Header Ads



இன்றைக்குள் அலரி மாளிகையிலிருந்து, ரணிலை வெளியேற்ற திட்டம் - அஜித் பி. பெரேரா

பாராளுமன்றத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி கூட்டவுள்ளமை தொடர்பில் சபாநாயகரின் நீதியான இச் செயற்பாட்டிற்கு நாம் மதிப்பளித்து வரவேற்பதுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பேசிய அஜித் பி பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி கூட்டவுள்ளமை தொடர்பில் சபாநாயகரின் நீதியான இச் செயற்பாட்டிற்கு நாம் மதிப்பளித்து வரவேற்பதுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

ஏதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றைக் கூட்டி சுமுகமான தீர்வை பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கும் போது குறுக்கு வழியில் திட்டம் தீட்டுபவர்களுக்கு ஏன் திங்கட்கிழமை வரையில் பொறுத்துக்கொள்ள முடியாது.

அத்தோடு அரச அதிகாரிகளுக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் அதிகாரமில்லாத பிரதமரும் அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் வழங்குகின்ற கட்டளைகளை பின்பற்றி நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளை செய்ய வேண்டாம்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பிற்கு முரணாகவும் சட்டவிரோதமாகவும் மக்களின் ஜனாநாயக விருப்பத்திற்கு மாறாகவும் பாராளுமன்ற பெரும்பான்மைக்கு முரணாகவும் செயற்பட்டார்.

ஜனாதிபதியின் சட்டவிரோத செயற்பாட்டிற்கு இந் நாட்டு மக்கள் இன மத பேதமின்றி இணைந்து இன்றுறோடு 8 ஆவது நாளாகவும் அலரி மாளிகையில் கூடியிருந்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

தற்போதும் இந் நாட்டின் அதிகாரம் மிக்கவர் பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஆவார்.

அதன்படி ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையில் தொடர்ந்தும் இருந்து தனது அரசியல் கடமைகளை மேற்கொண்டுசெல்லும் உரிமை அவரிடமுள்ளது.

எமக்கு கிடைத்த தகவலின் படி தன்னை நாட்டின் பிரதமர் என சொல்லிக்கொண்டு திரியும் மஹிந்த ராஜபக்ஷவும் அவரால் நியமிக்கப்பட்ட சில அதிகாரிகளும் ஒன்றுகூடி இன்றைய நாளுக்குள் அலரி மாளிகையிலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் இங்கு கூடியிருக்கும் மக்களையும் ஏதாவது ஒரு வகையில் வெளியேற்ற திட்டம் தீட்டுவதாக அறியமுடிகின்றது. 

அலரி மாளிகையிலிருந்து பிரதமரையோ அல்லது அவருக்கு ஆதரவு தெரிவிக்க கூடியிருக்கும் மக்களையோ வெளியேற்றும் நடவடிக்கையில் இராணுவமோ எந்த அதிகாரியோ செயற்பட்டால் அது சட்டத்திற்கு முரணானது.

அவ்வாறு திட்டம் தீட்டும் அதிகாரமில்லாதவர்களுக்கு நாங்கள் கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் சட்டத்திற்குக முரணாக நடந்து கொள்வார்களாயின் மக்கள் எடுக்கும் விபரீத நடவடிக்கைகளுக்கு பொறுப்பு சொல்ல நேரிடும்.

மேலும் திலங்க சுமதிபால இன்று ஊடகங்களுக்கு பொய்யான செய்தியை பரப்பியிருந்தார். அதாவது சபாநாயகர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரை ஏற்றுக்கொள்வதாக, அச் செய்தி உண்மைக்கு புறம்பானது.

இதனால் ஊடகங்களுக்கு நாம் தெரிவிப்பது என்னவென்றால் திலங்க சுமதிபால ஊடகங்களுக்கு ஏதாவது கருத்து தெரிவிப்பாராயின் அச் செய்தியின் உண்மைத்தன்மையை ஒரு தடவைக்கு பல தடைவ சரிபார்த்து விட்டு ஊடகங்களில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.