பாராளுமன்றம் கலைக்கப்படுமா...?
பாராளுமன்ற பெரும்பான்மை யாருக்கு இருக்கிறது என்ற நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் இலங்கை அரசியல் கள நிலவரத்தில், பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத்தேர்தலுக்கு செல்வதே மஹிந்த அணியின் முக்கிய இலக்காக இருக்கிறது.
பாராளுமன்றம் நான்கரை வருடம் பூர்த்தியாகிய பின்னர் அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவே பாராளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்கமுடியும் என்று 19 ஆவது அரசியல் திருத்தம் ஊடாக பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரம் வரிதாகக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற தொனியில் மஹிந்த ராஜபக்ச, கோதாபய ராஜபக்ச உட்பட பலர் முன்னணி உறுப்பினர்கள் தொடர்ந்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசியலமைப்பின் எந்த சரத்துக்கு அமைவாக இந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்று பலர் மனதிலும் கேள்விகள் எழுந்திருந்தன.
இந்த நிலையில் கருத்து தெரிவித்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசரும் மஹிந்த அணிக்கு மிகவும் நெருக்கமானவருமான சரத் என் சில்வா அவர்கள் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலையில், அரசியலமைப்பின் 33 (2) C உறுப்புரிமைக்கு அமைய ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி , ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் 70ஆவது ஷரத்தின்படி பாராளுமன்றம் நான்கரை வருடங்களின் பின்னரே கலைக்கப்பட முடியும் என்று திருத்தப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் வேண்டும்.
அத்துடன், ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை உடையவர் என்று கூறும் 33வது ஷரத்து ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டும், ஒத்திவைக்கும் மற்றும் கலைக்கும் அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
19 வது திருத்தச் சட்டத்தின் கீழ் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் 2002 இல் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி கலைக்க முடியாது என்ற வகையில் அறிமுகப்படுத்திய திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. பாராளுமன்ற கலைப்பு என்பது எப்போதுமே நிறைவேற்று அதிகாரமாக இருந்துள்ளது. அதனை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி இல்லாமலாக்க முடியாது.
எனவே 33வது ஷரத்து தற்போதைய 19வது திருத்த சட்டத்தில் உள்ளடக்க வேண்டியதாயிற்று. அல்லாவிட்டால் 19ஆவது திருத்த சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்பட்டிருக்கும்.
ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இருக்கிறது. அது தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே அதனை பயன்படுத்த வேண்டும். அது மக்களுக்கும் நாட்டுக்கும் தேவைப்படும் போது, ஸ்திரமற்ற நிலையில் உள்ள பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் ஊடகமொன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் முன்னாள் பிரதம நீதியரசர் கூறியுள்ளார்.
Post a Comment