பாராளுமன்றத்தை ஜனாதிபதி, எப்படி கலைத்தார்...?
இலங்கை அரசியலில் யாரும் எதிர்பார்க்காத மாற்றங்கள் அடுத்தடுத்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரவோடு இரவாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம், 8 ஆவது நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டுள்ளது.
19ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைய நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்பட்ட போதும், நேற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான செய்தியால் பலரும் அதிர்ச்சியடைந்திருந்தனர்.
ஜனாதிபதி எவ்வாறு நாடாளுமன்றத்தை கலைத்தார் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் 4 1/2 வருடங்களுக்கு முன் நாடாளுமன்றம் கலைக்கப்பட முடியாது.
ஆனாலும், அரசியலமைப்பின் 33 (2) (அ) பிரிவின் கீழும், அரசியலமைப்பின் இரண்டாவது பிரிவின், 62ஆவது சரத்தின் கீழும், 1981 முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரிவு 10 இன் கீழும், தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளார்.
நேற்று இரவு 8.30 மணிக்கு இது குறித்த வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கைச்சாத்திட்டு குறித்த வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சக கூட்டத்தாபனத்தால் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.
அதில், “இலஙகை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரை (2) (இ) உப உறுப்புரையின் மற்றும் அரசியலமைப்பின் 62ஆவது உறுப்புரையின் (2) உப உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்க வேண்டியுள்ள அரசியலமைப்பின் 70 ஆவது உறுப்புரையின் (5) ஆவது உப உறுப்புரையின் கீழ் எனக்குரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் வண்ணம், மற்றும் 1981ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10 ஆவது பிரிவின், ஏற்பாடுகளுக்கு அமைவாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி ஆகிய நான் இப்பிரகடணத்தின் மூலம்.....” எனக் குறிப்பிட்டு நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தலும், 17ஆம் திகதி முதல் நாடாளுமன்ற அமர்வும் நடைபெறும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்ளாது பொது தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எலி அறுக்கும் சுமக்காது.
ReplyDelete