Header Ads



தன்னைக் கொலைசெய்ய "றோ" திட்டமிட்டதாக ஜனாதிபதி கூறினார் - அம்பலப்படுத்தும் ஹரீன்

இந்திய உளவுப் பிரிவினர் தம்மை படுகொலை செய்ய திட்டமிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

அலரி மாளிகையில் இன்று -08-  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நான் இதுவரை காலமும் வாயை மூடிக் கொண்டிருந்தேன், இனி அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை.

அமைச்சரவைக் கூட்டத்தில் ஓர் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டது, ஜனாதிபதி சில கருத்துக்களை முன்வைத்தார். அதன் பின்னரே வங்கிகளின் தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.

பின்னர் இந்திய ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது தாம் அவ்வாறு இந்திய உளவுப் பிரிவு பற்றி கூறவில்லை என ஜனாதிபதி கூறியிருந்தார்.

உண்மைதான் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு. அதனை ஒப்புக்கொள்கின்றேன். தரம் பற்றிய பிரச்சினை உள்ளது, ஜனாதிபதி தரமற்றவர், பிரதமர் தரமானவர்.

இந்திய ஊடகமொன்று பிரதமரிடம் அமைச்சரவையில் றோ பற்றி குறிப்பிடப்பட்டதா என கேள்வி எழுப்புகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதல் தடவையாக சற்றே நெளிவதனை நார்ன் பார்த்தேன், அந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியை பிரதமர் காட்டிக்கொடுக்கவில்லை.

ஆறு அடி மண்ணில் புதைக்கப் போகின்றார்கள் எனக் கூறிய தரப்புடன் சென்று இணைந்து கொள்வாராயின் அவரது தரம் பற்றி பேச வேண்டியதில்லை. அட்டையைப் பிடித்து மெத்தையில் வைக்க முடியாது.

றோ பற்றி ஜனாதிபதி என்ன கூறினார் என்பதனை மாற்றி அண்மையில் மகிந்த அமரவீர கூறியிருந்தார். எனினும் எந்தவொரு இடத்திலும் சத்தியம் வைத்து அங்கு என்ன பேப்பட்டது என்பதனை கூற என்னால் முடியும்.

எப்படிச் சொன்னார், எப்படி அழுதார், அழுததன் பின்னர், துறைமுகத்தின் ஒரு பகுதியை அபிவிருத்தி செய்ய இந்தியாவிற்கு சந்தர்ப்பம் வழங்குவது குறித்த பிரச்சினையின் போது எவ்வாறு வாக்கு வாதம் ஏற்பட்டது.

இனி இவ்வாறு வாயை மூடிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. உண்மை விடயங்களை வெளிப்படுத்துவதற்கு நாம் அஞ்சப் போவதில்லை.

ஜனாதிபதி றோ பற்றி கூறினாரா என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்திய ஊடகம் கேள்வி எழுப்பிய போது அந்த நேரத்தில் ஏற்பட்ட கோபத்தினால் அவ்வாறு கூறியிருக்கலாம் என்றே பிரதமர் கூறியிருந்தார்.

அந்த சந்தர்ப்பத்திலும் பிரதமர், ஜனாதிபதியை காட்டிக் கொடுக்கவில்லை. ஜனாதிபதியின் அறிவின்மை வெளிப்படையாக நாட்டு மக்களுக்கு புலப்படுத்தியுள்ளார்.

றோ பற்றி கேள்வி எழுப்பிய போது தேவை என்றால் ஜனாதிபதியை பிரதமருக்கு காட்டிக் கொடுத்திருக்கலாம் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை, அதுவே பிரதமரின் தரமாகும் என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

றோ உளவுப் பிரிவு பற்றி ஜனாதிபதி அமைச்சரவையில் கூறிய விவகாரம் பற்றிய தகவல்களை தனியான ஓர் ஊடக சந்திப்பில் எதிர்காலத்தில் முழு விபரங்களையும் அம்பலப்படுத்துவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.