இன்றைய நெருக்கடி, பெரும் இரத்தக்களரியாக மாறக்கூடிய பேராபத்து
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விகாரைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவர் பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார் என பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட தெரிவித்துள்ளார்.
வணக்கத்துக்குரிய மாதுளுவாவே சோபித தேரரின் நினைவு தின நிகழ்வு நேற்று மாலைகொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
சகல குழுக்களினதும் 'தார்மீக தலையீடு' ஒன்றே இன்றைய தருணத்தில் எமக்கு தேவை. தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் கட்சிகளினாலும், குழுக்களினாலும் மாத்திரம் தீர்வை கண்டுவிட முடியாது.
. மாதுளுவாவே சோபித தேரோ தார்மீகத் தலையீடுகளை செய்யக் கூடியதாக இருந்த சிவில் சமூக இயக்கமொன்றின் செயற்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்திருந்தார்.
அதேபோன்ற அணுகுமுறையே இன்று முன்னென்றும் இல்லாத வகையிலான அரசியல் நெருக்கடிக்குள் முழு நாடுமே அகப்பட்டிருக்கும் ஒரு நேரத்தில் எமக்குத் தேவைப்படுகின்றது.
அத்தகைய அணுகுமுறை இல்லாத பட்சத்தில் இன்றைய நெருக்கடி பெரும் இரத்தக்களரியாக மாறக்கூடிய பேராபத்து இருக்கின்றது.
எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்துக்கும், நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையே கடுமையான மோதல் ஒன்று ஏற்படும் என்றே எனக்குத் தெரிகின்றது.
இணக்கத்தீர்வு ஒன்று இல்லாத பட்சத்தில் தற்போதைய நெருக்கடி வன்முறைகளில் போய் முடியலாம். நாடாளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையிலான பலப்பரீட்சை பரந்தளவிலான பாதக விளைவுகளைக் கொண்டுவரக் கூடும்.
சகலரும் ஒன்றிணைந்து நெருக்கடியைக் கட்டுப்படுத்த உதவ வேண்டியது எமது பொறுப்பாகும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment