''மக்காவில் ஒன்றுபட்டவர்கள், இலங்கையில் பிரிந்துவிடக்கூடாது"
-முஸ்லிம் கட்சிகளின், புரிந்துணர்வு வரவேற்கத்தக்கது-
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் அரசியல் நெருக்கடி மேலும் ஒரு கட்டத்தை அடைந்துள்ளது. ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து பல தரப்புகள் உயர் நீதிமன்றத்தை நாடவுள்ள நிலையில், மறுபுறம் அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தம்மைத் தயார்படுத்தத் தொடங்கியுள்ளன.
இந் நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றை நாடத் தீர்மானித்துள்ளன. நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் பொறுப்பு சகல பிரஜைகளுக்கும் உண்டு என்ற வகையில் இவ்விரு முஸ்லிம் கட்சிகளும் இது விடயத்தில் நீதிமன்றை நாடுவது வரவேற்கத்தக்கதாகும்.
இதற்கிடையில் கடந்த வாரம் உம்ரா கடமைக்காக இவ்விரு கட்சிகளையும் சேர்ந்த 12 முஸ்லிம் எம்.பி.க்களும் சவூதி அரேபியாவின் மக்கா நகருக்குச் சென்றிருந்தனர். இதன்போது இரு கட்சிகளினதும் தலைவர்களது தலைமையில் மேற்படி 12 பேரும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது தற்போதைய நெருக்கடி நிலைமையில் முஸ்லிம் சமூகம் சார்ந்து எவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வது? இரு கட்சிகளும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இது குறித்து நேற்றைய தினம் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்ட கூட்டத்திலும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரஸ்தாபித்துள்ளார். ''உம்ரா கடமையை முடித்துவிட்டு நானும், றிஷாத் பதியுதீனும் மக்காவில் வைத்து தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக கூட்டாகவும் தனியாகவும் சந்தித்து பேசினோம். இப்போதையே சூழ்நிலையில் மக்களின் அபிலைாஷைகளை மதித்து, ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் மைத்திரி – மஹிந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதில்லை என்ற தீர்மானத்தை ஒருமித்து எடுத்துள்ளோம். தற்போதைய ஒற்றுமையில் தொடர்ந்து பயணிக்கவேண்டும் என்பதில் றிஷாத் பதியுதீன் ஆர்வமாக இருக்கிறார். இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவதால் ஏற்படும் சாதக, பாதங்கள் பற்றி விரிவாக ஆராயவேண்டும்.'' என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ''இரு கட்சிகளுக்கும் இடையில் இருக்கின்ற சந்தேகங்கள், எடுகோள்களின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து செயற்படுவதால் கட்சி சோரம்போய்விட்டதா என்ற சிலரின் அச்சம் நியாயமானது. ஆனால், நாங்கள் முதலில் எங்களுக்குள் நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் இருக்கவேண்டும். அத்துடன், இரு கட்சிகளும் ஒருமித்து செயற்படுவது தொடர்பாக மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையில் முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மையான வாக்குகளைக் கொண்ட கட்சிகள் என்ற வகையிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்ற வகையிலும் இரு தரப்பினரும் இவ்வாறான நெருக்கடியான கால கட்டத்தில் சமூகம் சார்ந்தும் புரிந்துணர்வுடனும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முன்வந்தமை முஸ்லிம்கள் மத்தியிலும் ஏனைய சமூகங்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு மேலும் தொடர வேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாகும். எதிர்நோக்கியுள்ள பொதுத் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் இணைந்து செயற்பட முடியுமாக இருந்தால் அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பாக அமையும். அத்துடன் சமூகம்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளையும் பெற முடியுமாகவிருக்கும்.
எனினும் அதில் சாதக பாதகங்களும் இல்லாமல் இல்லை. ''மக்காவில் ஒன்றுபட்டவர்கள் இலங்கையில் வந்து பிரிந்துவிடுவார்கள். இரு கட்சிகளும் ஒன்றுபட அதன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் விடமாட்டர்கள்'' எனும் கருத்தும் நிலவுகிறது. இரு கட்சிகளின் தலைவர்கள், உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இதய சுத்தியுடன் செயற்பட்டால், ஏனைய முஸ்லிம் தரப்புகளையும் இணைத்து ஒரு முஸ்லிம் கூட்டணியை உருவாக்கி சமூகத்தை அரசியல் ரீதியாக ஒற்றுமைப்படுத்த முடியும். இது குறித்து சகலரும் சாதகமாகவும் சமூக நலன்கருதியும் சிந்திப்பார்கள் என நம்புகிறோம்.
vidivelli
This comment has been removed by the author.
ReplyDeleteஹக்கீம் அவர்கள் ஒற்றுமையை பற்றி பேசுவாராக இருந்தால் அவருக்கு ஏதோ சாதகம் இருக்கின்றது .ரிஷாத் அவர்கள் சற்று அவதானமாக இருக்க வேண்டும்
ReplyDeleteUMRA pilgrimage has been used by both politicians to keep their MPs away from taking up ministries from MR. thats it.
ReplyDelete