"ஒக்டோபர் 26 வெள்ளி அரசியல் சதி, அரங்கேற்றப்பட இதுவும் ஒரு காரணம்"
நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மூலம் ஏற்பட்ட எழுச்சி காரணமாக மஹிந்த தரப்பினர் கடும் அச்சம் அடைத்துள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்த கிராம புரட்சி அபிவிருத்தித் திட்டம் சம்பந்தமாக ஏற்பட்ட அச்சம் காரணமாகவே ஒக்டோபர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அரசியல் சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சூழ்ச்சி அரசாங்கத்தின் நிதியமைச்சராக பதவியேற்ற மகிந்த ராஜபக்ச கிராம புரட்சி(கம்பெரலிய) அபிவிருத்தித் திட்டத்தை நிறுத்த அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார்.
கிராம புரட்சி அபிவிருத்தித் திட்டம் ஊடாக கிராமிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் பாரிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். இதனை கண்டு மஹிந்த ராஜபக்ச கடும் அச்சத்திற்கு உள்ளானார்.
கிராம புரட்சித் திட்டம் ஒரு வருடம் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின் தமக்கு பெரும் தோல்வி ஏற்பட்டிருக்கும் என மஹிந்த ராஜபக்ச பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார். இந்த திட்டத்தை நிறுத்த எப்படியாவது அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஒக்டோபர் 26 ஆம் திகதி அரசியல் சதித்திட்டத்தை அரங்கேற்றினர்.
அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் கிராம புரட்சி வேலைத்திட்டத்திற்காக சகல தொகுதிகளுக்கும் தலா 300 மில்லியன் ரூபாய் வழங்கப்படும். எமது அரசாங்கம் ஆரம்பித்த எந்த வேலைத்திட்டத்தையும் எக்காரணம் கொண்டு இடையில் நிறுத்த மாட்டோம்.
கடந்த காலத்தை விட மிக வேகமாக இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment