277 கோடி ரூபா ஹெரோயின், கடத்தல்காரர்கள் இருவர் குறித்து தகவல்
டிங்கி படகொன்றில் நாட்டுக்குள் எடுத்துவரப்பட்டுக்கொண்டிருந்த போது கைப்பற்றப்பட்ட 277 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் சர்வதேச கடற்பரப்பில் வைத்து வர்த்தக கப்பல் ஒன்றிலிருந்து ட்ரோலர் படகுக்கு மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணையாளர்கள் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாகவும், அந்த சந்தேக நபருடன் சீஷெல்ஸ் மற்றும் பங்களாதேஷ் கடத்தற்காரர்கள் இருவர் தொலைபேசி ஊடாக தொடர்பிலிருந்து இக்கடத்தலை முன்னெடுக்க உறுதுணையாக இருந்துள்ளமை தொடர்பிலும் அந்த விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
டிங்கிப் படகுடன் கடத்தல்காரர்கள் இருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவ்வாறு கைதான இருவரில் ஒருவரின் சகோதரரான பிரதான சந்தேக நபர் கடந்த வெள்ளியன்று கைது செய்யப்பட்டிருந்தார்.
பேருவளை கொடல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதான தினயாதுர திலீப் சுசந்த மற்றும் 34 வயதான பேருவளை, மருதானை பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் றிஸ்வி மொஹம்மட் பர்ஸான் ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், வெள்ளியன்று எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவில் வைத்து சுசந்தவின் சகோதரரான சமந்த டி சில்வா என்பவர் கைது செய்யப்பட்டார். எட்டியாந்தோட்டையில் கைது செய்யப்ப்ட்ட நபரின் ட்ரோலர் படகிலேயே ஹெரோயின் ஆழ்கடலிலிலிருந்து எடுத்து வரப்பட்டு டிங்கிப் படகுக்கு மாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு கூறியது. இந்நிலையில் அந்த ட்ரோலர் படகு உரிமையாளரிடம் விசாரித்த போது, சீஷெல்ஸ் மற்றும் பங்களாதேஷ் கடத்தற்காரர்கள் இந்த போதைப் பொருளை அனுப்பி வைத்ததாகவும், அவர்கள் தொலைபேசியில் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.
சர்வதேச கடற்பரப்புக்கு சென்று வர்த்தக கப்பலொன்றிலிருந்து இந்த ஹெரோயினை பெற்று வந்ததாக அவர் கூறியுள்ளதுடன் அங்கு பொருளைப்பெற மேலும் ஐந்து பேர் உடன் வந்ததாகவும் அவர்கள் பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறியுள்ளார். அந்த ஐவரும் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருளை இலங்கை கடல் எல்லையில் வைத்து டிங்கிப் படகுக்கு மாற்றியதாகவும், கரைக்கு கொண்டுவந்ததும் அதனைபெற ஒருவர் தொலைபேசியில் அழைப்பார் என சீஷெல் மற்றும் பங்களாதேஷ் கடத்தற்காரர்கள் கூறியதாகவும் தாம் சிக்கிக்கொண்டதால் அந்த அழைப்பு தனக்கு வரவில்லை எனவும் பிரதான சந்தேகநபர் பொலிஸ் விசாரணையில் கூறியுள்ளார்.
பேருவளை மற்றும் பலப்பிட்டியவிற்கு இடைப்பட்ட கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலானது நாட்டிலிருந்து தப்பிச்சென்ற பிரபல பாதாள உலகத் தலைவன் கிம்புலாஎல குணா என்பவரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.
அவர்களை கைதுசெய்ய இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலும் தெரிவித்தது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப், பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ மெதவத்த ஆகியோரின் மேற்பார்வையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமிந்த தனபாலவின் நேரடி கட்டுப்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli
Post a Comment