Header Ads



கெஹலியவிடம் இருந்தவை, பிடுங்கப்பட்டு தயாசிறியிடம் ஒப்படைப்பு - அவசர வர்த்தமானியை வெளியிட்ட மைத்திரி

மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் வசம் இருந்த அரச ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும், மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமான அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அரச ஊடகங்கள் அனைத்தும், திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் கொண்டு வரும், சிறப்பு அரசிதழ் அறிவிப்பு நேற்று மாலை சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரையில்,  கூட்டு எதிரணியைச் சேர்ந்தவரான, ஊடகத்துறை இராஜாங்க அமைச்சரான கெஹலிய ரம்புக்வெலவின் கட்டுப்பாட்டிலேயே, இருந்தன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து, இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் அனைவரும் பதவியிழந்துள்ளனர்.

இதனால் கெஹலிய ரம்புக்வெல அரச ஊடகங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒரு தொழில்நுட்பச் சிக்கல் என்று கூறிய கெஹலிய ரம்புக்வெல, அதுபற்றி விளக்கமளிக்கவில்லை.

அதேவேளை, அரச தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட அனைத்து அரசாங்க ஊடக நிறுவனங்களும், அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர்  நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.