Header Ads



"விவாகரத்துச் செய்யாது, புதிய திருமணத்தை செய்துக்கொண்டது போல"

நாட்டின் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் சட்டரீதியான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கே இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை பலம் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டமை சட்டத்திற்கு விரோதமானது.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், நாட்டின் சட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமாக நியமிக்கப்பட்ட சட்டவிரோதமான பிரதமரே நாட்டில் இருக்கின்றார். சட்டவிரோதமான அமைச்சரவை நாட்டில் இருக்கின்றது.

இதனால், நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரச அதிகாரிகள் இந்த சட்டவிரோமான பிரதமர் மற்றும் அமைச்சரவையின் உத்தரவுகளை செயற்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

நாட்டு மக்களின் பணத்தில் சம்பளம் பெறும் சட்டத்தை பாதுகாக்கும் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் சட்டரீதியாக தெரிவு செய்யப்பட்ட எமது பிரதமர் மற்றும் நாங்கள் வழங்கும் ஆலோசனைக்கு அமைய செயற்பட வேண்டும். சட்டத்தை பாதுகாக்கும் அதிகாரிகள் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

பொலிஸார் சட்டவிரோதமான உத்தரவுகளை அமுல்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றோம்.

சட்டவிரோதமான அரசாங்கம் எமது அமைச்சரவையின் பாதுகாப்பை முற்றாக நீக்கியுள்ளது. பிரதமரின் பாதுகாப்பையும் நீக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமான செயல்களை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் பிரதமர் விக்ரமசிங்கவை நீக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை.

இதனால், நாட்டின் சட்டரீதியான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே. இது விவாகரத்துச் செய்யாது புதிய திருமணத்தை செய்துக்கொண்ட போலான நடவடிக்கை எனவும் ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.