"ரணிலை உடனடியாக கைதுசெய்ய மகிந்த, மைத்திரியிடம் கோரிக்கை
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச சொத்துக்களை முறைகேடான விதத்தில் பயன்படுத்தி வருகின்றமையினால் ஜனாதிபதியும், பிரதமரும் அவரை உடனடியாக கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
அட்டன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவை இந்த நாட்டின் பிரதமராக நியமித்து "மஹிந்த ராஜபக்ஷ பிரதமர்" என முழு நாட்டுக்கும் வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவற்றைப் பொருட்படுத்தாது அலரிமாளிகையை தமது கைக்குள் வைத்துக்கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து அரச சொத்துக்கள் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்.
எனவே அவரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொள்கிறேன்.
இன்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் கொலை செய்வதற்கான திட்டங்களை தீட்டியுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.
அதே நேரம் மத்திய வங்கி கொள்ளையை ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கியவர்களை செய்துள்ளார்கள். அத்தோடு ஊழியர் சேமலாப நிதி மோசடி தொடர்பாகவும் அவருக்கு நெருக்கமானவர்களே செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பல்வேறு குற்றச் செயல்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் உறுதுணையாக இருந்ததால் அவரை உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் என்ற வகையில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது உருவாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் வடக்கு மக்களின் உரிமையையும் அபிவிருத்திகளையும் வென்றெடுக்க முடியும்.
எனவே சம்பந்தன் இந்த நிலைமையை கருத்தில் கொண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வரவேண்டு மென கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment