சவூதி அரேபியாவின் முதலாவது, அணு உலைத் திட்டம் ஆரம்பம்
சவூதி அரேபியாவின் பட்டத்திற்குரிய இளவரசரினால் அந் நாட்டின் முதலாவது அணு ஆராய்ச்சி உலைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக சவூதி அரேபிய ஊடக முகவரகம் தெரிவித்துள்ளது.
எம்.பீ.எஸ். என அறியப்படும் சவூதி அரேபியாவின் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானினால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அணு சக்தி, நீர் சுத்திகரிப்பு, பாரம்பரிய மருத்துவம் மற்றும் விமான உற்பத்திக் கைத்தொழில் போன்ற ஏழு முக்கிய திட்டங்கள் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்திற்கான மன்னர் அப்துல் அஸீஸ் நகரத்திற்கு கடந்த திங்கட்கிழமை மேற்கொண்ட விஜயத்தின்போது ஆரம்பித்து வைக்கப்பட்டன.
ஆரம்பித்து வைக்கப்பட்ட திட்டங்களுள் அணு ஆராய்ச்சி உலைத் திட்டமும் விமான கட்டமைப்பு அபிவிருத்திக்கான மத்திய நிலையமும் மிக முக்கியமான திட்டங்களாகும்.
ஈரான் தனது கொள்கையில் தொடர்ந்து பயணிக்குமானால் அணுவாயுதங்களை உற்பத்தி செய்வதற்கு தனது நாடும் தயாராக இருப்பதாக கடந்த மார்ச் மாதம் சவூதி அரேபியாவின் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் தெரிவித்திருந்தார்.
அணுவாயுதங்களை வைத்திருக்க வேண்டிய தேவை சவூதி அரேபியாவுக்கு இல்லை எனினும், ஈரான் அணுவாயுதங்களை உற்பத்தி செய்தால் நாமும் அதற்கேற்ற நடவடிக்கைகளை மிக விரைவில் மேற்கொள்வோம் என நேர்காணல் ஒன்றின்போது இளவரசர் மொஹமட் பின் சல்மான் தெரிவித்திருந்தார்.
2015 ஆம் ஆண்டு ஈரானுடன் செய்து கொண்ட முக்கியத்துவம்வாய்ந்த உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொண்ட அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை தொடக்கம் ஈரானுக்கு எதிரான எண்ணெய் மற்றும் பொருளாதாரத் தடைகளை மீள விதித்தது.
சவூதி அரேபிய அரசாங்கம் தனது சக்தி தேவைகளை மேம்படுத்துவதற்காக இரண்டு அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுகளைக் கடந்த வருடம் கோரியிருந்ததாக சர்வதேச அணுசக்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபிய அரசாங்கம் 2032 ஆம் ஆண்டளவில் 17.6 ஜிகாவோட்ஸ் அணுசக்தி கொள்ளளவினை கொண்டிருக்க எதிர்பார்த்துள்ளது. இந்த அளவு சுமார் 17 அணு உலைகளுக்கு சமமானதாகும். அது உலகிலேயே மிகப் பெரும் திட்டமாக அமையும்.
உள்நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மசகு எண்ணெயின் அளவினைக் குறைத்து அவற்றுள் பெரும்பாலானவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு சவூதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுமானால் அணுசக்தித் திட்டத்தை ஆரம்பித்த இரண்டாவது வளைகுடா நாடாக சவூதி அரேபியா மாறும்.
தென்கொரியாவின் வடிவமைப்பில் உருவான நான்கு அணு உலைகளை ஏலவே ஐக்கிய அரபு அமீரகம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment