண ஆளுநராக ஒரு  முஸ்லிம்மையாவது நியமிக்கும் படியும் நாம், ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருந்தோம்.

இதற்கான பதில் எமக்கு நேற்றுத்தான் 21ஆம் திகதி, வெள்ளிக்கிழமை கிடைத்தது. அதில் நழுவல் போக்கு காணப்பட்டது.

இலங்கை முஸ்லிம்களின் இனவிகிதாசாரப்படி நேற்று (21) நியமிக்கப்பட்ட 30 அமைச்சர்களுக்கான செயலாளர் பட்டியலில், ஆகக்குறைந்தது 3 முஸ்லிம்களாவது நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரேயொரு முஸ்லிம்மே, அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றுள்ளார். இது கவலைக்குரியது.

மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆளுநர்கள் மாற்றப்பட்டு அல்லது புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக அறிகிறோம். இதன்போதாவது ஒரு முஸ்லிம் ஆளுநரை நியமிக்க,  ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

No comments

Powered by Blogger.